தமிழ்நாடு

“பணியாளர்களுக்கு இருக்கை” : ஊழியர்கள் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழக அரசின் ‘கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு இருக்கை அளிக்கும்’ சட்ட முன்வடிவுக்கு மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

“பணியாளர்களுக்கு இருக்கை” : ஊழியர்கள் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு முழுவதும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் அமர்ந்துகொண்டே பணியாற்றும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ள தமிழக அரசு அதற்கான சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது.

1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேரவையில் தாக்கல் செய்தார்.

முன்னதாக அமைச்சர் சி.வி.கணேசன் அளித்த விளக்கத்தில், “தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுக்க நிற்க வைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதன் விளைவாக பணியாளர்கள் பல வகையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு, கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்து வேலையாட்களுக்கும் இருக்கை வசதி வழங்குவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது.

மாநில தொழிலாளர் ஆலோசனை குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்கும் பொருட்கூறானது முன்வைக்கப்பட்டது. அது குழுவின் உறுப்பினர்களால் ஒருமித்த கருத்துடன் ஏற்கப்பட்டது. எனவே, 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் ஏற்றவாறு திருத்தம் செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதன் மூலம் கடைகள், நிறுவனங்களில் நின்று பணியாற்றும் பணியாளர்கள் கட்டாயம் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்ற வழி கை செய்யப்படும் என்பதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் இந்த சட்ட முன்வடிவுக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து அரசு மருத்துவர் ஆனந்த்குமார் பேசுகையில், “சமூக நீதி நடவடிக்கையாகவே இதனை கருதமுடியும். நான் இதனை மனதார வரவேற்கிறேன். மருத்துவராக இந்த அறிவிப்பைப் பார்க்கும் போது நிச்சயமாக இது ஒரு நல்ல விஷயம். ஏனென்றால் தொடர்ந்து பல மணி நேரம் நின்றுகொண்டு வேலை செய்யும்போது "வெரிக்கோஸ் வெயின்" ஏற்ப்பட வாய்ப்புள்ளது.

மேலும் மன ரீதியாக அவர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு வேலையை சரிவர செய்ய இயலாத சூழல் உருவாகும். அதேவேளையில் பிறரிடம் கடிந்து பேசும் நிலை ஏற்படலாம். முதுகு வலி ஏற்படும் வாய்ப்புள்ளது. இதையெல்லாம் தவிர்க்கும் விதமாகத் தான் அரசின் இந்த நடவடிக்கைகளை பார்க்கிறேன்” என்றார்.

மக்களின் பிரச்சனைகளை அவர்களின் பார்வையில் பார்க்கும் ஓர் அரசு அமைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு உதாரணமாகவே தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு அறிவிப்பும் உள்ளது. அந்த வகையில், இருக்கை கிடைத்தது ஊழியர்களுக்கு மட்டுமல்ல முதல்வருக்கும் தான். ஆம்! ஊழியர்கள் உள்ளத்தில் நிரந்தர சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories