தமிழ்நாடு

“எடப்பாடி பழனிசாமி கூறுவது வடிகட்டிய பொய்” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி!

அ.தி.மு.க ஆட்சியில் கடந்த ஆண்டை விட கூடுதலாகவே நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

“எடப்பாடி பழனிசாமி கூறுவது  வடிகட்டிய பொய்” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நெல் விளைச்சல் அதிகமுள்ள மாவட்டங்களில் செயல்பட்டு வந்த பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசைக் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த குற்றச்சாட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மறுத்துள்ளார். மேலும் கடந்த ஆண்டை விட 64 ஆயிரத்து 150 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்கள் குறைவாக உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் எங்கு பார்த்தார் என தெரியவில்லை.

கடலூர் மாவட்டத்தில் 114 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட கூடுதல் ஆகும். கடந்த ஆண்டில் 68 இடங்களில் தான் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது குறுவை பருவத்தில் 64 ஆயிரத்து 150 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 50 ஆயிரம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

எனவே எடப்பாடியின் கூற்று வடிகட்டிய பொய். திட்டக்குடி பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களே இல்லை என அவர் தெரிவித்து உள்ளார். அங்கு நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. கடந்த ஆட்சியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமில்லாமல் அரசே கூடுதல் விலைக்கு நெல் கொள்முதல் செய்கிறது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories