தமிழ்நாடு

“வ.உ.சி பிறந்த நாள் விழா - மகாகவி பாரதி கண்ட கனவை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி புகழாரம்!

எந்த வ.உ.சியின் தியாகம் போற்றப்பட வில்லையோ, எந்த வ.உ.சியை மறைக்க முயற்சித்தார்களோ அதே வ.உ.சியைத் தமிழ்நாடே திரும்பிப் பார்க்க வைக்கும் மரியாதையை திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்தது.

“வ.உ.சி பிறந்த நாள் விழா - மகாகவி பாரதி கண்ட கனவை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (06-09-2021) தலையங்கம் வருமாறு:

வீரத்திருமகன் வ.உ.சிதம்பரத்தையும் சுப்பிரமணிய சிவாவையும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஞ்ச் கைது செய்கிறார். எதற்காக? சுதந்திர நெருப்பை மூட்டியதற்காக!

இவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு திருநெல்வேலி மாவட்ட துணை மாஜிஸ்திரேட் ஈ.எச்.வாலேஸ் என்ற வெள்ளைக்கார நீதிபதிக்கு முன்னால் விசாரணைக்கு வந்தது. பின்னர் அந்த வழக்கு செசன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நீதிபதி பின்ஹே விசாரித்தார். அரசுக்கு விரோதமாக நடந்ததால் இருபதாண்டு சிறைத் தண்டனையும், சுப்பிரமணிய சிவாவுக்கு உதவி செய்ததற்காக இருபதாண்டு சிறைத் தண்டனையும் வ.உ.சி.க்கு வழங்கப்பட்டது.

நீதிபதி பின்ஹே தனது தீர்ப்பில் எழுதினார்:- “சிதம்பரனார் மிகப்பெரிய ராஜத்துரோகி. அவரது எலும்புக்கூடும் ராஜவிசுவாசத்துக்கு விரோதமானது. திருநெல்வேலியில் நடந்த கலவரங்களுக்கு எல்லாம் காரணம் சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும்தான். சிதம்பரனாரின் சொற்பொழிவுகளைக் கேட்டால் செத்த பிணம் கூட உயிர் பெற்று எழும்” என்று தீர்ப்பு அளித்தார்.

வ.உ.சி.க்கு அப்போது முப்பத்தைந்து வயது. வயதான பெற்றோர், இளம் மனைவி, சிறு குழந்தைகளை விட்டுவிட்டு - வசதியான தனது வாழ்க்கையை விட்டு விட்டு - வருமானம் தந்த தனது வழக்கறிஞர் தொழிலை விட்டு - சிறைக்குள் போனார் சிதம்பரனார். அவர் கவலைப்படவில்லை. கவலைப்பட்டவர்களிடம், ‘உயர்நீதிமன்றம் இருக்கிறது' என்று ஆறுதல் சொல்லி விட்டுப்போனார் சிதம்பரனார். இறுதியாக ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதியாகிவிட்டது. சிதம்பரனார் சிறையில் இருந்து வெளியில் வரும் போது மன்னரைப் போலத் திரும்புவார் என்று மகாகவி பாரதி கனவு கண்டார்!

“வேளாளன் சிறை புகுந்தான். தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ
வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதிநீவாழ்தி வாழ்தி!”
- என்று கனவு கண்டார் பாரதி. அது வெறும் கனவு தான். சிறையில் சித்திரவதைப்பட்ட வ.உ.சி.யையே மறந்து மறக்கடிக்கும் காலமாக அது மாறிவிட்டது. 1912 சிறையில் இருந்து வெளியே வந்த வ.உ.சி.க்கு தமிழ்நாட்டு அரசியலே மாறி இருந்ததைப் பார்த்தார். அதன்பிறகு தான் அரசியல் விடுதலையை விட முக்கியமானது சமுதாய விடுதலை என்று முடிவுக்கு வந்தார்.

காங்கிரசுக்குள் இருந்த பெரியாருக்கு ‘ஞானசூரியன்' புத்தகம் கொடுத்து புராண அநீதிகளைச் சுட்டிக்காட்டியவர் வ.உ.சி.யே. சுயமரியாதை இயக்க மாநாடுகளில், பார்ப்பனரல்லாதார் இயக்க மாநாடுகளில் கலந்து கொண்டார். தேசம் எல்லாவிதங்களிலும் நாசமானதைப் பார்த்த பரிதவிப்பில் 1936 ஆம் ஆண்டு மறைந்தும் போனார்.

அன்றைய அரசியல் சூழல் எப்படி இருந்தது என்பதற்கு உதாரணமாக ஒருகாட்சியைச் சொன்னால் சரியாகப் புரியும். வ.உ.சி.க்குச் சிலை வைக்க வேண்டும் என்று ம.பொ.சி கடுமையாக முயற்சி எடுக்கிறார். சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவரான எஸ்.சத்தியமூர்த்தியிடம் தான் பணம் கேட்டதாகவும், அவர் மறுத்ததாகவும் ம.பொ.சி எழுதுகிறார். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வ.உ.சி.க்கு சிலை வைக்க தான் முயற்சித்த போது எஸ்.சத்தியமூர்த்தி எதிர்த்தார் என்றும், தன்னை கடுமையாக விமர்சித்தார் என்றும், ‘ஜஸ்டிஸ் கட்சிக்காரருக்கு எதற்காக சிலை வைக்க வேண்டும்?' என்று அவர் கேட்டார் என்றும் ம.பொ.சி எழுதுகிறார். (எனது போராட்டம், பக்கம் 144 - 148) அதே சத்தியமூர்த்தியை அழைத்து வந்து சிலை திறக்க வைத்தார் ம.பொ.சி.

இதோ காட்சிகள் மாறுகிறது. ஒரு சிலைக்காக அன்று எத்தனையோ போராட்டங்கள்! எந்த வ.உ.சி.யின் தியாகம் போற்றப்பட வில்லையோ, எந்த வ.உ.சியை மறைக்க முயற்சித்தார்களோ அதே வ.உ.சியைத் தமிழ்நாடே திரும்பிப் பார்க்க வைக்கும் மரியாதையை திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்தது. 1970களில் முதலமைச்சர் கலைஞர் செய்தார். இப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து கொண்டு இருக்கிறார்.

1968 இரண்டாவது உலகத் தமிழ்மாநாட்டின் போது வைக்கப்பட்ட பத்து சிலைகளில் ஒன்று வ.உ.சி.சிலை ஆகும்.1972 ஆம் ஆண்டு வ.உ.சி நூற்றாண்டு விழாவுக்கு பிரதமர் இந்திராவை அழைத்து வந்தார் முதல்வர் கலைஞர். தூத்துக்குடியில் சிலை திறக்கப்பட்டது. வ.உ.சி.க்கு அஞ்சல் தலையை பிரதமர் வெளியிட முதல்வர் கலைஞர் பெற்றுக்கொண்டார். தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சி பெயரைச் சூட்டச் சொன்னார் முதல்வர் கலைஞர். கப்பல் தளங்களுக்கு வ.உ.சி பெயர் சூட்டப்பட்டது. 1998 ஆம் ஆண்டு வ.உ.சி.யின் அனைத்து நூல்களையும் நாட்டுடமை ஆக்கி அவரது குடும்பத்துக்கு நிதி வழங்கினார் முதல்வர் கலைஞர்.

இன்றைய முதல்வர், தனது முதல் சுதந்திர உரையில் வ.உ.சியையே அதிகம் புகழ்ந்துரைத்தார். வ.உ.சியின் 150 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 14 அறிவிப்புகளைச் செய்தார். சென்னையில் திருவுருவச் சிலை, தூத்துக்குடியில் முக்கிய சாலைக்கு பெயர், வாழ்ந்த இல்லத்திலும் மணிமண்டபத்திலும் ஒலிஒளிக் காட்சிகள், படித்த பள்ளி சீரமைப்பு, பல்கலைக் கழகத்தில் ஆய்விருக்கை, நூல்கள் குறைந்த விலையில் விற்பனை, கப்பல் கட்டுமானத்துறையில் இருக்கும் தமிழர் ஒருவருக்கு 'கப்பலோட்டிய தமிழன்' விருது - என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதைப் பார்க்கும் போது தான் பாரதியின் கவிதை வரிகள் நிறைவேறியதாக உணர முடிகிறது!

“வேளாளன் சிறை புகுந்தான். தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ”
- என்றார் பாரதி. வ.உ.சி. மன்னராகப்போற்றப்படும் காலமாக கழகத்தின் ஆட்சி காலம் அமைந்துள்ளது. பாரதியின் கனவு நிறைவேறும் காலம் இது தான்! 110 ஆண்டுகளுக்கு முன்னால் அரங்கேறிய கவிதை இன்று அரசேறி இருக்கிறது!

banner

Related Stories

Related Stories