தமிழ்நாடு

“கிரிப்டோ கரன்சி ஆபத்து.. விளம்பரங்களை தடை செய்யுங்க” : ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு!

கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“கிரிப்டோ கரன்சி ஆபத்து.. விளம்பரங்களை தடை செய்யுங்க” : ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாக பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளில் பொதுமக்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. கிரிப்டோ கரன்சி குறித்து உரிய விதிகள் வகுக்கப்படாத நிலையில், இதுசம்பந்தமாக ஊடகங்களிலும் பெரிய அளவில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதாகக் கூறி, அதை தடுத்து நிறுத்த ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், முறைப்படுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகளில் பாதுகாப்பு அபாயம் உள்ளதாக ஏற்கனவே ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளதாகவும், இந்த பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி வர்த்தகத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாததால் அதைப் பயன்படுத்த வேண்டாம் என ஒன்றிய அரசு எச்சரித்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி மூலம் அதிக வட்டி தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கேரளாவில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகளவில் முறைகேடுகள் நடப்பதாகவும் சுட்டிகாட்டப்பட்டிய மனுதாரர், எந்த விதிமுறைகளும் இல்லாததால் கிரிப்டோ கரன்சிகள் குறித்த விளம்பரங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கும்படி, ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories