தமிழ்நாடு

வடிகால் அமைக்காமல் டெண்டர் பிக்சிங் செய்து ஊழல்: அதிமுக ஆட்சியால் நேர்ந்த கதிதான் இது - அறப்போர் இயக்கம்

ஊழல் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட அதிமுக அரசால்தான் இன்று தியாகராயநகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது என அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடிகால் அமைக்காமல் டெண்டர் பிக்சிங் செய்து ஊழல்: அதிமுக ஆட்சியால் நேர்ந்த கதிதான் இது - அறப்போர் இயக்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் பேசியதாவது,

பல இடங்களில் மழை நீரானது அதிக அளவில் தேங்கி இருக்கிறது. குறிப்பாக கடந்த 2015ஆம் ஆண்டிற்கு பிறகு கற்றுக் கொண்ட பாடம் என்ன என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குறுகிய காலத்தில் அதிக மழை பொழிவது காலநிலை மாற்றத்தினால் இதுபோல் பெய்து வருகிறது.

அதிமுக அரசு 5 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் போடப்பட்டு 200 கோடிக்கு தியாகராயநகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. மழைநீர் வடிகால் முறையாக அமைக்கப்படவில்லை. இவர்கள் ஊழல் செய்வதற்காகவே இத்திட்டங்களை செய்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு சிலருக்கே டெண்டர் பிக்சிங் செய்து மாநகராட்சி அதிகாரிகளை கேள்வி கேட்க முடியாத நிலைக்கு தள்ளி உள்ளனர்.

அதன் விளைவாகதான் தற்பொழுது தியாகராய நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. முறையாக மழை நீர் வடிகால் அமைத்து அதற்கான வரைபடம் கூட வெளியாகவில்லை. பின்னர் எப்படி மழைநீர் வடிகால் பாதையை சென்றடையும்.

2019ஆம் ஆண்டு 46 ஆறு நீர்நிலைகளை 100 கோடி செலவில் சீரமைக்க டெண்டர் விட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வெறும் பவுண்டரிகள் மட்டும் அமைத்து நடைபாதைகள் அதனை சுற்றி அமைத்து கான்கிரீட் டப்பா போல மழை நீர் தேக்கங்களை ஆழப்படுத்தி தூர் வாராமல் கான்கிரீட் டப்பா போல் ஆக்கிவிட்டனர்.

முறையாக திட்டமிடல் இன்றி ஊழல் மட்டுமே குறிக்கோளாக கொண்டு இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. நீர் நிலைகளை மற்ற பயன்பாட்டிற்கு பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக 2019ஆம் ஆண்டு செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் அமைந்துள்ளது என்று ஐஐடி அறிக்கை கொடுத்துள்ளது. நீர்நிலைகளை அதிமுக அரசே ஆக்கிரமிப்பு செய்து முறைகேடு செய்தது, வில்லிவாக்கத்தில் 39 ஏக்கர் நீர் நிலையில் 15 ஏக்கர் மட்டும் நீர்தேக்கத்திற்கு வைத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை தீம் பார்க் அமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள்.

நீர்நிலைகளை நீர்தேக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதிலும் முறைகேடு. ஜிஎஸ்டி சாலையில் இருக்கக்கூடிய குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலிருந்து பல்லாவரம் பெரிய ஏரி செல்லக்கூடிய நீர்வழிப் பாதைகள் முறையாக சீரமைக்கப்பட வில்லை. 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை. குடிநீர் வழங்கும் நீர்நிலைகளை பொறுத்தவரை மேலே படிந்துள்ள மண் படிமங்களை குறிப்பிட்ட அளவிற்கு எடுத்து அதனை சீரமைப்பு செய்து கொள்ளளவை அதிகப்படுத்தலாம். அவ்வாறு அவர்கள் செய்யத் தவறியதே தற்பொழுது இவ்வளவு சீக்கிரம் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பதற்கு காரணம்.

ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட திட்டங்களில் பல்வேறு ஊழல்களை செய்துள்ளார்கள். குறிப்பாக ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு யூனிட் வாங்க வேண்டிய இடத்தில் 10,000 ரூபாய் கொடுத்துள்ளார்கள். ரெடிமிக்ஸ் கான்கிரீட் ஒரு யூனிட்டுக்கு இருமடங்காக விலை கொடுத்து வாங்கி உள்ளார்கள். இதுதொடர்பான ஊழல் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுத்துள்ளோம். இதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories