தமிழ்நாடு

”மழை வெள்ளத்தில் மக்களை தவிக்க விட்ட அ.தி.மு.க; மீட்பு பணியில் தி.மு.க” - தினகரன் நாளேடு தலையங்கம்!

மக்களை வெள்ளத்தில் தவிக்கவிட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் யாரையும் தப்ப விடக்கூடாது என தினகரன் நாளேடு வேண்டுகோள் விடுத்துள்ளது.

”மழை வெள்ளத்தில் மக்களை தவிக்க விட்ட அ.தி.மு.க; மீட்பு பணியில் தி.மு.க” - தினகரன் நாளேடு தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த அனைத்து இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு அனைத்துப் பணிகளும் முடுக்கி விடப்பட்டு வெள்ள மீட்புப் பணிகள் விரைவாக நடக்கின்றன. இனி நம்ம சென்னையை நல்ல சென்னையாக மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீர்வு எட்டப்படும் என‘தினகரன்’ நாளேடு 10.11.2021 தேதியிட்ட இதழில் ‘தீர்வு எட்டப்படும்’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் சென்னை வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பது ஒன்றும் புதியது அல்ல. 2015 பெரு வெள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதால் சென்னையில் ஏற்பட்ட இழப்பு, உயிர் பலி ஏராளம். அதை தொடர்ந்து சென்னை வடிகால் கட்டமைப்பை உருவாக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

2016ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசால் எந்தவித திட்டங்களும் நிறைவேற்றப்படாததால் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழைக்கு இன்றும் சிக்கித் தவிக்கிறது சென்னை. 7 ஆண்டுகள் கடந்த பிறகும் இன்றும் அதே நிலையில் தான் சென்னை இருக்கிறது என்றால் அதிமுக ஆட்சி நிர்வாகத்தின் அவலத்தை கணக்கிட இது ஒன்றே போதும். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் அதிகாரிகள்? சென்னை மாநகரை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டிய பொறுப்பு அவர்களுக்குத்தானே உண்டு.

சீர்மிகு திட்டங்களை கொண்டு வந்து தவிக்கும் மக்களுக்கு அவர்கள் பணி செய்யக்கூடியவர்கள் அல்லவா? அப்படியானால் 2015 வெள்ளத்திற்கு பிறகு வந்த சென்னை மாநகராட்சி கமிஷனர்கள், தலைமை இன்ஜினியர்கள் என்ன செய்தார்கள்? சென்னை வெள்ளத்தை தடுக்க அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன? ஒதுக்கப்பட்ட நிதி எங்கே சென்றது, பணிகள் நடந்ததா? பணிகள் நடந்தது என்றால் ஏன் மீண்டும், மீண்டும் அதே பகுதிகளில் வெள்ளம் தேங்குகிறது என்ற கேள்விகள் மக்கள் மனதில் இன்று எழாமல் இல்லை.

இதைத்தான் சென்னை உயர் நீதிமன்றமும் கேட்டு இருக்கிறது. சென்னையில் வெள்ளத்தை தடுக்க ரூ.2400 கோடி திட்டம் அறிவித்தீர்களே என்ன ஆயிற்று? அந்த நிதியும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டு அதிமுக ஆட்சி நிர்வாகத்திற்கு குட்டு வைத்து இருக்கிறது. ஒன்றிய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சென்னையை அழகுபடுத்த தி.நகர் பகுதிக்கு மட்டும் ரூ.200 கோடி செலவழிக்கப்பட்டு இருக்கிறது. அப்படித்தான் கணக்கு காட்டப்பட்டது. அதன் லட்சணம் இந்த மழையில் தெரிந்தது.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை சென்னை முழுவதும் வீதிவீதியாக சென்று சந்தித்து குறைகளை கேட்டு, உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, அதன் தரத்தையும் சோதித்து தயங்காமல் மக்களை சந்தித்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மழை தண்ணீர் தேங்கி நிற்கும் ஒரு இடத்தை கூட அவர் விடவில்லை. அத்தனை பகுதிகளுக்கும் அவரே நேரில் சென்று பார்வையிடுவதால் அனைத்து பணிகளும் முடுக்கிவிடப்பட்டு வெள்ள மீட்பு பணிகள் விரைவாக நடக்கின்றன.

இனி நம்ம சென்னையை நல்ல சென்னையாக மாற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தீர்வு எட்டப்படும். அதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் இன்று மக்களை வெள்ளத்தில் தவிக்கவிட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் யாரையும் தப்ப விடக்கூடாது. அதையும் செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளது மக்கள் மனம் மகிழச்செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories