தமிழ்நாடு

ஓய்வுபெறும் நாளன்றே சஸ்பெண்ட் செய்யப்பட்ட உயரதிகாரி... நடந்தது என்ன?

பாலியல் புகாரில் சிக்கிய புதுச்சேரி அதிகாரி ஓய்வுபெறும் நாளன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஓய்வுபெறும் நாளன்றே சஸ்பெண்ட் செய்யப்பட்ட உயரதிகாரி... நடந்தது என்ன?
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பாலியல் புகாரில் சிக்கிய புதுச்சேரி அதிகாரி ஓய்வுபெறும் நாளன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனராகப் பணியாற்றியவர் பத்மநாபன். இவர் அத்துறையின் இயக்குனர் பொறுப்பையும் கவனித்து வந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு, பத்மநாபன் மீது, அங்கு பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக உள்ளூர் விசாரணை குழு, விசாரணை நடத்தியது. இந்தக் குழு முன்பு ஆஜராகி 27 பெண்கள் சாட்சியம் அளித்தனர்.

விசாரணை குழுவில் நேரில் ஆஜராகி விளக்கம் தர கடிதம் அனுப்பப்பட்டும் பத்மநாபன் வரவில்லை. பத்மநாபன், பெண் மருத்துவருடன் பேசியதாக கூறப்படும் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இந்நிலையில் இந்தக் குழு விசாரிக்க தடை கோரி பத்மநாபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே பத்மநாபன், அரசு நிறுவனமான ‘பாண்கேர்’ துறைக்கு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர், நேற்று அவசர வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், பாலியல் புகார் சுமத்தப்பட்டிருந்த பத்மநாபன், தன் மீதான விசாரணையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 2 ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் செப்.30ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால், அவசர வழக்காக எனது மனுவினை எடுத்து விசாரிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து வழக்கு காணொளிக்காட்சி வாயிலாக உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாலியல் புகாருக்கு உள்ளான பத்மநாபனை பணியிடைநீக்கம் செய்ய தலைமை செயலர், துறை செயலருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, இன்று பணி ஓய்வு பெறும் நாளில், பத்மநாபன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories