தமிழ்நாடு

சிலம்பம் விளையாட்டிற்கு மாபெரும் அங்கீகாரம்.. சிலம்பம் வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியீடு!

சட்டப்பேரவையில் அறிவித்தப்படி வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

சிலம்பம் விளையாட்டிற்கு மாபெரும் அங்கீகாரம்.. சிலம்பம் வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது ஆணையின்படி, தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டைச் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் உள்ளது. அதன்படி, செல்வி. சி.ஏ.பவானிதேவி, வாள்சண்டை, எ.தருண் (தடகளம்), லஷ்மண் ரோஹித் மரடாப்பா (படகோட்டுதல்), செல்வி. தனலட்சுமி, (தடகளம்), செல்வி. வி. சுபா (தடகளம்) மற்றும் டி.மாரியப்பன் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்படி திட்டத்தின் கீழ் ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபாடி மற்றும் உஷீ ஆகிய விளையாட்டுக்களையும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுக்கு முந்தைய இந்திய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டினை 3 விழுக்காடு விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டு அதற்கான அரசாணை (நிலை) எண்.46, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் (எஸ்1) துறை, நாள்.29.10.2021-ன் மூலம் ஆணையிட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது சீரிய முயற்சியின் கீழ், ஒன்றிய அரசின் கேலோ இந்தியா திட்டத்தில் சிலம்பம் விளையாட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சிலம்ப விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெருமளவில் பயன் பெறுவதன் மூலம் தமிழினத்தின் பழங்கால தற்காப்புக் கலைகளில் சிறப்பு மிக்க சிலம்பம் விளையாட்டிற்கு மாபெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது ஒட்டுமொத்த தமிழினத்திற்கு பெருமை சேர்ப்பதாகும் என சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

banner

Related Stories

Related Stories