தமிழ்நாடு

“நடைமுறையை மாற்ற வேண்டாம்” : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்ளும் நடைமுறை தொடரவேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

“நடைமுறையை மாற்ற வேண்டாம்” : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்ளும் நடைமுறை தொடர வேண்டும்” என வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2022ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்ள ஏதுவாக, உரிய நடவடிக்கையினை எடுத்திட மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

சமீபத்தில் ஒன்றிய அரசின் ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ள ஹஜ் 1443 (H) 2022 அறிவிக்கையில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள குறிப்பிட்டுள்ள விமான நிலையங்களின் பெயர் பட்டியலில் சென்னை விமான நிலையத்தின் பெயர் இடம்பெறவில்லை.

இதுகுறித்து கடிதம் எழுதியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் தனது கடிதத்தில், 2019ஆம் ஆண்டில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலிருந்து 4500-க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் சென்னையிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்று வந்துள்ள நிலையில், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களிலிருந்தும் யாத்ரீகர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர் என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த யாத்ரீகர்கள் விமானம் ஏறும் இடமாக தற்போது கேரளாவில் உள்ள கொச்சி விமானநிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது, யாத்ரீகர்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து தனக்கு ஏராளமான கோரிக்கைகள் இஸ்லாமிய சமூகத்தினர், பொதுமக்கள், பல்வேறு அரசியல் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக பெறப்பட்டுள்ளதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடித்ததில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹஜ் யாத்திரை பெரும்பாலான யாத்ரீகர்களுக்கு சவாலாக உள்ள நிலையில், சென்னையிலிருந்து சுமார் 700 கி.மீ தொலைவில் உள்ள கொச்சி நகரை புறப்படும் இடமாக அறிவிக்கப்பட்டதை மாற்றி, யாத்ரீகர்களுக்கு பயனளிக்கும் வகையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, இந்தியாவின் நான்காவது பெரிய பெருநகரமாக விளங்கிடும் சென்னை விமான நிலையத்திலிருந்து தொடர்ந்து வழக்கம்போல புறப்படும் வகையில் அனுமதி வழங்கிட தொடர்புடைய துறையினருக்கு அறிவுறுத்துமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories