தமிழ்நாடு

“அவர் சிறப்பா வேலை செய்றாரு.. பாராட்டலைன்னாலும் பரவாயில்ல.. இப்படிச் செய்யாதீங்க” : ஐகோர்ட் கிளை கருத்து!

“ஒரு முதலமைச்சரால் எவ்வளவு முடியுமோ அதைவிட அதிகமாகவே தமிழக முதலமைச்சர் பணியாற்றி வருகிறார். அவரை பாராட்டாவிட்டாலும் அவதூறாகப் பேசுவதைத் தவிர்க்கலாம்.” என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து.

“அவர் சிறப்பா வேலை செய்றாரு.. பாராட்டலைன்னாலும் பரவாயில்ல.. இப்படிச் செய்யாதீங்க” : ஐகோர்ட் கிளை கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“ஒரு முதலமைச்சரால் எவ்வளவு முடியுமோ அதைவிட அதிகமாகவே தமிழக முதலமைச்சர் பணியாற்றி வருகிறார். அவரை பாராட்டாவிட்டாலும் அவதூறாகப் பேசுவதைத் தவிர்க்கலாம்.” என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சாட்டை துரைமுருகன் என்பவர் யூடியூபில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசி வீடியோ வெளியிட்டார்.

இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்பமாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்தது.

இந்நிலையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி உத்தரவாதத்தை மீறி தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசி வருகிறார். இதன்பேரில் மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், "மனுதாரர் அரசியல் தலைவர்களை அவதூறாகப் பேச மாட்டேன் என நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்த நிலையில் முதலமைச்சரைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு அளித்த உறுதியை மீறும் வகையில் அவர் செயல்பட்டதால் அவரது ஜாமினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். நீதிமன்றத்திற்கு உறுதியளித்த பின்னர் சாட்டை துரைமுருகன் மீது 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, ஒரு முதலமைச்சரால் எவ்வளவு முடியுமோ அதைவிட அதிகமாகவே தமிழக முதலமைச்சர் வேலை பார்த்து வருகிறார். அவரை பாராட்டாவிட்டாலும் இதுபோன்ற செயல்களை தவிர்க்கலாம் என குறிப்பிட்டு, சாட்டை துரைமுருகன் பேசிய விபரங்களை வழங்குமாறு குறிப்பிட்டார்.

அதற்கு அரசு தரப்பில் CD-யாக தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதனை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறும் வகையில் செயல்பட்டிருந்தால், அவரது ஜாமின் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

banner

Related Stories

Related Stories