சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ம் தேதியிலிருந்து நடைபெற உள்ள சென்னை புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகத் தென்னிந்தியப் புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வயிரவன் மற்றும் செயலாளர் முருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
45வது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி ஜனவரி 6ம் தேதி மாலை 6 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். உடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.
மேலும் கடந்த வருடம் போன்றே 800 அரங்குகள் அமைத்து இந்த புத்தக காட்சி நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுக்கட்டனம் இலவசம். பொதுமக்களுக்கு மட்டும் ரூ. 10 கட்டணம்.
புத்தகக் கண்காட்சி வேலை நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றி புத்தகக் கண்காட்சி நடைபெறும்.
இந்த புத்தக் கண்காட்சி ஜனவரி 6ந்தேதி தொடங்கி 23ம் தேதி வைர நடைபெறுகிறது. 800 அரங்குகளில் கலை, இலக்கியம், அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், வரலாறு என பல துறைகளின் புத்தகங்களும் இடம்பெறுகின்றன.
மேலும், இந்த கண்காட்சியில் 2022 ஆம் ஆண்டிற்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், சிறந்த எழுத்தாளர்களுக்குப் பரிசையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.