தமிழ்நாடு

ஜனநாயகத்தின் அடிப்படையே விவாதங்கள்தான்.. மோடி ஆட்சியில் விவாதமும் இல்லை; ஜனநாயகமும் இல்லை: நீதிபதி தாக்கு

ஜனநாயகத்தின் அடிப்படையே விவாதங்கள்தான். விவாதங்களே இல்லாத சூழல் சர்வாதிகாரத்துக்கும், எதேச்சதிகாரத்துக்கும் இட்டுச் செல்லும் என முரசொலி தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்தின் அடிப்படையே விவாதங்கள்தான்.. மோடி ஆட்சியில் விவாதமும் இல்லை; ஜனநாயகமும் இல்லை: நீதிபதி தாக்கு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 21, 2021) தலையங்கம் வருமாறு:

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்களின் பேச்சு இந்திய மக்களின் மனதின் குரலாக இருக்கிறது. உண்மையான ‘மன்கி பாத்' என்பது அதுதான்!

நாட்டின் 75 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் கொடியேற்றினார் தலைமை நீதிபதி என்.வி.ரமணா. பொதுவாக நீதிபதிகள், நீதிமன்றத்தில் மட்டும்தான் பேசுவார்கள். வெளியில் அதிகம் பேசமாட்டார்கள். அதையும் மீறி தலைமை நீதிபதி பேசி இருக்கிறார் என்றால், அவரைப் பேசத் தூண்டி இருக்கிறது நாட்டின் நிலைமை. “சுதந்திரப் போராட்டக் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் களத்தில் நின்று மக்களைத் திரட்டியவர்களில் முன் வரிசையில் நின்றவர்கள் அன்றைக்கு இந்தியாவில் தலை சிறந்த வழக்கறிஞர்களாக இருந்தவர்கள்தான்.

இந்திய வழக்கறிஞர்கள் அநீதிக்கு எதிரான அந்தப் பாரம்பர்யத்தை விட்டுவிடக்கூடாது. பணம் சம்பாதிப்பதற்கான தொழிலாக இதைக் கருதாமல் தங்களது அறிவையும், ஆற்றலையும் இந்தச் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதில் வழக்கறிஞர்கள் முன்னிற்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டதன் மூலமாக சமூகத்தில் அநீதி அதிகமாகத் தலைவிரித் தாடுகிறது என்பதை தலைமை நீதிபதியே ஒப்புக்கொண்டுவிட்டார். அனைத்து வழக்கறிஞர்களையும் பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்ததும் வரவேற்கத்தக்க செயல்பாடே!

இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி பேசியது தான் மிகமிக முக்கியமானது. அழுத்தமானது. “நாடாளுமன்றத்தில் இதற்கு முன்பு அறிவுப்பூர்வமான விவாதங்கள் நடந்தன. அந்த விவாதங்கள், சம்பந்தப்பட்ட சட்டங்களின் உட்பொருள் என்ன என்பதை அறிந்துகொள்ளவும், ஒரு குறிப்பிட்ட சட்டம் எந்த நோக்கத்திற்காகக் கொண்டு வரப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் நீதிமன்றங்களுக்கு உதவி செய்தன. நாடாளுமன்றத்தில் தொழில் தகராறுகள் சட்ட மசோதா கொண்டு வரப்பட்ட போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.இராமமூர்த்தி அந்த விவாதத்தில் பங்கேற்று விரிவாக உரையாற்றினார். இந்தச் சட்டம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை அது எந்த விதத்தில் எல்லாம் பாதிக்கும் என்பதைச் சொன்னார். இதேபோல் பல சட்டங்கள் விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அந்த விவாதக் குறிப்புகளே இந்தச் சட்டம் குறித்து ஆராயும் போது நீதிமன்றங்கள் புரிந்து கொள்ள உதவியாக அமைந்துள்ளன. ஆனால் இப்போது மிகவும் மோசமான ஒரு நிலை நிலவுகிறது. இன்றைக்கு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்கள் பற்றி ஒரு தெளிவு இல்லை. இந்தச் சட்டங்கள் என்ன நோக்கத்துக்காக நிறைவேற்றப்படுகின்றன என்ற தெளிவு இல்லை. விவாதங்கள் இல்லை. இது குழப்பமான சூழலை உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக மேலும் பேசுவதற்கு விரும்பவில்லை” என்றும் தலைமை நீதிபதி பேசி இருக்கிறார்.

“இது சமூக வாழ்விலும், பொதுவாழ்விலும் இந்தியாவின் சட்ட சமூகம் தலைமையேற்க வேண்டிய தருணம்” என்று சொல்லி இருக்கிறார் தலைமை நீதிபதி. ஒரு தலைமை நீதிபதியையே பொதுவெளியில் கொந்தளிக்க வைக்கும் அளவுக்கு இந்த நாட்டில் நாடாளுமன்றச் செயல்பாடுகள் அமைந்துவிட்டன. ‘இந்தியாவின் இறையாண்மைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வண்ணம் இங்குள்ள முக்கிய மனிதர்களின் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான உண்மையான பின்னணியை விசாரிப்பதற்கான விவாதம் தேவை’ என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தார்கள். விவாதம் செய்ய ஆளும் பா.ஜ.க விரும்பவில்லை. அதனால் நாடாளுமன்றமே முடங்கியது. பதில் சொல்ல மறுக்கும் பா.ஜ.க., நாடாளுமன்றத்தையே நடத்தவிடாமல் செய்து விட்டது. எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு மத்தியில் அதையே சாதகமாக ஆக்கிக்கொண்டு பல்வேறு சட்டங்களை விவாதம் இல்லாமல் நிறைவேற்றி விட்டார்கள். இதைத்தான் தலைமை நீதிபதி விமர்சிக்கிறார். விவாதமே இல்லாமல் சட்டத்தை நிறைவேற்றுவது என்பது ஜனநாயகமே இல்லாமல் நாடாளுமன்றம் நடப்பதைப் போல. அதுதான் பா.ஜ.க. வின் கலாச்சாரமாக மாறிவிட்டது.

நாடாளுமன்றத்தில் சமீபகாலமாக கொண்டுவரப்படும் மசோதாக்கள், சட்டங்கள் விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்படுகின்றன. பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக விவாதமே இல்லாமல் சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று அனுமதி தரப்பட்டுள்ளதா? இல்லை! சர்ச்சைக்குரிய சட்டமாக இருந்தால் நாடாளுமன்ற தெரிவுக் குழுக்கள், நிலைக்குழுக்களின் ஆய்வுக்கு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் அந்த வழக்கத்தையே மறக்கடித்து விட்டார்கள்.

எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பிக்கொண்டு இருக்கும் போது மசோதாக்களைத் தாக்கல் செய்து நிறைவேற்றி விடுகிறார்கள். தேசிய காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகச் சட்டத்திருத்த மசோதாவும், பழங்குடியினர் தொடர்பான அரசியல் சாசன மசோதாவும் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பிக் கொண்டு இருந்த போது நிறைவேற்றப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் பேசும் போது, “இந்த சபையில் முப்பது மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு மசோதா நிறைவேறுவதற்கும் 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நிலைக் குழுக்களின் ஆய்வுகள் இல்லாமலேயே 11 சதவிகித மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. பிரதமர் இந்த சபைக்கு வந்து எந்தக் கேள்விக்கும் பதில் தரவில்லை” என்று சொன்னார். இதுதான் பா.ஜ.க ஆட்சி கால ஜனநாயகமாக இருக்கிறது. ஜனநாயகம் அல்ல, மோடிநாயகமாக இருக்கிறது.

கடைசி நேரத்தில் திடீரென அலுவல் ஆய்வுக் குறிப்பேட்டில் மசோதாக்களின் பெயர்கள் சேர்க்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இவை அனைத்தும் பா.ஜ.க.வுக்கு ஜனநாயகத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை என்பதையே காட்டுகிறது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நவம்பர் 26 முதல் இந்தியநாட்டின் விவசாயிகள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கந்தர்வ சிங் போராட்டக் களத்துக்கு வந்துள்ளார். அவருக்கு வயது 110. சுதந்திரப் போராட்டத் தியாகி அவர். “பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நான் போராடும் போது எனக்கு முப்பது வயது. இப்போதும் அந்தக் காலத்தில் இருப்பதைப் போல உணர்கிறேன். அந்த பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும், இந்த அரசாங்கத்துக்கும் ஒற்றுமை இருக்கிறது. நாட்டில் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் பார்க்கும் போது பா.ஜ.க. இன்னும் எத்தனை மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றப் போகிறதோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது” என்று அவர் பேசி இருக்கிறார்.

110 வயது தியாகி முதல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வரை பேசுவது ஜனநாயகத்துக்காக! ஜனநாயகத்தின் அடிப்படையே விவாதங்கள்தான். விவாதங்களே இல்லாத சூழல் சர்வாதிகாரத்துக்கும், எதேச்சதிகாரத்துக்கும் இட்டுச் செல்லும். அதைத் தடுக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு என்பதைத்தான் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்கள் நாட்டுக்குச்சொல்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories