தமிழ்நாடு

பெற்ற மகளின் குடும்பத்தையே வெடி வைத்து கொல்ல முயன்ற தந்தை.. சொத்து பிரச்சனையால் திருப்பத்தூரில் பயங்கரம்!

சொத்து தகராறு காரணமாகப் பெற்ற மகளின் குடும்பத்தையே வெடிவைத்து கொலை செய்ய முயன்ற தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்ற மகளின் குடும்பத்தையே வெடி வைத்து கொல்ல முயன்ற தந்தை.. சொத்து பிரச்சனையால் திருப்பத்தூரில் பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பத்தூர் மாவட்டம், கொண்டநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு நந்தினி, யுவராஜ், கார்த்தி என மூன்று பிள்ளைகளும், இரண்டாவது மனைவிக்கு அனிதா, அகிலா, அஜித் என மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

இதில் இரண்டாவது மனைவியின் மகள் அனிதாவிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் என்பவருடன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் மாமனார் ராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நரசிம்மன் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து ராஜா தனக்கு சொந்தமான நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாட்களுக்கு விற்றுள்ளார். இந்த நிலம் மூன்று நபர்களிடம் கைமாறிய பிறகு நரசிம்மன் வாங்கியுள்ளார். இதற்கு மாமனார் ராஜா, முதல் மனைவி மற்றும் அவரது மகன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களுக்கே அந்த நிலத்தை எழுதிக்கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இதற்கு நரசிம்மன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாவும், அவரது மகன்களும் நரசிம்மன் குடும்பத்தைக் கொலை செய்யச் சதி திட்டம் தீட்டியுள்ளனர்.

பெற்ற மகளின் குடும்பத்தையே வெடி வைத்து கொல்ல முயன்ற தந்தை.. சொத்து பிரச்சனையால் திருப்பத்தூரில் பயங்கரம்!

இதன்படி, நேற்று மழை பெய்த நிலையில், இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நரசிம்மன் வீட்டை ஜெலட்டின் வெடிவைத்து தகர்க்க முயன்றனர். அப்போது சத்தம் கேட்டு வீட்டிலிருந்து ஆட்கள் வெளியே வந்ததால், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர், வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்த நரசிம்மன் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு மின்சார வயர் எடுத்துச் செல்லப்பட்டு அருகிலிருந்த மின் கம்பத்தில் இணைப்பு கொடுக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து போலிஸாருக்கு நரசிம்மன் புகார் செய்தார். இவரது புகாரின் பெயரில் போலிஸார் மாமனார் ராஜா, அவரது மகன்கள் யுவராஜ் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக சொந்த மகளின் குடும்பத்தையே கொலை செய்ய முயன்ற தந்தையின் செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories