தமிழ்நாடு

“கம்பீரமாக அதே இடத்தில் எழுந்து நிற்கப்போகும் கலைஞர்” - அண்ணா சாலை கலைஞர் சிலை வரலாறு தெரியுமா?

கலைஞர் உயிரோடு இருந்தபோதே அவருக்கு சிலை அமைக்கப்பட்டது குறித்தும், அ.தி.மு.க-வினரால் தகர்க்கப்பட்டது குறித்தும் பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

“கம்பீரமாக அதே இடத்தில் எழுந்து நிற்கப்போகும் கலைஞர்” - அண்ணா சாலை கலைஞர் சிலை வரலாறு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையை அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரியிருந்தனர். சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, அண்ணா சாலையில் ஏதாவது ஒரு இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சிலை அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞருக்கு அண்ணா சாலையில் மீண்டும் சிலை அமைக்கப்படவிருக்கும் தகவல் கழக உடன்பிறப்புகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், கலைஞர் உயிரோடு இருந்தபோதே அவருக்கு அமைக்கப்பட்ட சிலை அ.தி.மு.க-வினரால் தகர்க்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவு பின்வருமாறு:

1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா உயிரோடு இருந்தபோதே, தன்னுடைய ஈரோட்டு மாணவர் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார் தந்தை பெரியார்.

1971ஆம் ஆண்டு பெரியார் திடலில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலைஞர் முன்னிலையிலேயே மீண்டும் அந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார் பெரியார்.

“யார் யாருக்கோ சிலை இருக்கிறது. செயற்கரிய செயல்களை செய்த முதல்வர் கலைஞருக்கு சென்னையில் சிலை வைக்கப்பட வேண்டும்” என்று தந்தை பெரியார் பேச, கலைஞரோ கூச்சத்தில் நெளிந்தார்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் கலைஞருக்கு சிலை என்கிற கருத்தை வழிமொழிந்தார். இதையடுத்து அந்த மேடையிலேயே கலைஞர் சிலை அமைக்கும் குழு நிறுவப்பட்டது.

சிலைக்குழுவுக்கு புரவலர் – தந்தை பெரியார், தலைவர் – தவத்திரு. குன்றக்குடி அடிகளார், துணைத்தலைவர்கள் – சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, சென்னை மாநகர மேயர் சா.கணேசன் மற்றும் ஏ.என்.சட்டநாதன் ஆகியோர். சிலை அமைப்புக் குழுவுக்கு செயலாளராக அறிவிக்கப்பட்டவர் ஆசிரியர் கி.வீரமணி.

மேடையிலேயே நன்கொடை கொடுத்து பணியை ஆரம்பித்து வைத்தார் தந்தை பெரியார்.

எனினும், கலைஞரோ கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக சிலை சமாச்சாரத்தை முடிந்தவரை ஒத்திப்போட்டார்.

“அய்யா அவர்களுக்கே சிலை இல்லாதபோது, அவரது சீடன் எனக்கு எதற்கு சிலை? அய்யாவே சொல்லியிருக்கிறார் என்பதால், அவருக்கு சிலை வடித்தபிறகு வேண்டுமானாலும் எனக்கு சிலை வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

“கம்பீரமாக அதே இடத்தில் எழுந்து நிற்கப்போகும் கலைஞர்” - அண்ணா சாலை கலைஞர் சிலை வரலாறு தெரியுமா?

தந்தை பெரியார் இயற்கையோடு இணைந்தபிறகு சென்னை அண்ணாசாலையில் (இப்போது புதிய தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் பகுதிக்கு எதிரே) தந்தை பெரியார் அவர்களின் சிலையை திறந்தார் கலைஞர். கூவம் நதி மீதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த பாலத்துக்கும் பெரியார் பெயரை சூட்டினார்.

அந்த நிகழ்விலே ‘கலைஞருக்கு சிலை’ என்கிற தந்தை பெரியாரின் நிறைவேறாத ஆசையை நினைவுறுத்திப் பேசிய அன்னை மணியம்மையார், இனியும் நாங்கள் காத்திருக்க மாட்டோம் என்று உரிமையோடு அறிவித்தார்.

கலைஞருக்கு சிலை வைக்க அப்போது புதியதாக உருவாகியிருந்த எம்.ஜி.ஆரின் அதிமுக, காழ்ப்புணர்ச்சியோடு நீதிமன்றத்துக்கு சென்று தடை வாங்க முயற்சித்தது. அந்த சட்டப் போராட்டத்தை திராவிடர் கழகம் நீதிமன்றத்தில் முறியடித்தது.

அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 21, 1975 அன்று அண்ணா சாலை – ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு சந்திப்பில், அன்னை மணியம்மையார் தலைமையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் கலைஞர் சிலையைத் திறந்து வைத்தார்கள்.

பன்னிரெண்டு ஆண்டு காலம் அங்கே கம்பீரமாக வீற்றிருந்தது கலைஞர் சிலை.

1987, டிசம்பர் 24ஆம் தேதி எம்.ஜி.ஆர் மறைந்தார். இதை சாக்காக வைத்துக்கொண்டு, ஏற்கனவே கலைஞருக்கு சிலை வைக்கப்பட்டிருந்ததைப் பொறுக்காத அ.தி.மு.கவினர், திட்டமிட்டு கூலிப்படையினரை ஏவி கலைஞரின் சிலையைத் தகர்த்தார்கள்.

இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, கலைஞர் சிலை தகர்ப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.

அந்தப் படத்துக்கு கவிதை எழுதி, தன்னுடைய பெருந்தன்மையைக் காட்டினார் கலைஞர்.

“உடன்பிறப்பே,

செயல்பட விட்டோர்

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்த சின்னத்தம்பி

என் முதுகிலே குத்தவில்லை

நெஞ்சிலேதான் குத்துகிறான்;

அதனால் நிம்மதி எனக்கு!

வாழ்க! வாழ்க!!”

என்று கவிதை எழுதினார்.

“கம்பீரமாக அதே இடத்தில் எழுந்து நிற்கப்போகும் கலைஞர்” - அண்ணா சாலை கலைஞர் சிலை வரலாறு தெரியுமா?

தகர்க்கப்பட்ட இடத்திலேயே புது சிலையை நிறுவுவோம் என்று திராவிடர் கழகம் சூளுரைத்தது. சிலை அமைக்கும் பணிகளையும் தொடங்கினார்கள். எனினும், கலைஞர் இம்முறை தனக்கு சிலை மீண்டும் வேண்டாம் என்று உறுதியாக மறுத்தார்.

கலைஞரின் மறைவுக்குப் பிறகு அதே இடத்தில் மீண்டும் சிலை வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை திராவிடர் கழகம் திரும்பத் திரும்ப தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வைத்துக்கொண்டே இருந்தது.

ஆசிரியர் கி.வீரமணி, “நம் இனமானத் தலைவர் கலைஞரின் சிலை ஒரு வரலாற்றுச் சின்னமாக, கம்பீரமாக அதே இடத்தில் எழுந்து நிற்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

அந்த நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அதே இடத்தில் முதல்வர் கலைஞர் சிலையை நிறுவ இப்போது தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.

ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை!

banner

Related Stories

Related Stories