தமிழ்நாடு

"சரியான நேரத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் எடுத்த அந்த நடவடிக்கை - மிகவும் தேவை" : கி.வீரமணி பாரட்டு!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி 12 முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின கடிதம் எழுதியது மிகவும் தேவையான நடவடிக்கை என கி.வீரமணி பாராட்டியுள்ளார்.

"சரியான நேரத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் எடுத்த அந்த நடவடிக்கை - மிகவும் தேவை" : கி.வீரமணி பாரட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘நீட்’டை ரத்து செய்யக்கோரி 12 முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியது காலத்தாற் மேற்கொள்ளப்பட்ட சிறந்த பணி!

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர முயற்சிக்கவேண்டும்;

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான ‘நீட்’டை ஒழிக்க மக்களைத் திரட்டுவோம்!

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ‘நீட்’டை ரத்து செய்விக்க 12 முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பது காலத்தாற் மேற்கொள்ளப்பட்ட சரியான நடவடிக்கை என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்றும், மக்கள் விரோத நீட்டை ஒழித்துக்கட்ட மக்களைத் திரட்டுவோம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

‘நீட்’ தேர்வு என்று மாநில அரசுகளின்மீதும், மருத்துவக் கனவுடன் விழையும் மாணவர்கள், பெற்றோர்கள்மீதும் வலுக்கட்டாயமாகக் கடந்த நான்கு ஆண்டுகளாக திணிக்கப்பட்டுவரும் - ‘ஊழலின் ஊற்றுக்கண்ணாக’ நடைபெற்றுவரும் ‘நீட்’ தேர்வு என்பது அரசமைப்புச் சட்டம் மாநில அரசுகளுக்கு அளித்துள்ள உரிமைகளைப் பறிக்கும் ஓர் ஆபத்தான திட்டமாகும். கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டுமென்று 12 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

"சரியான நேரத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் எடுத்த அந்த நடவடிக்கை - மிகவும் தேவை" : கி.வீரமணி பாரட்டு!

காலத்தாற் மேற்கொள்ளப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சரின் பணி

ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் குழுவின் 165 பக்கம் கொண்ட அறிக்கையை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வுபற்றிய மசோதாக்களின் விவரங்களையும் அனுப்பி, மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்க முயற்சி எடுத்துள்ளது பெரிதும் காலத்தால் செய்யப்பட்ட சரியான செயலாகும்.

முன்பு - கல்வி, ‘‘நெருக்கடி நிலை’’ அமுலில் இருந்தபோது - மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு (State List to Concurrent List-க்கு) மாற்றப்பட்டது - எவ்வித விவாதமோ, விளம்பரமோ இல்லாமல்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், இரு அரசுகளுக்கும் உரிய பட்டியல் - ஒத்திசைவு பட்டியல் (Concurrent List) என்பதிலிருக்கும் கல்வியை எவ்வித அரசமைப்புச் சட்டத் திருத்தமோ, அறிவிப்போ சிறிதும் இல்லாமல், நடைமுறையில், கல்வியை ஒன்றிய அரசுப் பட்டியலிலேயே இருப்பதுபோன்ற நடைமுறையை இப்போதுள்ள பிரதமர் மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு கையாண்டு வருகிறது!

12 முதலமைச்சர்களுக்குக் கடிதம்

1. ‘நீட்’ தேர்வு இந்தியா முழுமைக்கும் (அரசமைப்புச் சட்ட விதிகளுக்கேக்கூட முரணாக) மாநிலங்கள்மீது திணிக்கப்படுகிறது.

2. புதிய கல்விக் கொள்கை என்ற ஆர்.எஸ்.எஸ். கல்வி அஜெண்டாவை மாநிலங்கள்மீது திணிக்கிறது.

இந்தச் சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,

1. ஆந்திரப் பிரதேசம் 2. சட்டீஸ்கர் 3. டில்லி 4. கோவா 5. ஜார்க்கண்ட் 6. கேரளா 7. மகாராட்டிரா 8. ஒடிசா 9. பஞ்சாப் 10. ராஜஸ்தான் 11. தெலங்கானா 12. மேற்குவங்கம் ஆகிய எதிர்க்கட்சி மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதி விளக்கியுள்ளார்.

அரசமைப்புச் சட்டப்படி - ஏழாவது அட்டவணையில் - மாநிலங்களுக்குள்ள உரிமைகள் குறிப்பாக கல்வி உரிமைகள் பற்றிக்கப்படுகின்றன.

பொது சுகாதாரம், மருத்துவமனைகளின் நிர்வாகம் முழுக்க மாநிலப் பட்டியலுக்குள் வருபவை. மருத்துவக் கல்விக்கு இவைதானே அடிக்கட்டுமானம்! இல்லையா? அதைப் பறிப்பதா?

"சரியான நேரத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் எடுத்த அந்த நடவடிக்கை - மிகவும் தேவை" : கி.வீரமணி பாரட்டு!

ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை இந்த ‘நீட்’ தேர்வு திணிப்பு, அரசமைப்புச் சட்டப்படி, பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமே உள்ள தேர்வு நடத்தி, பட்டம் தரும் உரிமையை இப்படி ஒன்றிய அரசு பறித்துள்ளது - சட்ட விரோதம் மட்டுமல்ல; நியாய விரோதமும் ஆகும் என சுட்டிக்காட்டியுள்ளதே!

அரசமைப்புச் சட்டப் பிரிவுகளின்படி உள்ள உரிமைகளை மாநில அரசுகளிடமிருந்து ‘நீட்’ தேர்வுமூலம் பறித்துக் கொள்வது அரசமைப்புச் சட்டத்தைப்பற்றிக் கவலைப்படாத, தவறாகப் பயன்படுத்தும் முறை என்னும் ஒரே ஒரு கேள்விக்குப் பதிலளிக்கட்டும் ‘நீட்’ தேர்வு நடத்தும் ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை!

நகைமுரண் என்பது இதுவே!

எங்காவது தேர்வு நடத்துவது ஒரு ஏஜென்சி, பட்டம் கொடுப்பது இன்னொரு அமைப்பு - பல்கலைக் கழகம் என்ற முறை உண்டா?

இதைவிட கேலிக்கூத்து வேறு உண்டா?

இதைவிட நகைமுரண் வேறு காண முடியுமா?

‘தமிழ்நாடு மட்டும்தான் எதிர்க்கிறது; மற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டன’ என்று கூறுவதே ஒரு மாய்மாலம்.

மராத்திய மாநிலம் எதிர்க்கத் தொடங்கிவிட்டது.

மேற்குவங்கம் உள்பட பல மாநிலங்கள் எதிர்க்க ஆயத்தமாகிவிட்டன!

வடபுலத்தில் இதன் கொடுமையை மெல்ல மெல்ல உணரத் தொடங்கி விட்டனர்.

எனவே, இதனை முன்னுரையாக நமது முதலமைச்சர் வைத்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கே திரும்பக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு - தமிழ்நாடு வழக்கம்போல, ‘நீட்’ தேர்வு சமூகநீதிக்கு எப்படி கேடாய் இருக்கின்றது என்பதை இடையறாது எடுத்து, எரிமலையாக விளக்கிடும் சட்டப் போராட்டத்தையும் தொடரவேண்டும்.

மக்களைத் திரட்டும் பணி தொடங்கிவிட்டது. நியாயம் இறுதியில் வெல்லும்!

இவ்வாறு கி.வீரமணி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories