தமிழ்நாடு

“தி.மு.க எங்களுக்கு என்ன செஞ்சது?” - வலதுசாரி இளைஞருக்கு தெளிவாகப் புரியவைத்த கார்த்திகேய சிவசேனாபதி!

தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தனக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த கொங்கு பகுதியைச் சேர்ந்த வலதுசாரி இளைஞருடனான உரையாடல் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

“தி.மு.க எங்களுக்கு என்ன செஞ்சது?” - வலதுசாரி இளைஞருக்கு தெளிவாகப் புரியவைத்த கார்த்திகேய சிவசேனாபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தனக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த கொங்கு பகுதியைச் சேர்ந்த வலதுசாரி இளைஞர் ஒருவர், தன்னிடம் அறியாமையோடு கேட்ட கேள்விக்கு தான் அளித்த பதில் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

தி.மு.க அரசின் சமூக நீதி திட்டங்கள் குறித்த புரிதலற்ற பலரின் அகக்கண்களைத் திறக்கும் வகையிலான அந்த ஃபேஸ்புக் பதிவு வருமாறு:

"குட்டப்பாளையத்தில் உள்ள சுற்றுச்சூழல் அணியில் மாநிலச் செயலாளர் அலுவலகத்தில் அமர்ந்து இருந்த ஒரு நாள், காலை 10.30 மணி இருக்கும்.

என்னைச் சந்திக்க அருகாமையில் இருக்கக்கூடிய கிராமத்தைச் சேர்ந்த சா.ஈஸ்வரன் என்ற ஒரு தம்பி வந்திருந்தார். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக, அவருடைய அப்பா சாமிநாதன் அவருடைய தாத்தா அப்புசாமி கவுண்டர் என அனைவரும் எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் அறிமுகமானவர்கள். நன்கு அறிமுகமான குடும்பம் ஆதலால், கல்யாண பெண்ணும் உடன் வந்து இருந்தார்.

அந்த தம்பியின் (சா.ஈஸ்வரன்) சகோதரியின் திருமண பத்திரிகையை வழங்குவதற்கு, அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள். அவர்கள் குடும்பத்துடன் எனக்குப் பத்திரிகை தந்துவிட்டு, என்னுடைய அப்பா அம்மாவுக்குத் திருமண பத்திரிகை கொடுப்பதற்கு என்று கூறிவிட்டு என்னுடைய அலுவலகத்திற்குப் பின் உள்ள இல்லத்திற்குச் சென்றார்கள்.

சா.ஈஸ்வரன், தொழில் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து மாதம் சுமார் 70,000/- வரை சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பு.

அவர் மட்டும் என்னுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.

"அண்ணா எனக்கு உங்கள சிறுசுல இருந்து உசுரா பிடிக்கும், நீங்க TV பேட்டி , நீயா நானா, ஜல்லிக்கட்டு, இப்போ கட்சி பணி , தொண்டாமுத்தூர் தேர்தல் இதுக்கெல்லாம் முன்னமே இருந்து நீங்க எனக்கு ஹீரோ அண்ணா.

ஆனா ஏனுங்க அண்ணா இந்த தி.மு.க பெரியார், அண்ணா, கலைஞர்னு இதவே பேசுறீங்க ?? அது ஒண்ணு மட்டும் தன எனக்கு வருத்தமுங்க அண்ணா. நீங்க மட்டும் இந்து மக்கள் கட்சி, பா.ஜ.க சேர்ந்து இருந்தீங்கனா, மாநில தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்னு அருமையா இருந்து இருக்கும் அண்ணா, நம்ம சாதி சனத்துல பெருமையா இருக்குமுங்க அண்ணா" என்று ஆரம்பிக்க,

"எதுக்குங்க தம்பி நான் பா.ஜ.கவில சேரனும் ??" என்று கிண்டலாக மனதில் சிரிப்புடன் கேள்வி கேட்டேன்.

அதற்கு அந்த தம்பியிடம் பதில் இல்லை.

"உங்க தாத்தா திமுகவில இருந்தாங்க அப்டினு ஏனுங்க அண்ணா நீங்க தி.மு.கவுக்கு போனீங்க ?" என்று அவர் மீண்டும் தொடர,

சிரித்துக்கொண்டே நான், "திராவிடமும் திராவிட முன்னேற்றக் கழகமும் உனக்கோ நம்ம மக்களுக்கோ என்ன துரோகம் செஞ்சுதுங்க தம்பி?" என்று என் கேள்வியை வைத்தேன்.

"என்னங்க அண்ணா செஞ்சு இருக்காங்க நம்ம ஊருக்கோ, நம்ம மக்களுக்கோ, நமக்கோ ?? சொல்லுங்க!”

என்று அந்த தம்பி கேட்க, அவரிடம் சில கேள்விகள் கேட்க விடை தெரியாமல் அமைதியாக இருக்கவும், திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற கல்யாண பெண்ணும், அவரது அப்பா அம்மாவும் வந்து எனக்கு எதிரே அமர சரியாய் இருந்தது.

சரி தம்பி உன் அப்பாவிடம் கேள் என்றவுடன், அந்தத் தம்பி அவர் அப்பாவிடம் கேட்டார்.

"ஏனுங்கப்பா தாத்தா எத்தனை ஏக்கர்ல விவசாயம் பண்ணினாங்க?" என்றவுடன் அவரின் அப்பா சிரித்துக்கொண்டே, "அதெல்லாம் உங்க தாத்தா பல ஏக்கர்ல விவசாயம் செஞ்சப்படி " என்றவுடன் அந்த தம்பி "அப்பா சொல்லுப்பா " என்றவுடன் அவரின் தந்தை, "தாத்தாக்கு எங்கட பூமி இருந்துச்சு ?? தாத்தா கூலி வேளைக்கு தான் போயிட்டு இருந்தாங்க, அப்புறம் கொஞ்ச நாளைக்கு பூமி புடிச்சு குத்தகைக்கு ஓட்டிக்கிட்டு இருந்தோம், நான் நம்ம ராமசாமி ஐயா தோட்டத்துல ஆடு மெச்சுகிட்டு இருந்தேன்" என்று அவரின் அப்பா சொல்ல,

விரிந்த கண்களுடன் அந்தத் தம்பி,"ஆடு மேய்ச்சிங்கன்னா , நம்ம ஆடுகளா அப்பா ??" என அப்பாவியாய் கேட்க, அவரின் தந்தை "இல்லடா கண்ணு, சம்பளத்துக்கு வாரம் 12.50/- ரூபாய்க்கு " என்று கனத்த குரலில் கூறினார்.

அந்தத் தம்பி சா.ஈஸ்வரன் மிகுந்த அதிர்ச்சியில், கிட்டத்தட்ட உறைந்த நிலையில் அமர்ந்து இருந்தார்.

அந்த தம்பி இத்தனை ஆண்டுகளாக, தனக்கு இருக்கும் நிலமெல்லாம், தன்னுடைய அப்பா தாத்தா, பாட்டன், பூட்டன் வைத்து இருந்தது, அந்த நிலத்தில் தான் இந்தத் தம்பி இன்று விவசாயம் செய்து வருவதாக நினைத்துக் கொண்டு இருந்தான்.

நானும் சிரித்துக் கொண்டே சாமிநாதன் (அந்த தம்பியின் அப்பாவிடம்) அவர்களிடம்

"எப்பங்க ஐயா நமக்கு பூமி வந்துச்சு?" என்று கேட்டேன்.

அதற்கு அவர், "எனக்கு சரியாய் வருசம் நினைப்புல இல்லீங்க ஆனா, நீங்க பொறந்ததுக்கு முன்னமே, உங்க அப்பா அம்மா கல்யாணம் ஆனா வருசம் எங்களுக்கு பூமி வந்ததுங்க" என்றார்.

எனது அம்மா அப்பாவின் திருமண வருடம் 1969.

1969-70 கால கட்டத்திலே வந்து இருக்க வேண்டும். அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் நமது தலைவர் கலைஞர் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்து, நிலம் இல்லாத ஏழை எளியோருக்குப் பூமியைப் பிரித்துக் கொடுத்தது அன்றைய கலைஞர் தலைமையிலான தமிழ்நாட்டின் அரசு. அந்த நில உச்ச வரம்பில் பூமியைப் பெற்றவர் தான் எனக்கு முன்னாள் அமர்ந்து இருந்த சா.ஈஸ்வரன் அவர்களின் தாத்தா அப்புசாமி கவுண்டர் அவர்கள்.

அப்பொழுது நான் அந்த தம்பியிடம் கேட்டேன், "தம்பி உங்க தாத்தாவுக்கு நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் பூமி கிடைக்க சட்டம் இயற்றியது கலைஞர், திராவிட முன்னேற்ற கழகம்." என்றேன்.

சிறிய மௌனத்திற்கு பிறகு கலந்துரையாடல் தொடர..

"சரி தங்கச்சி பத்திரிக்கை கொண்டு வந்து இருக்கேல பா. தங்கச்சி என்ன செய்யுறாப்ல?" என்றேன்

"தங்கச்சி, இப்போ அரசு வங்கியில் - வங்கி மேலாளராக வேலை பார்க்குறாங்க, அண்ணா"

"சரி, ஏன்மா எங்க படிச்ச?"

"சார், - TNAU (தமிழ்நாடு விவசாய கல்லூரி)" என்று கூற,

"MERIT-ல தானேமா SEAT கிடைச்சுது ??"

"ஆமாங்க சார், நீங்க தானே guide பண்ணி B.Sc கிள்ளிகுளத்துல இருக்குற AGRI ல படிக்க வச்சீங்க sir, M.sc, நீங்க TNAU BOARD MEMBER-ஆ இருந்தப்போ எனக்கு உதவி பண்ணி SEAT வாங்கி கொடுத்தீங்க MSc (HORTICULTURE) படிக்க. " என்றார்.

"B.Sc விண்ணப்பத்தில் - பிற்படுத்தப்பட்ட சமுதாயம், BC (கொங்கு வேளாளர் ) என்று குறிப்பிட்டாயா ??"

"ஆமாங்க sir , அது குறிப்பிட்டதால் தான் quota ல seat கிடைச்சுது!!"

என்றார் வாங்கி மேலாளர் ஆகப் பணிபுரியும் மணப்பெண்.

"சரிம்மா” என்று சிரித்து கொண்டே நான் எழுதிய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட "நான் கண்ட கலைஞர் " புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயத்தை எடுத்து கொங்கு வேளாளர் சமுதாயத்தை எப்படி பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவித்தார்கள் என்று படித்துப் பாருங்கள் என்று புத்தகத்தைக் கொடுத்தேன்.

வலது சாரி அமைப்பைச் சேர்ந்த அந்தத் தம்பிக்கு மீண்டும் அதிர்ச்சி.

- தன்னுடைய தாத்தா கூலித் தொழிலாளியாக, தந்தை ஆடு மேய்த்த நிலையில் இன்று எப்படி நிலம் உடையவராக மாறியதற்குக் காரணம் திராவிட முன்னேற்றக் கழகம்.

- தன்னுடைய சகோதரி தமிழ்நாடு விவசாய கல்லூரியில் பயின்றதும், அவருக்கான வேலை வாய்ப்பும் அமைந்தது பிற்படுத்தப்பட்டோர் சலுகையினால்

என்கிற விஷயமும் அழுந்த உரைத்தது அவருக்கு என்பதையும் அவரின் வாடிய முகமே உணர்த்தியது.

பின்னர் அசட்டுச் சிரிப்புமாக சிறிது சமாளித்த அவரிடம்,

"அப்புறம் தம்பி இப்போ சொல்லுங்க உனக்கு என்ன காயம், ஏன் தி.மு.க, திராவிடம், பெரியார் மேல வெறுப்பு?? உன் குடும்பச் சூழலை மாற்றி உன்னைப்போல் இந்தப் பகுதியில் வாழ்ந்த பல லட்சம் குடும்பங்களை நிலம் உள்ளவர்களாக மாற்றி வாழ்வாதாரம் தந்து, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு தந்து படிக்க வைத்து கொங்கு மண்டலத்தையே வாழ வைத்தது தி.மு.க தான் மறந்துடாதீங்க."

அவரின் அப்பாவைப் பார்த்து

"15 வருஷம் முன்னாடி உங்க பூமியை பூமில ஒரு பகுதியை விக்கலாம்னு பாக்குறேன் சொன்னீங்களே, ஏக்கர் 90,000/-னு கேக்குறாங்க கொடுக்கலாம் இருக்கேன்னு சொன்னீங்களே நினைப்பு இருக்குங்களா??”

அதற்கு அவரின் பதில் ..

"ஆமாங்க, நல்லவேளை நீங்க சொன்னீங்க பூமி எல்லாம் விக்காதீங்க , வித்தா அப்புறம் என்ன பண்ணுவீங்க?

“எதுக்காக விக்கணும் சொன்னீங்க நெனப்பு இருக்குங்களா??

"எனக்கு கடன் ஆகிடுச்சுங்க, ஏகப்பட்ட பிடுங்கல் , சமாளிக்க முடியல"

"அப்புறம் ஏங்க விக்கல, எப்படி கடன்ல இருந்து தப்பிச்சீங்க ?"

"2006ல கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன் தள்ளுபடி செஞ்சுதுங்க, அதுல பூமி தப்பிச்சுது. அதுல தள்ளுபடி வந்ததுனால மட்டும் தான் ஏதோ புள்ளைங்கள படிக்க வச்சு ஆளாக்க முடிஞ்சுதுங்க. இப்போ நெனச்சாலும் பயமா இருக்கு அன்னைக்கு நிலைமைக்கு தற்கொலைதான் செஞ்சிருப்பேன்.

அன்னைக்கு பூமியை விக்காம இன்னைக்கு 5 ஏக்கர் பண்ணையக்காரனா நான் உசுரோட இருக்கக் காரணம் அந்த கடன் தள்ளுபடி தான். "

சிறிய மௌனத்திற்குப் பின் தொடர்ந்தார்.

"இன்னைக்கும் கடன் தள்ளுபடி பண்ணின நாளைக்கு எங்க குல தெய்வம் குப்பணசாமிக்கு கிடா வெட்டுறேன், வருசம் தவறாம, 50 பேருக்காவது சோறு போட்டு கடன் தள்ளுபடி செஞ்சதால தான் எங்க குடும்ப தப்பிச்சுதுனு சொல்லுவேன்."

தொடர்ந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டதால் அந்த தம்பி அமைதியாக உக்கார்ந்து இருந்தார்.

அதற்குப் பிறகு அந்த தம்பியிடம் நான் கேட்டேன்.

"இதெல்லாம் கொங்கு நாட்டுல வாழக்கூடிய வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பல லட்சம் குடும்பங்களுக்கும் நடந்திருக்கும். சினிமால காட்டுறமாதிரி எல்லா கொங்கு வேளாளரும் மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு வெளுத்த சட்ட துண்டோட இருந்தவங்க கிடையாது. பலருக்கு பூமி இல்லாம கூலித் தொழிலாளியா, படிக்க வசதி இல்லாம அரசுப் பள்ளியில படிச்சு, பிற்படுத்தப்பட்ட சமுதாய இட ஒதுக்கீடும், நில உச்ச வரம்பு சட்டமும் தான் வாழ வச்சுக்கிட்டு இருக்கு."

"எல்லாத்துக்கும் மேல இருக்குற பூமி கடனுல மூழ்கிப்போகாம, கடன் தள்ளுபடி செஞ்சு, இலவச மின்சாரம் தந்து, (1990 முதல்) தற்கொலைக்கு தள்ளப்படாமல் விவசாயிகள் வாழ்வதற்கு காரணம் தமிழகத்தின் பொற்கால ஆட்சியை வழங்கிய தி.மு.கவின், கலைஞர் தலைமையிலான ஆட்சியும், கழகத்தின் திட்டங்களும் தான்."

புரிஞ்சுதுங்களா தம்பி - ஈஸ்வரன் ??!!

இதேபோல நூற்றுக்கணக்கான விஷயங்களை தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு சமுதாயத்தின் மாற்றத்திலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தொலைநோக்கு பார்வையும், தலைவர் கலைஞர் வழி வந்த தளபதியும் இன்றும் தமிழர்களுக்கு பொற்கால ஆட்சியை வழங்கி வருகிறார் ". என்று கூறி நிச்சயம் திருமணத்திற்கு வருவதாக வாழ்த்து தெரிவித்து அவர்களை அனுப்பி வைத்தேன்.

இந்த சமூக நீதி நாளிலே இன்றைய தலைமுறைக்கு என்னுடைய வேண்டுகோள் -

யாரோ ஏதோ காரணத்தினால் இன்று பொதுவெளியில் குறிப்பாக சமூக வலைதளத்தில் விதைக்கும் வன்மத்திற்கு விலை போகாமல் சுய அறிவை பயன்படுத்தி,மூன்று தலைமுறைக்கு முன்னர் எப்படி இருந்தோம்? இன்று எவ்வாறு உள்ளோம்? என்று அந்த மாற்றத்தை உணர்ந்து, சமூக, பொருளாதார மாற்றத்திற்கு, முன்னேற்றத்திற்கும் என்ன காரணம் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும், நல்லதோர் அரசியல் பாதையைத் தேர்ந்து எடுத்து நல்ல அரசியலை - Clean Green Politics, உணர்ந்து நாம் எவ்வாறு கல்வியால், சமூகநீதியால் அனைத்து சமுதாயமும் அடைய வேண்டும் என்றும், குறிப்பாக வர்ணாஸ்ரம முறைப்படி நமக்குக் கீழ் உள்ளவர்களாக உருவகப்படுத்தப்பட்டவர்களும் அடைய வேண்டும் என்ற புரிதலுடன் நாம் நடந்துகொள்ள வேண்டும்.

கூலித் தொழிலாளியாக இருந்தவர்கள், அவ்வாறே இருக்கவேண்டும் என்று 1960களில் இருந்து இருந்தால் இந்த நிகழ்வில் பகிர்ந்ததுபோல் வாழ்வில் மாற்றங்கள் அடைந்து இருக்க முடியுமா என்று இன்றைய தலைமுறையினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!”

இவ்வாறு அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories