தமிழ்நாடு

வென்றது அறப்போராட்டம்.. ஆனால், போராட்டம் முடிவுக்கு வர என்ன செய்ய வேண்டும்?: ‘தினகரன்’ நாளேடு தலையங்கம்!

ஒன்றிய அரசு மிகவும் காலம்தாழ்ந்து இந்த முடிவை எடுத்தாலும், இது விவசாயிகளின் அறப்போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது என ‘தினகரன்’ நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

வென்றது அறப்போராட்டம்.. ஆனால், போராட்டம் முடிவுக்கு வர என்ன செய்ய வேண்டும்?:  ‘தினகரன்’ நாளேடு தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றதன் மூலம் வென்றது அறப்போராட்டம் என ‘தினகரன்’ நாளேடு 20.11.2021 தேதியிட்ட இதழில் ‘வென்றது அறப்போராட்டம்’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம்-2020, விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் ஒப்பந்தம்-2020, அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்)-2020 என 3 வேளாண் துறை தொடர்பான மசோதாக்களை ஒன்றிய அரசு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அதே மாதத்தில் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இவை, சட்ட வடிவம் பெற்றன.

இச்சட்டம் மூலம், தனியார்களை சார்ந்து விவசாயிகள் நிற்கும் நிலை ஏற்படும். கொள்முதல் விலையையும் அவர்களே தீர்மானிப்பார்கள். வரம்பற்ற சேமிப்பு காரணமாக பொருட்கள் பதுக்கப்பட்டு செயற்கை பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது, தனியார் விலையை அதிகரித்து விற்கவும் வாய்ப்புள்ளது என விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர். இந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எடுத்த முயற்சி, பெரும்பான்மை காரணமாக ஒன்றிய அரசால் முறியடிக்கப்பட்டது.

இதையடுத்து, விவசாயிகள் போராட்டம் வெடித்தது. சுதந்திர போராட்டத்திற்கு பின் இவ்வளவு பெரிய போராட்டம் நீண்ட காலமாக நடந்ததில்லை. 11 கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படாமல், ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நீடித்தது. இப்போராட்டத்தால், கடந்த ஓராண்டில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். 18 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். போராட்டத்தை தடுக்க முடியாத மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையிட்டும் பலன் இல்லை. ஒன்றிய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநில சட்டமன்றங்களில், 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

எதிர்ப்புகளை எல்லாம் மீறி, 3 வேளாண் சட்டங்களை நியாயப்படுத்த பா.ஜ.க., எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன. பல மாநிலங்களில் பா.ஜ.க., பின்னடைவை சந்தித்தது. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் கர்நாடக முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே பா.ஜ.க., தோல்வியை தழுவியது. பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாவட்டங்களிலும் பா.ஜ.க., தோல்விஅடைந்தது. இவை எல்லாம், பா.ஜ.க.,வின் மனதில் ஆழமாக பதிந்து, மாற்றத்தை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.

இதிலும், விவசாயிகளின் பிரச்சினை கடுமையாக எதிரொலிக்கும் எனவும் பா.ஜ.க., கணித்தது. இறுதியில், 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்கிறோம் என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். ஆனாலும், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிடவில்லை. பிரதமரின் அறிவிப்பு மட்டுமின்றி, வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அதிகாரப்பூர்வமாக இச்சட்டங்களை வாபஸ் பெற்றால் மட்டுமே விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரும் என போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஒன்றிய அரசு மிகவும் காலம்தாழ்ந்து இந்த முடிவை எடுத்தாலும், இது விவசாயிகளின் அறப்போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories