தமிழ்நாடு

உழைக்கும் வர்க்கத்தின் அறச்சீற்றம்.. ‘Money Heist’ தொடரின் திரை மறைவில் இருக்கும் அரசியல் என்ன ?

கடந்த டிசம்பர் 3ம் தேதி ஐந்தாம் சீசனின் இரண்டாம் பகுதி வெளியானது. எல்லா சீசன்களுக்கும் இருந்த வரவேற்பு இன்னும் கூடுதலாகவே கிடைத்து ஐந்தாம் சீசனின் இரண்டாம் பகுதி கொண்டாடப்பட்டு வருகிறது.

உழைக்கும் வர்க்கத்தின் அறச்சீற்றம்.. ‘Money Heist’ தொடரின் திரை மறைவில் இருக்கும் அரசியல் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

What a finale!

Money Heist என்கிற நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸ் முடிவுக்கு வந்தது.

கோவிட் தொற்று அறிமுகமாகி உலகை முடக்கி வீட்டுக்குள் உட்கார வைத்திருந்தபோதுதான் Moneyheist தொடர் பற்றி பரவலாக பேச்சு வரத் தொடங்கியது. OTT தளங்களில் படங்களை தேட வேண்டிய கட்டாயம் எழுந்தபோது தட்டுப்பட்டதுதான் மணிஹீஸ்ட் தொடர். ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் சிலரைப் பற்றிய கதை. எத்தனையோ வங்கிக் கதைகள் பார்த்திருப்போம். அவை எல்லாவற்றையும் தாண்டி மணிஹீஸ்ட் உலகெங்கும் கொண்டாடப்படவென சில பிரத்யேகக் காரணங்கள் இருக்கின்றன. பிற வங்கிக் கொள்ளைத் தொடர்கள்/படங்கள் போலல்லாமல் மணிஹீஸ்ட்டுக்கென ஒரு அரசியல் இருந்தது. வர்க்க அரசியல்!

கொள்ளையடிப்பவர்கள் சிவப்பு அங்கி அணிந்திருந்தனர். அவர்கள் அணிந்திருக்கும் முகமூடிக்குப் பின் ஒரு புரட்சி வரலாறு இருந்தது. மணிஹீஸ்ட் பாடலாக பிரபலமாகிய ‘பெல்லச்சாவ்’ பாடலுக்கு பின் பாசிசத்தை எதிர்த்த கம்யூனிஸ்ட்டுகளின் வரலாறு இருந்தது. இன்று உலகம் எதிர்கொண்டிருக்கும் பாசிசம், ஆணாதிக்கம், கார்ப்பரெட் ஒடுக்குமுறை, அரச முதலாளித்துவம் ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியிருந்துதான் இத்தொடர் அடைந்த வெற்றிக்கான அடிப்படை.

கதையின்படி ‘புரொபசர்’ என்கிற ஒருவர் விளிம்புநிலையில் வாழும் பலரை ஒருங்கிணைக்கிறார். நோக்கம், வங்கிக் கொள்ளை! விளிம்புநிலையில் வாழ்வோருக்கு பெயர்கள் இல்லை. உலகின் ஏதோவொரு நாட்டிலிருக்கும் ஏதோவொரு நகரின் பெயரே கதாபாத்திரங்களுக்கு சூட்டப்பட்டிருந்தது. அவர்கள் கொள்ளையடிக்கச் செல்லும் வங்கியும் சாதாரண வங்கி அல்ல. ஸ்பெயின் நாட்டின் தேசிய வங்கி. உள்ளே பிணைக்கைதிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு, இருக்கும் பணத்தை அவர்கள் மூட்டை கட்டவில்லை. வங்கிக்குள்ளிருக்கும் அச்சு இயந்திரத்தை ஓட விட்டு புது கரன்சி நோட்டுகளை அச்சடிக்கின்றனர். அவற்றை பத்திரமாக வெளியேற்றி கொள்ளையர்களும் தப்புகின்றனர். அடுத்தக் கொள்ளையை அவர்கள் திட்டமிடுவதற்குக் காரணமாக ஓர் அடக்குமுறை இருக்கிறது.

உழைக்கும் வர்க்கத்தின் அறச்சீற்றம்.. ‘Money Heist’ தொடரின் திரை மறைவில் இருக்கும் அரசியல் என்ன ?

அவர்களது குழுவைச் சேர்ந்த ஒருவனை காவல்துறை பிடிக்கிறது. வெளியே தகவல் சொல்லப்படவில்லை. பணத்தை மீட்பதற்காக சித்திரவதை செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகிறான். அனுமதியற்றக் காவலில் ஒருவனை எடுத்து துன்புறுத்துவது மனித உரிமை மீறல். முதல் கொள்ளையில் எடுக்கப்பட்ட பணம், நகரத்தின் வான்வெளியில் ஒரு பலூன் வழியாக மக்கள் மீது கொட்டுகின்றனர் கொள்ளையர்கள். மனித உரிமை மீறலை வெளிக்காட்டுவதற்கென மீண்டும் ஒரு கொள்ளை நடத்தப்படுகிறது. இம்முறை பணம் அல்ல, தங்கம்!

ராணுவத்தைக் கொண்டு வந்து இறக்குகிறது அரசு. கொள்ளையர்களில் ஒரு பெண்ணை சுட்டு வீழ்த்துகிறது. மக்களின் முன்னாலேயே பீரங்கியில் கொள்ளையர்களை கொல்லத் தயாராகிறது அரசு. ராணுவ பலம் வாய்ந்த ஆகச்சிறந்த ஒடுக்குமுறைக் கருவியான அரசிடம் சாமானியர்கள் என்ன செய்ய முடியும் என யோசிக்கும்போதுதான் கதவு திறக்கிறது. ராக்கெட் லாஞ்சரிலிருந்து கணை செலுத்தப்பட்டு பீரங்கி வண்டியை அடித்துத் தூக்கப்படுகிறது. புரொபசரின் மனைவி கடத்தப்படுகிறார். பிறகு காவல்துறை அதிகாரி மாற்றப்படுகிறார். அடுத்தவர் இன்னும் அதிக மூர்க்கத்தைக் காட்டுகிறார். ராணுவ வீரர்களை வங்கிக்குள் அனுப்புகிறார். இரு தரப்புக்கும் கடுமையான மோதல் ஏற்படுகிறது. இன்னொரு பெண் கொள்ளையர் கொள்ளப்படுகிறார். பதவி மாற்றப்பட்ட காவல் அதிகாரி புரோபசரைக் கண்டுபிடிக்கிறார். அத்துடன் மணிஹீஸ்ட்டின் நான்கு சீசன்கள் முடிந்து ஐந்தாம் சீசனின் முதல் பகுதியும் முடிந்திருந்தது.

கடந்த டிசம்பர் 3ம் தேதி ஐந்தாம் சீசனின் இரண்டாம் பகுதி வெளியானது. எல்லா சீசன்களுக்கும் இருந்த வரவேற்பு இன்னும் கூடுதலாகவே கிடைத்து ஐந்தாம் சீசனின் இரண்டாம் பகுதி கொண்டாடப்பட்டு வருகிறது.

உழைக்கும் வர்க்கத்தின் அறச்சீற்றம்.. ‘Money Heist’ தொடரின் திரை மறைவில் இருக்கும் அரசியல் என்ன ?

மணிஹீஸ்ட் தொடரின் முக்கியமான சிறப்பம்சம் கொள்ளையர்களாக வரும் கதாபாத்திரங்கள்தாம். விளிம்புநிலை வாழ்க்கை கொண்டவர்கள் என நாம் சொல்வதற்கு காரணம் அவர்கள் ஏழைகள் என்பதால் மட்டுமல்ல, அவர்களின் சிந்தனையும் உணர்வு நிலையும் கூட விளிம்புக்கு விரட்டப்பட்டதாகவே இருக்கின்றன. டோக்கியோ, நைரோபி மாதிரியான பெண் கதாபாத்திரங்கள் நிலைத்தன்மை கொள்ளாதவையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. டென்வர், ரியோ முதலிய ஆண் கதாபாத்திரங்களிடம் முரட்டுத்தன்மையும் நிலையற்றத்தன்மையும் இருக்கின்றன. பெர்லின் கதாபாத்திரத்திடம் லட்சியவாத அகங்காரம் இருக்கிறது. பலெர்மோஸ்ஸிடமும் அதேதான் இருக்கிறது. இத்தனை பெரிய கொள்ளைச் சம்பவத்தை யோசித்து வெற்றிகரமாக நடத்தும் ஆனானப்பட்ட ‘புரோபசர்’ மிக இயல்பாக, உணர்ச்சிவயப்படுபவராக இருக்கிறார். இவர்கள் எவருமே வேறு யாரோ அல்ல, நாம்தான் என்கிற உணர்வை இக்கதாபாத்திரங்கள் எளிதாக நமக்குள் கடத்துகின்றன.

முதலாளித்துவ சமூகம் உருவாக்கியிருக்கும் எளிதில் உடையக் கூடிய மனநிலைகள் எத்தகையனவாய் இருக்கின்றன என்பதை இத்தொடரின் கொள்ளையர் கதாபாத்திரங்களை பார்த்து உணர்கிறோம். நல்லதுக்கும், கெட்டதுக்குமான ஊசலாட்டத்துக்குள் அறத்தைத் தேடும் அவசியத்தை உழைக்கும் வர்க்கப் பிரதிநிதிகளாக நாம் மட்டுமே கண்டடைகிறோம். முதலாளித்துவப் பிரதிநிதிகளுக்கு அறம் பற்றிய அவசியமே இல்லை. அதனால்தான் முதலாளித்துவம் அறமற்ற சித்தாந்தமாக உலகெங்கும் புரையோடி இருக்கிறது. அறம் சார்ந்த சமத்துவ சித்தாந்தம் குறைவாக இருந்தாலும் வலிமையுடன் ஜீவிக்கிறது.

கருவிகள், உபகரணங்கள் முதலியவற்றை இயக்கி உழைப்புச் செலுத்தி இவ்வுலகையே கட்டியெழுப்பி இருக்கும் உழைக்கும் வர்க்கத்துக்கு இவ்வுலகில் மதிப்பற்ற துயரம் நிறைந்த வாழ்க்கைதான் மிச்சமாக அளிக்கப்படுகிறது. இந்த மொத்த அமைப்பும் திருப்பி வைக்கப்பட்டால் என்னவாகும்?

உலகை கட்டியெழுப்பியவன் உற்பத்தியை தீர்மானித்தால் என்னவாகும்?

எந்த கருவிகளுக்கு தங்களின் உழைப்பையும் வாழ்வையும் உழைக்கும் வர்க்கம் அன்றாடம் பறிகொடுக்கிறதோ அதேக் கருவிகள், தொழில்நுட்பம், நிபுணத்துவம் முதலியவற்றைக் கொண்டு தனக்குகந்த பொருளாதார அமைப்பையும் அது கட்டியெழுப்ப முடிந்தால் எப்படி இருக்கும்?

மணிஹீஸ்ட் தொடரில் அத்தகையவொரு அமைப்பு கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. கோவிட் தாக்கிய சமயத்தில் அரசுகள் உலகெங்கும் மக்களை கைகழுவி விட்டு, பொதுத்துறையை நிர்மூலமாக்குவதால் நேரும் விளைவுகளை எதிர்கொண்டோம். அநாமத்தாக உயிர்கள் உருவப்பட்டன. சாரை சாரையாக தொழிலாளர்கள் நடந்தனர். கிருமிகள் போல் தொழிலாளர்கள் மீது கிருமிநாசினிகள் பாய்ச்சப்பட்டன. மக்களின் உயிர்கள் பொருட்படுத்தப்படாமல் சரக்குகள் ரயிலிலே ஏறி உடல்களின் மீது ஏறி சென்று கொண்டிருந்தன. வசதி இல்லை, மருத்துவம் இல்லை, கல்வி இல்லை, வருமானம் இல்லை என கையறுநிலையில் உலகப் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கம் தவித்துக் கொண்டிருந்தபோதுதான் தேவையான அரசியலைப் பாய்ச்சும் தொடராக மணிஹீஸ்ட் அமைந்தது.

உழைக்கும் வர்க்கத்தின் அறச்சீற்றமாகவே மணிஹீஸ்ட் தொடர் உருவாகியிருக்கிறது.

உழைக்கும் வர்க்கத்தின் அறச்சீற்றம்.. ‘Money Heist’ தொடரின் திரை மறைவில் இருக்கும் அரசியல் என்ன ?

தொடரின் இறுதிப்பகுதியிலும் உறவுகளுக்கு இடையேயான ஊசலாட்டங்கள், மனக்கிலேசங்கள் இடம்பெறுகின்றன. தங்கம் வெளியேற்றப்படுகிறது. கொள்ளையர்கள் கைது செய்யப்படுகின்றனர். புரொபசர் வங்கிக்குள் செல்கிறார். கொள்ளையடித்தக் தங்கம் எங்கே என காவல்துறை கேட்கிறது. அரசுக்கும் பெரும் பதற்றம். ஏனெனில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் சாதாரணத் தங்கம் அல்ல, நாட்டின் ரிசர்வில் இருக்கும் தங்கம். நாட்டின் மொத்தப் பொருளாதாரத்துக்கும் அடிப்படையாக இருக்கும் தங்கம். அது ரிசர்வில் இல்லையென்றால், நாடு திவாலாகும். இறுதியில் என்ன நடந்தது என்பதை விறுவிறுப்பாக சொல்லி முடிவுற்றிருக்கிறது மணிஹீஸ்ட்.

இறுதிப்பகுதியின் இறுதியில் இத்தொடர் முழுக்க முழுக்க மார்க்சிய அடிப்படையை கொண்டு மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது என்பதை துலக்கமாக்கும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. சுவாரஸ்யம் குறையவில்லை. இத்தனை காலமும் நாட்டின் பொருளாதாரம் என நம்பிக் கொண்டிருக்கும் விஷயத்தின் மீது செருப்பைக் கழற்றி வீசியிருக்கிறது இத்தொடர்.

மிச்சத்தைத் தொடரில் பாருங்கள்.

தொடரின் இறுதியில் புரோபசர் வங்கிக்குள் நுழையும்போது அவரது கதாபாத்திரத்தைப் பற்றி டோக்கியோ கதாபாத்திரம் பேசும் வசனம் ஒன்று உண்டு:

”We know nothing can go wrong when you're here. You're the master of illusion. We all believe in you. You're our faith. The faith that, if all else fails we still have you. No matter how bad things get, even if they have us on our knees, even if it looks like there's no hope, like we're almost dead, we keep on believing. Because we know we'll always have the Professor.”

வசனத்தின் அர்த்தம்:

“நீங்கள் இருக்கும்போது எதுவும் தவறாக முடியாதென எங்களுக்குத் தெரியும். நீங்கள்தான் மாயவித்தைக்காரன். நாங்கள் அனைவரும் உங்களை நம்புகிறோம். நீங்கள்தான் எங்களின் நம்பிக்கை. எல்லாமே தோற்றாலும் எங்களுக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்கிற நம்பிக்கை. நிலைமை எத்தனை மோசமாக இருந்தாலும், எங்களை அவர்கள் அடிபணிய வைத்தாலும், நம்பிக்கையே இல்லை என்பதுபோன்ற தோற்றம் ஏற்பட்டாலும், நாங்கள் அழிந்துபோகும் நிலையை எட்டினாலும், நாங்கள் தொடர்ந்து நம்புவோம். ஏனென்றால் எப்போதும் எங்களின் புரொபசர் இருப்பாரென எங்களுக்குத் தெரியும்.”

banner

Related Stories

Related Stories