தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் வே.சுப்புராமன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், “தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் தலைவர் வே.சுப்புராமன் மறைவெய்தினார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன். 1944-ஆம் ஆண்டு சிங்கம்புணரியில் உள்ள நாட்டார்மங்கலத்தில் பிறந்த சுப்புராமன் தொலைத் தொடர்புத் துறையில் பணியில் சேர்ந்து தொழிலாளர்களின் இன்னல்களைப் போக்கிட 35 ஆண்டுகள் தொழிற்சங்கப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.
22 ஆண்டுகளாக நேரடியாக தொ.மு.ச பேரவையில் இணைந்து, தொலைத்தொடர்பு ஊழியர் முன்னேற்றச் சங்கத்தினைத் தொடங்கியதோடு, பல்வேறு மாநிலங்களில் சங்கத்தின் கிளைகளை உருவாக்கி தொ.மு.ச பேரவை என்கிற மத்திய அமைப்பு தேசிய அளவில் அங்கீகாரம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர்.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பெறவும் இன்னல்களைப் போக்குவதற்காகவும் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து அகில இந்திய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி, அதற்காக கைது செய்யப்பட்டுச் சிறை சென்றவர்.
ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்திய சட்டத் தொகுப்புகளை எதிர்த்து அகில இந்திய அளவில் நடைபெற்ற தொழிற்சங்க மாநாடுகளில் பங்கேற்றும், அங்கு உருவாக்கப்பட்ட போராட்ட நடவடிக்கைகளுக்கு உந்துசக்தியாகவும் இருந்து பணியாற்றியவர் சுப்புராமன் அவர்கள்.
தமது சளைக்காத உழைப்பால் தொ.மு.ச பேரவையின் செயலாளராக இணைந்து, இணைப் பொதுச் செயலாளர் என்கிற நிலைக்கு உயர்ந்து, 2013-ஆம் ஆண்டு முதல் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் தலைவராகப் பொறுப்பேற்று அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தோழமை மனப்பான்மையோடு பணியாற்றியவர்.
கொள்கைப் பிடிப்புடன் தொழிலாளர் நலனுக்காகப் பணியாற்றிய அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், தொ.மு.ச பேரவைத் தோழர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.