தமிழ்நாடு

7.5% உள் இட ஒதுக்கீடு - மாணவர்களுக்கு ஜாக்பாட்.. பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது தி.மு.க அரசு!

அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைப்பதை பெருமையாக கொள்ள வேண்டும் என புதியதாக பொறுப்பேற்ற திமுக அரசும் பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறது

7.5% உள் இட ஒதுக்கீடு - மாணவர்களுக்கு ஜாக்பாட்.. பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது தி.மு.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தினகரன் நாளேட்டின் 27-08-2021 தலையங்கம் வருமாறு:

வரும் செப். 1 முதல் பள்ளிகளையும் (9 - 12ம் வகுப்பு வரை), கல்லூரிகளையும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் கல்வியால் மன அழுத்தத்தில் தவித்த மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாத நிலையில், அரசு பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை பெற்றோர் சேர்த்து வருகின்றனர். கடந்த கல்வியாண்டில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் வரை சேர்ந்துள்ள நிலையில், நடப்பு கல்வியாண்டில் (2021-22) சுமார் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைப்பதை பெருமையாக கொள்ள வேண்டும் என புதியதாக பொறுப்பேற்ற திமுக அரசும் பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது திமுக ஆட்சிக்கு வந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்படுமென தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட அப்போதைய அ.தி.மு.க அரசு அவசரம், அவசரமாக உள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது.

தற்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையில் 7.5 சதவீதம் இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார். பேரவையில் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறி உள்ளது. இதன்மூலம் தொழிற்கல்விகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தி.மு.க ஆட்சியின்போது, கடந்த 1997ல் கிராமப்புற பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குக் கல்விக் கட்டணச்சலுகை அளிக்கப்பட்டது. 2006ம் ஆண்டு தொழிற்கல்விக்கான நுழைவுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், நேற்றைய பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, 2,098 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும். உயர்கல்வித்துறையை மேம்படுத்த வல்லுநர் குழு, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்திறனை வளர்த்துக் கொள்ள ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள், 18 வயதிற்குட்பட்ட குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது; 3 சிறந்த எழுத்தாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும், பள்ளிக்கு வந்து படிக்க முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டிற்கு சென்று கல்வி மற்றும் இயன்முறை சிகிச்சை அளிக்கும் திட்டம், கூடுதலாக அரசு கல்லூரிகள் உள்ளிட்ட அறிவிப்புகள் தமிழக மக்களிடையே வெகுசிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

கல்வியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான அடிப்படை என்பதை கருத்தில் கொண்டு, மாணவர்களின் கல்வி நலனில் தி.மு.க அரசு எந்தளவுக்கு அக்கறையோடு செயல்படுகிறது என்பதற்கு நேற்றைய கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories