தமிழ்நாடு

“அத்தனை புகார்கள் வந்தும் அதே நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியது ஏன்?” : வலுவாக சிக்கிக்கொண்ட ஓ.பி.எஸ்!

ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஒப்பந்த நிறுவனங்கள் குறித்தும் விசாரிக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

“அத்தனை புகார்கள் வந்தும் அதே நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியது ஏன்?” : வலுவாக சிக்கிக்கொண்ட ஓ.பி.எஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.க ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்புக் கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து, அங்கு சமீபத்தில் குடியமர்த்தப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக ரூ.112.6 கோடி செலவில் 864 வீடுகள் கட்டித் தருவதற்குக் கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டு 2019-ல் கட்டி முடிக்கப்பட்டது.

இதற்கான ஒப்பந்தம் ‘பி.எஸ்.டி எம்பயர் கன்ஸ்ட்ரக்ஷன்’ என்ற நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டதாகவும், ஏற்கெனவே இந்நிறுவனத்தின் மூலம் செய்து முடிக்கப்பட்ட கட்டுமானங்கள் குறுகிய காலத்திற்குள்ளாகவே உடைந்து விழுந்துள்ளதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிறுவனத்தால் தென்பெண்ணை ஆற்றில் ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்டு, மூன்று மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில் அதன் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.

இந்நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூ.60 கோடியில் கட்டிய தடுப்பணையின் அடித்தளம் மோசமாக இருந்தது. செங்கல்பட்டு வாயலூர் பாலாற்றில் கட்டப்பட்ட தடுப்பணையிலிருந்து நீர்க் கசிவு ஏற்பட்டது.

நேற்று சட்டப்பேரவையில் எழும்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பரந்தாமன், புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியக் கட்டிட விவகாரம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர் “குறிப்பிட்ட கட்டுமான நிறுவனம் கட்டிய அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டிய உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாகப் பொறியாளர் அன்பழகன் ஆகியோர் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, ஏற்கெனவே பி.எஸ்.டி நிறுவனத்தின் மூலம் செய்து முடிக்கப்பட்ட கட்டுமானங்கள் குறுகிய காலத்திற்குள்ளாகவே உடைந்து விழுந்துள்ளன என்ற தொடர் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையிலும் இந்நிறுவனத்திற்கு அ.தி.மு.க அரசின் பல்வேறு டெண்டர்கள் தொடர்ந்து வழங்கப்பட்டது எப்படி எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

துறையின் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நேரடிக் கண்காணிப்பில் கட்டப்பட்ட கட்டுமானத்தில் முறைகேடுகள் கண்டறியப்பட்டிருப்பதால் ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஒப்பந்த நிறுவனங்கள் குறித்தும் விசாரிக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories