தமிழ்நாடு

“தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்” : தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்திய அமைச்சர்!

தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்” : தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்திய அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் நேற்று மாலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல குழுவின் 29வது கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். மேலும், தலைமை செயலாளர் இறையன்பு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தெலங்கானா உள்துறை அமைச்சர் முகமது அலி, கேரளா மாநில அமைச்சர், புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சவுந்திர ராஜன், முதல்வர் ரங்கசாமி, அந்தமான் நிக்கோபார் துணை நிலை ஆளுநர் ஜோஷி, லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் பட்டேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரையை பொன்முடி வாசித்தார். அதில், “மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டியிருந்ததால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. உலகின் மிகவும் பழமையான மொழிகளுள் ஒன்றான தமிழ், இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தேசிய மொழியாக இருக்கிறது. எனவே, தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக அறிவிக்க வேண்டும். அதேபோல், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும்.

தமிழகத்தின் மின் உற்பத்தி திட்டங்கள் பலவற்றுக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. சமூக பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது. அதேநேரத்தில் மாநிலங்களுக்கு இடையேயான தேவையற்ற வழக்குகள், பகைமை உணர்வு ஆகியவற்றால் வளர்ச்சி பாதிக்கப்படும். இத்தகைய பிரச்னைகளுக்கு அன்பெனும் பொது மொழி கொண்டு தீர்வு கண்டு முன்னேற்றப் பாதையில் நடைபோடுவோம்.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, “தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பாலாற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் கேட்டார்.

தமிழகத்தின் வடமாவட்டங்களில் குடிநீருக்கும், பாசனத்துக்கும் பாலாற்றை நம்பி இருக்கிறோம். எனவே, குப்பத்தில் அணை கட்ட வேண்டாம் என கூறி இருக்கிறோம். எனவே, தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் மற்ற மாநிலங்களுடன் பேசி, நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories