தமிழ்நாடு

“திருமணம் முடிந்த மறுநாளே புதுப்பெண் மாயம்” : மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி - விசாரணையில் பகீர்!

இளைஞரை ஏமாற்றி மோசடி செய்த 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“திருமணம் முடிந்த மறுநாளே புதுப்பெண் மாயம்” : மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி - விசாரணையில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விவசாயிக்கு திருமணம் செய்து வைத்து நகை மற்றும் பணத்தைச் சுருட்டி நூதன மோசடியில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே நல்லிக்கவுண்டம்பாளையத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (34). தனது தாய், தந்தையுடன் விவசாயம் செய்து வரும் இவருக்கு கடந்த பல ஆண்டுகளாக பெண் பார்த்து வந்தும் வரன் அமையவில்லை. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரிடம் பெண் பார்க்கச் சொல்லியுள்ளார்.

அரியலூரைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்ற பெண் தரகர், தன் வீட்டுக்கு அருகே ரீசா என்ற பெண் உள்ளதாகவும், அவரது அக்கா தங்கம், பெரியம்மா தேவி ஆகியோர் வந்துள்ளதாகவும் கூறி, ராஜேந்திரனை பெண் பார்க்க வரச் சொல்லியுள்ளார். இதையடுத்து ராஜேந்திரனுக்கும் ரீசாவுக்கும் கடந்த மாதம் 22-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் வீட்டார் வற்புறுத்தியதால், கடந்த மாதம் 24-ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள ராஜேந்திரன் ஒப்புக்கொண்டார். 24-ஆம் தேதி காலை பச்சாம்பாளையம் கோயிலில் வைத்து ரீசாவை, ராஜேந்திரன் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்ததும் திருமண தரகு கமிஷனாக ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்நிலையில் 25-ம் தேதி ராஜேந்திரன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தபோது காரை வரவழைத்த ரீசா, வீட்டிலிருந்து ராஜேந்திரன் அணிவித்த நகைகளுடன் மாயமானார்.

இதையடுத்து ராஜேந்திரன் சந்திரன் மூலமாக அரியலூரை சேர்ந்த வள்ளியம்மாளை தொடர்பு கொண்டபோது சரியாக பதிலளிக்காமல் இருந்துள்ளனர்.

இதையடுத்து சந்திரன் அரியலூருக்கு சென்று விசாரித்தபோது, ரீசாவுக்கு ஏற்கெனவே ஜெய்ஸ்ரீதர் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது தெரியவந்தது.

இதையடுத்து பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி திருமணம் செய்த ரீசா (27), தரகர்கள் அம்பிகா (38), வள்ளியம்மாள் (45), ரீசாவின் உறவினர் தேவி (55) மற்றும் தங்கம் (36) ஆகியோர் மீது குன்னத்தூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலிஸார், 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மோசடி குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories