தமிழ்நாடு

“கொடநாடு வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு?” : பங்களா ஜன்னலை உடைத்த ஜம்சீர் அலியின் அதிர்ச்சி வாக்குமூலம்!

கொடநாடு பங்களாவின் ஜன்னல் கதவை உடைத்த ஜம்சீர் அலியிடம் இன்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

“கொடநாடு வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு?” : பங்களா ஜன்னலை உடைத்த ஜம்சீர் அலியின் அதிர்ச்சி வாக்குமூலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு மறு புலன் விசாரணை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் தலைமையில், உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 17ஆம் தேதி முக்கிய குற்றவாளியான சயானிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மறைந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், குற்றவாளிகள் கேரளாவுக்கு தப்பிச்செல்ல உதவிய அப்போதைய கூடலூர் காவல்துறை ஆய்வாளர் வசந்தா, ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சத்தியன், கொடநாடு கணினி பொறியாளர் தினேஷின் தந்தை போஜன் உள்ளிட்ட பல முக்கிய நபர்களை தனிப்படை போலிஸார் 5 குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தினர்.

மேலும், கோவையை சேர்ந்த வழக்கறிஞர் அனுபவ் ரவி என்பவரையும் கொள்ளைச் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவரும் உயிரிழந்த கனகராஜின் நண்பருமான குழந்தைவேலு ஆகியோரிடம் தனிப்படை போலிஸார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் ஜம்சீர் அலி உதகையில் பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதன்படி கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாகவும் பல்வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. கொடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் ஜம்சீர் அலியின் வாக்குமூலம் அடிப்படையில் மேலும் பலரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.

உயிரிழந்த கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூரை கயிற்றில் கட்டிய முக்கிய குற்றவாளி ஜம்சீர் அலி என்பதும், இவர்தான் கொள்ளைச் சம்பவம் நடந்த அன்று பங்களாவின் ஜன்னல் கதவை உடைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories