தமிழ்நாடு

“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்!

கீழடியில் அகழாய்வு செய்த குழிகளை மூடாமல் மக்கள் பார்வைக்காக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தொழில் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தொல்லியல் ஆய்வுப் பணிகள் தொடங்கின. தொடர்ந்து ஆறு மாத காலமாக நடைபெற்று வரும் இந்த அகழாய்வுப் பணியில் 900க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சங்க இலக்கியத்தில் கூறப்படும் செங்கல் கட்டுமான அமைப்பு, 9 அடுக்கு கொண்ட பொருள்கள் வடிகட்டும் குழாய், சங்கு அறுக்கும் தொழிற்சாலை இருந்ததற்கான அடையாளங்கள் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அகழ்வாராய்ச்சி நடைபெற்ற கொற்கை பகுதியில் தமிழக தொழில் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அகழ்வாராய்ச்சி நடைபெற்ற பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டு அவர், அகழ்வாராய்ச்சி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அங்கு எடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை பார்வையிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “1960களின் இறுதியில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற கனிம மாதிரிகள் ஆய்வில், கிறிஸ்து பிறப்பதற்கு 785 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாகரீகம் நிலவி வந்துள்ளதை ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகிறது.

இப்போது நடைபெற்ற அகழாய்விலும் கிடைக்கப்பெற்ற தொல்பொருள்கள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சக்கூடிய வகையில் அமைந்துள்ளது. ஆழ்கடல் அகழாய்வு நடத்துவது குறித்து பல நிறுவனங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். பூர்வாங்கமாக இதனை நிறைவேற்றும் வகையில் துறை வல்லுநர்கள் உடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணிகள் நடைபெறும்.

மேலும் பொதுவாக இதுபோன்ற அகழ்வாராய்ச்சி முடிந்தபின் குழிகள் மூடப்படும். ஆனால், இதனை அருங்காட்சியகமாக மாற்றும் முயற்சியில் உள்ளோம். கீழடியில் அகழாய்வு செய்த குழிகளை மூடாமல் மக்கள் பார்வைக்காக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது தொல்லியல் துறை இணை ஆணையர் சிவானந்தம், அகழாய்வு இயக்குநர் தங்கதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories