தமிழ்நாடு

சட்டப்பேரவையில் ‘வலிமை’ அப்டேட் கொடுத்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு!

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் ‘வலிமை’ அப்டேட் கொடுத்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தொழித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

ஆவடி பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை டைடல் பார்க் நிறுவனம் அமைத்து வரும் தகவல் தொழில்நுட்ப பூங்காவின் கட்டுமான பணி பிப்ரவரி 2023ல் முடிக்கப்படும்.

நிலையான சுரங்க கொள்கை ஒன்று உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும், நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலச்சரிவு அபாயப் பகுதிகளை கண்டறிவதற்கு புவி தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்வற்கு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை திட்டமிட்டுள்ளது.

சென்னை - கன்னியாகுமரி, சென்னை - பெங்களூரு, பெங்களூரு - கொச்சி மற்றும் தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில் பெருவழி ஆகிய நான்கு பெருவழிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்களுக்கு மேம்பட்ட சூழல் அமைப்பை வழங்கிடும் வகையில் குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்றவகையில் ஒருங்கிணைந்த தொழில் நகரியங்களை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

வழிகாட்டி நிறுவனம், நிதிநுட்ப கொள்கை, உயிர் அறிவியல் - ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் உற்பத்திக் கொள்கை, ஏற்றுமதித்திட்டம், திருத்தப்பட்ட மின் வாகனக் கொள்கை போன்றவைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 45,000 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைப்பதற்கான நில வங்கிகள் உருவாக்கப்பட்டு, தொழில்துறையில் பின் தங்கிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய நில வங்கிகள் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும்.

நாட்டிலேயே முதன்முறையாக பன்னாட்டு அறைகலன் பூங்கா ஒன்று தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் உருவாக்கப்படும். அதிக அளவிலான அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உருவாகும் இப்பூங்கா டிசம்பர் 2021ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவ உபகரணத் தொழிற்பூங்கா ஒன்று சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில் 150 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் எனவும், மணப்பாறை, திண்டிவனம் மற்றும் தேனி ஆகிய இடங்களில் தலா 100 முதல் 150 ஏக்கர் பரப்பளவில் உணவுப்பூங்காங்கள் அமைக்கப்பட உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் 250 ஏக்கரில் தோல் பொருள் தொழில்பூங்கா ஏற்படுத்தப்படும்.

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் நீர் தேவையை பூர்த்தி செய்ய 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் ஆலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

‘வலிமை’ என்கிற பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ‘நெய்தல்’ என்ற பெயரில் புதிய உப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்படும்.

இவ்வாறு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories