தமிழ்நாடு

“அறிவியல் திறனறி தேர்வை அடுத்த ஆண்டு முதல் மாநில மொழிகளிலும் நடத்தவேண்டும்” : சென்னை ஐகோர்ட் உத்தரவு!

அறிவியல் திறனறி தேர்வை அடுத்த ஆண்டு முதல் மாநில மொழிகளிலும் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“அறிவியல் திறனறி தேர்வை அடுத்த ஆண்டு முதல் மாநில மொழிகளிலும் நடத்தவேண்டும்” : சென்னை ஐகோர்ட் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அறிவியல் திறனறி தேர்வை இந்த ஆண்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்த அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றம், அடுத்த ஆண்டு மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிட்டுள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் கிஷோர் விக்யானிக் புரோட்சகான் யோஜனா திட்டம் மூலம் அறிவியலில் ஆர்வமுள்ள பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு நடத்தி தகுதியானவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கபடுகிறது. இந்த திறனறி தேர்வானது இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழகத்தில் 60 சதவிகிதம் மாணவர்கள் தமிழ் வழியில் படித்துள்ளதால் அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பிற மொழி பேசுபவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறி திறனறி தேர்வை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மாநில மொழிகளில் திறனறி தேர்வை நடத்துவதற்கான செயல்முறையை முடிக்க ஆறு மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த ஆண்டு முதல் அனைத்து மொழிகளிலும் திறனறிவு தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த ஆண்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வை நடத்த அனுமதி அளித்ததுடன், அடுத்த ஆண்டு முதல் பட்டியலில் உள்ள மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

banner

Related Stories

Related Stories