தமிழ்நாடு

“அரசு ஊழியர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாதா?” : பரவும் வதந்தி குறித்து தமிழக அரசு விளக்கம்!

ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மேல் இருந்தால் ரேஷன் பொருட்கள் கிடையாது என்று வெளியான வதந்தி குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.

“அரசு ஊழியர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாதா?” : பரவும் வதந்தி குறித்து தமிழக அரசு விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்று வெளியான வதந்தி குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மேல் இருந்தால், 3 அறைகளுக்கு மேல் உள்ள கான்கிரீட் வீடு இருந்தால், 5 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் ஒன்று சிலரால் பரப்பப்பட்டு வந்தது.

இந்த தகவல் தவறானது என்றும், பொது விநியோகத் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். “தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கிடையே எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் நிலையில் சமீப காலமாக சமூக ஊடகங்கள் சிலவற்றில் ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கும் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் பெறும் குடும்பங்களுக்கும் ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் மூன்று அறைகள் கொண்ட கான்கிரீட் வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் பொது விநியோகத் திட்ட அரிசி இல்லை என்று எவ்வித முகாந்திரமும் அற்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அனைவரும் பாராட்டும் வண்ணம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படுகிறது என்றும் இதில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அரிசி பெற்றுவரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் இலவச அரிசி மற்றும் பொது விநியோகத்திட்டத்தில் தற்போது மானிய விலையில் பெற்று வரும் அனைத்துப் பொருட்களையும் தொடர்ந்து பெற்று பொது விநியோகத் திட்டதத்தின் பலன்களை அடையலாம் என தெளிவுபடுத்தப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவிவரும் இது குறித்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories