தமிழ்நாடு

“கிறிஸ்து பிறப்பதற்கு 1,200 ஆண்டுகளுக்கு முந்தையது தமிழர் நாகரிகம்” - புட்டுப்புட்டு வைத்த அமைச்சர்!

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 1,200 ஆண்டுகளுக்கு முந்தையது சிவகளை, ஆதிச்சநல்லூர் நாகரிகம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

“கிறிஸ்து பிறப்பதற்கு 1,200 ஆண்டுகளுக்கு முந்தையது தமிழர் நாகரிகம்” - புட்டுப்புட்டு வைத்த அமைச்சர்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 1,200 ஆண்டுகளுக்கு முந்தையது சிவகளை, ஆதிச்சநல்லூர் நாகரிகம் என தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்திய நாடெங்கும், அதேபோல் கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய அனுமதிகள் பெற்று இனி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.” என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போது, “தமிழர் நாகரிகம், தமிழின் தொன்மை 3,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற வரலாற்று உண்மையை, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் சான்றுகளுடன் முதலமைச்சர் பேரவையில் இன்று எடுத்துரைத்துள்ளார்.

தமிழகத்தில் சிவகளையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைத்துள்ள பானைகளில் உள்ள நெல்மணிகளின் உமியை அமெரிக்காவில் கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தினோம். அதனை முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழ் நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது, பல்வேறு தொழில்கள் இங்கு நடந்துள்ளன, கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 1,200 ஆண்டுகளுக்கு முந்தையது சிவகளை, ஆதிச்சநல்லூர் நாகரிகம் என, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழக தொல்லியல் துறை 7 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 7-ஆம் கட்ட ஆய்வுகளில் பல்வேறு விதமான பொருட்கள் கிடைத்துள்ளன. அதில், சுடுமண்ணாலான சிற்பங்கள், முத்திரைக் காசுகள், செங்கல் கட்டுமானங்கள், விளையாட்டு பொருட்கள், கங்கை சமவெளியில் காணப்படுவதாக சொல்லப்படும் கருப்பு வண்ண பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

கொற்கையை எடுத்துக் கொண்டால், கி.மு. 8-ஆம் நூற்றாண்டிலேயே வளர்ச்சி பெற்ற துறைமுகமாக விளங்கியிருக்கிறது. மயிலாடும்பாறை அகழாய்வில் கிறிஸ்து பிறப்பதற்கு 4,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே அங்கு வேளாண் சார்ந்த தொழில்கள் நடைபெற்றதற்கான முடிவுகள் கிடைத்துள்ளன.

கொடுமணலில் கிடைத்திருக்கும் உறைகிணறு இரு பக்கமும் நாம் இறங்கி பார்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. கங்கைகொண்டசோழபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட ராஜேந்திரசோழனின் அரண்மனை பாகங்கள், கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் அரண்மனை கட்டுமானம் எப்படி இருந்திருக்கும் என்ற தெளிவினை தருகிறது.

சிவகளை ஆய்வு, தமிழின், தமிழகத்தின் தொன்மையை மிகவும் முன்னோக்கி எடுத்துச் சென்றிருக்கிறது. தமிழுக்கென தனி வரிவடிவம் கிடையாது என்ற கருதுகோளை இவ்வாய்வு முடிவுகள் முறியடித்துள்ளன. கிறிஸ்து பிறப்பதற்கு 1,200 ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் எழுத்தறிவு இருந்தது என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் 'ஆதன்' என்ற பெயர் இடம்பெற்றிருக்கிறது. கீழடியிலும் 'ஆதன்' என்ற பெயர் இடம்பெற்றிருக்கிறது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைக் காசுகளை ஆய்வு செய்தபோது, புகழ்பெற்ற நாணயவியல் அறிஞர் சுஸ்மிதா மஜூம்தர், மவுரிய பேரரசுக்கு முன்னதாக இருக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

அந்த காசு கீழடியில் கிடைத்திருக்கிறது என்றால், கங்கைச் சமவெளியில் நிகழ்ந்த நகர நாகரிகம் வைகைச் சமவெளியில் இருந்திருப்பதையும், இரு சமவெளிகளிலும் பொதுமக்களுக்கு இடையே வாணிபத் தொடர்பு இருந்ததையும் உறுதிப்படுத்த முடிகிறது.

கங்கை சமவெளியில் கிடைத்துள்ள கருப்பு பானை ஓடுகள் வைகை சமவெளியிலும் கிடைத்திருப்பதால், இருபெரும் நாகரிகங்களுக்கு இடையிலான தொட்டிலை நாம் உணர முடியும்.

மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளத்தில்தான் பாண்டியன் நெடுஞ்செழியனின் பெயர் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகுதான், இலக்கியம் சார்ந்த வரலாறு மட்டும்தான் தமிழுக்குடையது என்ற கருத்தை முறியடித்து, நம்முடைய வரலாற்றுக்கென்று அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன, என நிரூபித்ததற்கான முதல் ஆதாரமாக மாங்குளம் கல்வெட்டு கிடைத்தது.

கீழடி நாகரிகம் எழுத்தறிவு பெற்ற நாகரிகம் என்பது தெளிவாகிறது. 13 எழுத்துக்கள் கொண்ட மிகப்பெரிய சொற்றொடர் அங்கிருந்த பானைகளில் கிடைத்துள்ளது. உலக அரங்கில் வியந்து பார்க்கும் வகையில் தமிழ் சமூகம், தமிழ் மொழி 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிரூபித்திருக்கிறோம்.

இந்த நாகரிகம் பொருநை ஆற்றின் கரையில் இருக்கக்கூடிய நாகரிகம். தாமிரபரணி ஆறு பல்வேறு காலக்கட்டங்களில் பொருநை ஆறு என அழைக்கப்பட்டிருப்பதற்கான இலக்கிய சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழகத்திலிருந்து இந்தியாவின் வரலாறு தொடங்குகிறது. பொருநை நதியின் கரையிலே இந்த நாகரிகம் செழித்தோங்கி வளர்ந்திருக்கிறது. அங்கு அருங்காட்சியகத்தை அமைக்க ஆணையிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் அது அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories