தமிழ்நாடு

“சீரமைக்கப்படாத ‘ரேடார் கருவி’.. பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு”: தி.மு.க MP ஆவேசம்!

வானிலை ஆய்வுக் கருவிகளை விரைந்து சரி செய்திட கோரி பிரதமர் மோடிக்கு தயாநிதி மாறன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

“சீரமைக்கப்படாத ‘ரேடார் கருவி’.. பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு”: தி.மு.க MP ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை துறைமுகம் நூற்றாண்டு கட்டிடத்தில் பழுதடைந்துள்ள வானிலை ஆய்வு ரேடாரை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்தவும், சென்னை பள்ளிக்கரணை NIOT இல் சோதனை முயற்சியில் உள்ள ரேடாரை போர்க்கால அடிப்படையில் தயார் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிடவும், காரைக் கால் மற்றும் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இருந்து முழுமையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கிடவும், தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசின் இந்த மாற்றாந்தாய் போக்கை கைவிட்டு பல கோடி தமிழக மக்களை பாதுகாத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம் பின் வருமாறு:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, ஒரு முக்கிய பிரச்சனையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர இக்கடிதத்தை எழுதுகிறேன்.

ஒன்றிய அரசின் மெத்தனம்!

சென்னை நூற்றாண்டு கட்டிடத்தில் பழுதாகியுள்ள 5-பேண்ட் டாப்ளர் ரேடாரை சீரமைப்பது குறித்தும், பள்ளிக்கரணை NIOT இல் தயாராகி வரும் x பேண்ட் டாப்ளர் ரேடாரை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிடுவதிலும் ஒன்றிய அரசின் மெத்தனமும் காலதாமதமும் மிகவும் வேதனையளிக்கிறது. இதுகுறித்து கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதியே உங்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

ஆனால் ஓராண்டு கழித்தும் எந்தவித சீரமைப்பு பணிகளும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வில்லை. கடந்த நவம்பர் 6 ஆம் தேதி இரவு அதிக பட்சமாக சென்னையில் 200 மி.மீ மழை பெய்தது. 2015ஆம் ஆண்டு மழை வெள்ளத்திற்கு பிறகு இதுவே அதிகபட்ச மழையாகும். ஆனால் இம் மழைக்கு முன், மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தவறான தரவுகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் இப்பெரு மழைக்கான எந்தவித அறிகுறியும் அந்த அறிக்கையில் இடம்பெற வில்லை. இது குறித்த கேள்விகளுக்கு மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் ரேடாரில் பழுது ஏற்பட்டுள்ளதையும் அதற்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது என்பதனையும் ஊடகத்திடம் ஒப்புக்கொண்டனர்.

பழுதடைந்துள்ள ரேடார்கள்!

கடந்த ஆண்டு எழுதிய கடிதத்தில் பள்ளிக்கரணை NIOT இல் அமைந்திருக்கிற வானிலை ரேடார் அதிகபட்சமாக 100 முதல் 150 கிலோ மீட்டர் தூரம் சுற்றளவை மட்டுமே கணிக்க கூடியதாய் இருக்கும் என்றும் இது சென்னை துறைமுகத்தில் உள்ள வானிலை ஆய்வு ரேடாரின் திறனுக்கு சமமாக அமைய வாய்ப்பில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். ஏனெனில் சென்னை துறைமுக நூற்றாண்டு கட்டிடத்தில் உள்ள S பேண்ட் டாப்ளர் வானிலை ரேடார் கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர் சுற்றளவில் வானிலை நிலவரத்தை கண்காணித்து வழங்கும் திறன் பெற்றது. இந்த ரேடாரில் வரும் தரவுகள் வங்காள விரிகுடாவில் உருவாகும் சூறாவளி புயல்களை குறித்து எச்சரிக்கிறது.

மேலும் காற்றின் வேகம் மற்றும் திசை குறித்து முக்கிய தரவுகளை வழங்குகிறது. இந்த ரேடாரானது சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பெய்யும் மழையின் தீவிரம் குறித்த தகவல்களை வழங்கி மக்களை பாதுகாப்பாக இருப்பதற்கு வழிவகை செய்கிறது. அதுமட்டு மல்லாமல் கடந்த காலங்களில் வங்காள விரிகுடாவில் உருவான புயல்களை கண்டறிந்ததிலும், புயல் எச்சரிக்கைகளை விரைவாக வழங்கியதிலும் வானிலை ஆய்வாளர்களுக்கு இந்த ரேடார் மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்ததாக ஊடக செய்திகள்குறிப்பிட்டுள்ளன.

பழுது நீக்குவீர்!

எனவே இந்திய வானிலையியல் துறையும், ஒன்றிய புவி அறிவியியல் துறையும், சென்னை நூற்றாண்டு கட்டிடத்தில் பழுதாகியுள்ள S பேண்ட் டாப்ளர் ரேடாரை போர்க்கால அடிப்படையில் பழுதுநீக்கி, பள்ளிக்கரணை NIOT இல் அமைந்திருக்கும் X பேண்ட் டாப்ளர் ரேடாரின் சோதனை முயற்சிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்யுமாறு மீண்டும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories