தமிழ்நாடு

கடைக்குள் புகுந்து தலையை துண்டித்த இளைஞர்.. 4 மணி நேரத்தில் கைது செய்த போலிஸ்: விசாரணையில் ‘பகீர்’ தகவல்!

டி.வி மெக்கானிக் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையாளியை போலிஸார் 4 மணி நேரத்தில் கைது செய்தனர்.

கடைக்குள் புகுந்து தலையை துண்டித்த இளைஞர்.. 4 மணி நேரத்தில் கைது செய்த போலிஸ்: விசாரணையில் ‘பகீர்’ தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோவில்பட்டி அருகே டி.வி மெக்கானிக் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையாளியை போலிஸார் 4 மணி நேரத்தில் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது குமாரகிரிபுதூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மகன் சூரியராகவன் (31). இவர் டிவி பழுதுபார்க்கும் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சூரியராகவன் நேற்று கடையில் வழக்கம்போல் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென கடைக்குள் ஒரு மர்ம நபர் புகுந்து சூரியராகவனுடன் ஆவேசமாக சண்டை போட்டு வாக்குவாதம் செய்தார். பின்னர் கத்தியால் சூரியராகவனின் தலையை துண்டித்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலிஸார் விரைந்து சென்று சூரியராகவன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். விசாரணையில் சூரியராகவனை கொலை செய்துவிட்டு தப்பியோடியது சோழபுரத்தைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் (22) என்பது தெரியவந்தது.

சூரியராகவனுக்கும் படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சூரியராகவனின் மெக்கானிக் கடை அருகில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் உள்ளது. அங்கு வரும் மகாலட்சுமிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்து எதிர்ப்பு கிளம்பியது. பெற்றோர்களின் எதிர்ப்பினையும் மீறி சூரியராகவன், மகாலெட்சுமி இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

சூரியராகவனை கொன்ற ஆனந்த்ராஜ் மகாலட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கேட்டரிங் வேலை செய்து வரும் ஆனந்த்ராஜ், மகாலெட்சுமி சூரியராகவனை காதலிப்பது தெரிந்ததும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டது ஆனந்தராஜுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியதால் சூரியராகவனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதற்காக ஒரு டி.வியை கொண்டு வந்து, அதை பழுது பார்த்துத் தருமாறு, ஒரு வாரத்திற்கு முன்பு சூரியராகவனிடம் தெரிவித்துள்ளார். அப்போதே டி.வி பழுது பார்க்க 4, 5 நாட்கள் ஆகும் எனத் தெரிவித்துள்ளனர். ஆனாலும், தினமும் கடைக்கு வந்து, டி.வி ரெடியா என்று கேட்டு வந்துள்ளார் ஆனந்த்ராஜ்.

டி.வி பழுது பார்க்கப்பட்டு விட்டதாக சூரியராகவன் போனில் சொன்னதும், ஆனந்தராஜ் ஒரு கட்டை பையில் தான் ஆடு வெட்ட கொண்டு செல்லும் கத்தி, மிளாகாய் பொடி ஆகியவற்றை கொண்டு வந்துள்ளார்.

டி.வியை வாங்குவதற்கு முன்பே, தான் காதலித்த பெண்ணை நீ எப்படி திருமணம் செய்தாய் என்று கூறி ஆனந்தராஜ், சூரியராகவனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, தான் கொண்டுவந்த மிளாகாய்ப்பொடியை சூரியராகவன் முகத்தில் வீசி விட்டு கத்தியை கொண்டு தலையை துண்டித்துள்ளார்.

பின்னர், தலையை மட்டும் கையில் பிடித்தவாறு சுற்றி முற்றிப் பார்த்துவிட்டு பின்னர் தலையை அப்பகுதியில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளார் ஆனந்த்ராஜ்.

இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈட்ய்பட்ட போலிஸார் கொலையாளி ஆனந்த்ராஜை 4 மணி நேரத்தில் திருச்செந்தூரில் கைது செய்தனர். ஒருதலைக் காதலால் கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories