தமிழ்நாடு

“இனி குடிசை மாற்று வாரியம் கிடையாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

'தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்பது 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“இனி குடிசை மாற்று வாரியம் கிடையாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

'தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்பது 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய மானியக் கோரிக்கைகளில் குடிசை மாற்று வாரியமும் இணைந்திருக்கிற காரணத்தால், அது சம்பந்தமாக ஓர் அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன்.

கோட்டையிலே இருந்தாலும் குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைக்காக, அவர்களுடைய முன்னேற்றத்திற்காகச் சிந்தித்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் முதன்முறையாக ஆட்சிக்கு வந்த போது, அந்த மக்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்காக குடிசை மாற்று வாரியம் என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கினார்.

அதன்மூலமாக, பல்லாயிரக்கணக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்தார். அன்றைக்கு மத்தியிலே அமைச்சராக இருந்த பாபுஜி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய பாபு ஜெகஜீவன்ராம் அவர்களே, அந்தத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டி, புகழ்ந்து பேசியிருக்கிறார்.

மேலும், இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களிலும் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டுமென்ற அவரது எண்ணத்தையும் அன்றைக்கு வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். அந்தளவிற்கு இந்தக் குடிசை மாற்று வாரியம் மிகச் சிறப்பாக தன்னுடைய கடமையைச் செய்திருக்கிறது; செய்து கொண்டு வருகிறது.

ஏழை எளிய மக்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த வாரியம், இனிமேல் 'தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்' (TAMILNADU URBAN HABITAT DEVELOPMENT BOARD) என்ற பெயரிலே அழைக்கப்படும் என்பதை இந்த மன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல; குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும் உயர்த்திட வேண்டும்; அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்பதை நம்முடைய பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories