தமிழ்நாடு

கொடநாடு கொலை - கொள்ளை வழக்கு : “நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்று.. விழி பிதுங்கி நிற்கும் EPS” !

“நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்று; அதனாலே முழிக்குதே இ.பி.எஸ். கண்ணு!”

கொடநாடு கொலை - கொள்ளை  வழக்கு : “நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்று.. விழி பிதுங்கி நிற்கும் EPS” !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொடநாடு கொலை - கொள்ளை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று முடியும் தருவாயிலுள்ளது. விசாரணை நேர்மையாக நடந்து வரும்போது மீண்டும் விசாரணை ஏன்?’ - என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியும், அவருக்கு ஆதரவாக பேசுபவர்களும் கேட்டு வருகின்றனர்.

அந்த கொலை, கொள்ளை வழக்கின் புலன் விசாரணை பலவித ஐயம் நிறைந்த கேள்விகளோடு நடத்தப்பட்டது! அவிழ்க்க முடியாத பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கப்படவில்லை. உண்மைகளை தெளிவாக்காமலேயே ஒருசிலரை மட்டும் குற்றவாளியாக்கி நீதிமன்றத்தில் விசாரணை துவங்கப்பட்டது! குற்றம் செய்த அம்புகள் கிடைத்து விட்டன; ஆனால் எய்த பேர்வழிகள் யார் என்பதின் முழு ஆய்வுகள் முடியாமலேயே நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது வழக்கு!

நீதிமன்றத்துக்கு வழக்கு சென்ற பிறகாவது, அதனை அரசு தரப்பு தீவிரமாக தீர்க்கமாக நடத்தியதா? ஒரு முன்னாள் முதல்வர் ஆசை ஆசையாக நேசித்து, அணு அணுவாக ரசித்துக் கட்டி உருவாக்கி, ஓய்வு கிடைத்த நேரம் மட்டுமின்றி ஓய்வை உருவாக்கிக் கொண்டு தன் தோழியுடன் பறந்து மகிழ்ந்து உலாவிய இடம் கொடநாடு. “அக்கா அங்கே போனால் குழந்தையாகவே மாறிவிடுவார்” - என முன்னாள் முதல்வரின் உடன்பிறவா சகோதரி நினைத்துப் பூரித்து ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்தாரே; அந்த இடத்தை சினிமாக்களில் வரும் பேய் பங்களா போல மாற்றி அந்த இடத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளைச் சம்பவத்தை, அந்த ‘அக்கா’ அமைத்த அரசு ஏன் அத்தனை அலட்சியத்தோடு கையாண்டது என்பதன் பின்னணி மக்களுக்கும், ‘அம்மா’வின் மீது அளப்பரிய பற்று வைத்திருந்த அவரது சில அப்பாவித் தொண்டர்களுக்கும் தெரிய வேண்டாமா?

உதக மண்டலத்தின் நீதி மன்றத்தில் இந்த கொடநாடு கொலை -கொள்ளை வழக்கு விசாரணை ஆரம்பமாகிறது. விசாரணை நடக்கும் போது தான், ஒரு திடுக்கிடும் செய்தி ஏடுகளில் சிறிய அளவில் வருகிறது. பலரது கண்ணில் அந்தச் செய்தி அன்று பட்டிருக்க முடியாது. அந்த அளவு முக்கியத்துவம் அற்ற செய்தி போல அந்த அதி முக்கிய செய்தி வெளிவருகிறது. பல ஏடுகள் அந்தச் செய்தியை இருட்டிப்பு செய்திருந்தன. 2020 ஜனவரி 20-ந் தேதிஇந்து ஏட்டில், “ Key Witness in Kodanadu break - in and murder case Missing. Police form teams to Trace him. அதாவது கொடநாடு பங்களா கொள்ளை - கொலை வழக்கின் முக்கிய சாட்சியைக் காணவில்லை. காவல் துறை தனிப்படை அமைத்து அவனைத் தேடுகிறது. - இது தான் அந்த செய்தி! கொடநாடு கொலை-கொள்ளை வழக்கை எத்தனை அலட் சியத்தோடு எடப்பாடி அரசும், அவரது அதிகார எல்லைக்குள் உள்ள காவல் துறையும் கையாண்டது என்பதற்கு இதைவிட வேறு சாட்சியம் வேண்டுமா?

யார் அந்த முக்கிய சாட்சி? கிருஷ்ணதாபா எனும் காவலாளி! ஜெயலலிதா கொடநாடு சென்ற போதெல்லாம் விறைத்து நின்று ‘சல்யூட்’ அடித்து அவருக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்டியவர்களில் ஒருவர்! சம்பவம் நடந்தபோது, அவருடைய சகாக்களில் ஒருவராகிய ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டுத் தலைகீழாகக் கட்டித் தொங்க விடப்பட்டார். இந்த கிருஷ்ண தாபாதாக்குதலில் மயக்கமுற்றார்!

முக்கிய சாட்சி மட்டுமல்ல; நடந்த சம்பவங்களை மயக்கமுறுமுன்வரை “கண்ணால் பார்த்தவர். (eye witness)” அத்தகைய இன்றியமையாத சாட்சி தான் மாயமாகி விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது! ஒரு முன்னாள் முதல் மந்திரியின் எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை- கொள்ளைச் சம்பவம் தொடர்பாக முக்கிய சாட்சியாக உள்ள நபரை எப்படி போலீஸ் தப்பி ஓட விட்டது? ‘மாயமாகி விட்டார்’- எனக் கூறுமளவு அந்த வழக்கை எப்படி அரசு தரப்பு பொறுப்பற்ற தன்மையில் நடத்தியது’ என்பது அன்று எழுந்த கேள்வி.

தலைமறைவானதாக போலீஸ் கூறிய கிருஷ்ணதாபா அரசுத் தரப்பின் முதல் சாட்சி, அதாவது விட்னஸ் நம்பர் 1. (Witness Number 1) கிருஷ்ணதாபா தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்று அங்கு வேலை தேடி கிடைக்காததால் அசாமுக்கோ மேற்கு வங்கத்திற்கோ சென்றிருக்கக்கூடும். அவனிடம் மொபைல்போன் இல்லாததால் அவன் சென்ற இடத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. கிருஷ்ணதாபாவைக் கண்டு பிடிக்கும் பணி கடந்த இரண்டு வாரங்களாக நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் பிடித்துவிடலாம் என நம்பிக்கை உள்ளது - என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இவை யாவும் ‘இந்து’ ஏடு அப்போது தெரிவித்த தகவல்கள். ‘குதிரையை ஓடவிட்டுலாயத்தைப் பூட்டிய கதை’- என்பார்களே; அப்படி ஒரு கதை அன்று கூறப்பட்டது.

இது நடந்தது 2020 ஜனவரியில்! இதன் பின்னர் அக்டோபர் 2020ல் வந்த ஒரு செய்தி இந்த வழக்கை எவ்வளவு உத்வேகத்துடன் அரசுத்தரப்பு நடத்தியது என்பதை தெளிவாக்கக் கூடிய ஒன்றாகும். அக்டோபர் 6-ஆம் தேதி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் வெளிவந்த செய்தி இது!. “திங்களன்று நடந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மூன்று சாட்சியங்களை விசாரித்த மாவட்ட மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் அக்டோபர் 8- தேதிக்கு ஒத்திவைத்து. அப்போது அரசு வழக்கறிஞர் நந்தகுமார், மேலும் 32 சாட்சியங்கள் விசாரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதற்கு முன்பாக ஆகஸ்ட் 24, 2020ல் போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இரண்டே இரண்டு பேர்தான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். மீதமுள்ள 8 பேர் தலைமறைவாகிவிட்டனர் எனக் கூறப்பட்டது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பும், போலீசும் எத்தனை மெத்தனமாக நடந்து கொண்டனர் என்பதற்கு இதை விட ஆதாரம் வேண்டுமா? அதன் பின்னர் ஆஜராகாத அனைவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்தது நீதி மன்றம். இப்படி குற்றவாளிகளையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாது - முக்கிய சாட்சியங்களையும் கொண்டு வராது - அரசு தரப்பு இந்த வழக்கில் அலட்சியம் காட்டியது ஏன் என்பதே மிகப் பெரிய வினா! வினா மட்டுமல்ல. அதன் பின்னே ஒளிந்திருக்கும் மர்ம நிகழ்வுகள் என்ன? இந்த நிலையில்தான் ‘பான்டோரா பாக்ஸ்’ திறக்கப்படுகிறது!.

ஒரு மாநிலத்தின் முடிசூடா ராணி போல சர்வாதிகார ஆட்சி நடத்திய தலைவி! அவரது மறைவுக்குப் பின் அவர் அமைத்த ஆட்சி நடைபெறுகிறது. அவர் நேசித்து வாழ்ந்த எஸ்டேட் மாளிகையில் கொலை - கொள்ளை! ஆட்சியில் இருப்பவர்கள் அங்கு சென்று என்ன நடந்தது என்று கண்டறிய எண்ணவுமில்லை! செல்லவுமில்லை! பல மர்மச் சாவுகளுக்குப் பிறகு விசாரணை! அங்கும் பல கண் துடைப்புச் சம்பவங்கள்! பின்னணியில் என்ன நடைபெற்றது?

சாதாரண மனிதர்களால் இத்தனை எத்துவேலைகளைச் செய்து தப்பிக்க முடியாது! அப்படியானால் அந்த நேரத்தில் தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி அடுக்கடுக்கான அக்கிரமங்களைச் செய்துவிட்டு, கல்லுளி மங்கன் போல கடப்பாரையை முழுங்கிவிட்டு கஷாயம் குடிக்க முயலும் கயவர்கள் முகமூடிகிழிய வேண்டாமா? இந்த நிலையில் நமது நினைவுக்கு வரும் பாடல் வரிகள் இது தான். (சில மாற்றங்களுடன்) “நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்று; அதனாலே முழிக்குதே இ.பி.எஸ். கண்ணு!”

- சிலந்தி

(முரசொலி 25-8-2021)

banner

Related Stories

Related Stories