தமிழ்நாடு

குப்பைக்கூளமாக காட்சியளித்த சமுதாயக்கூடம்.. ஃபேஸ்புக் தகவலால் உடனடி நடவடிக்கை எடுத்த தி.மு.க எம்.எல்.ஏ!

பல்லாவரம் தொகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுத்த தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

குப்பைக்கூளமாக காட்சியளித்த சமுதாயக்கூடம்.. ஃபேஸ்புக் தகவலால் உடனடி நடவடிக்கை எடுத்த தி.மு.க எம்.எல்.ஏ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை பம்மல் நகராட்சி சமுதாய நலக்கூட வாசலில் தொடர்ச்சியாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதாக இச்செயல் உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் வருத்தம் தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த கீதாப்ரியன் என்பவர் இதுதொடர்பாக வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “இது இன்று காலை 5-30 க்கு பம்மல் சமுதாய நல குப்பைக்கூடத்தின் நிலை. ஊழியர்கள் சற்று நேரத்தில் வந்து பெருக்கத் துவங்குவார்கள் , அவர்களும் மனிதர்கள்தானே? இப்படி தினமும் ஒரு சமுதாய நலக்கூடத்தின் வாசலை நாறடித்து, சாக்கடையை அடைக்கும்படி குப்பைகளை கொட்டுகின்றனர் நல்லதம்பி ரோடு வாசிகள்.

எங்கள் 8ஆம் வார்டில் ஒரு பெண் துப்புறவு தொழிலாளி உண்டு, அவர் கடும் உழைப்பாளி, கண் புரைநீக்க அறுவை சிகிச்சை செய்த நிலையிலும் கருப்புக் கண் கண்ணாடி அணிந்து துப்புரவு வேலை செய்கிறார், பல மாதங்களாகியும் கருப்பு கண்ணாடியை கழற்றவில்லை, குப்பைக் கூளம் பெருக்கி வாறுகையில் கண்ணில் புகும் கிருமிகளால் கண் மீண்டும் மீண்டும் பழுதாவதால் தொடர்ந்து கண் கண்ணாடி அணிகிறார்.

குப்பைக்கூளமாக காட்சியளித்த சமுதாயக்கூடம்.. ஃபேஸ்புக் தகவலால் உடனடி நடவடிக்கை எடுத்த தி.மு.க எம்.எல்.ஏ!

சக ஆண் தொழிலாளி உடல் நலமின்றி வேலைக்கு வராத நாளில் அவரே ஒற்றை ஆளாக அரை டன் கழிவு வாகனத்தை தள்ளிச் செல்வதைப் பார்த்தும் இப்படி டன் கணக்கில் குப்பைகளை வீசுகின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இதுதொடர்பாக பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ இ.கருணாநிதியிடம் ஃபேஸ்புக் மூலம் முறையிட்டு, குப்பைகளை அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியிருந்தார்.

இதனையடுத்து எம்.எல்.ஏ இ.கருணாநிதி உத்தரவின் பேரில் கூடுதல் தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது. உடனடி நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ இ.கருணாநிதியின் நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து கீதாப்ரியன் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “எங்கள் தொகுதி எம்.எல்.ஏ திரு.இ.கருணாநிதி அவர்களுக்கு காலையில் ஃபேஸ்புக்கில் இந்த படங்களை அனுப்பியிருந்தேன், அங்கு உடனே பணியாளர்கள் மூலம் குப்பைகளை சுத்தம் செய்து சாக்கடையை தூர்வாரி புகைப்படம் அனுப்பியிருந்தார், நிரந்தரமாக இந்த கட்டிட வாசலில் குப்பை கொட்டுவதை தடுக்குமாறு கேட்டுள்ளேன், மக்கள் சேவை நிறைவளிக்கிறது.

இந்த அரசின் வெளிப்படையான நிர்வாகத்துக்கு இது சான்று, யாரும் எளிதில் அணுகும்படி மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் இருக்கும், நீங்களும் அணுகி உங்கள் பிரச்சனைகளை சொல்லுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் பலரும் எம்.எல்.ஏவின் இத்தகைய நடவடிக்கைக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories