தமிழ்நாடு

”எங்கள் இலக்கு மக்கள் நலன்தான்; திசை மாறமாட்டோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

"வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களது இலக்கு மக்கள் நலன் மட்டும்தான், இதிலிருந்து திசை மாறமாட்டோம்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”எங்கள் இலக்கு மக்கள் நலன்தான்; திசை மாறமாட்டோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் துணை ஆசிரியர் பி.கோலப்பனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த சிறப்புப் பேட்டி வருமாறு:-

செய்தியாளர்: பத்து ஆண்டுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியைப் பிடித்து நீங்கள் முதலமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் பெரும்தொற்று மிகப்பெரிய சவாலாக அமைந்தது. அந்நேரத்தில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு ஓராண்டுக்கு முன்பே கொரோனா என்ற பெருந்தொற்று தமிழ்நாட்டில் பரவிவிட்டது. அந்த நேரத்திலும் ஒரு ஆளும்கட்சி எந்த மாதிரி செயல்படுமோ அதைப்போல பொறுப்புணர்வுடன் தி.மு.க. செயல்பட்டது. "ஒன்றிணைவோம் வா" என்ற திட்டத்தின் மூலமாக மக்களுக்கு தேவையான மளிகை மற்றும் காய்கறிகளை வழங்கினோம். இலட்சக்கணக்கான மக்களுக்கு உணவுகள் தயாரித்து கொடுத்தோம். வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ டிரைவர்கள் போன்றவர்களுக்கு நிதி உதவி வழங்கினோம்.

தொற்றுப் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தி இருக்கிறோம்!

கொரோனா முதல் அலை முடிந்து இரண்டாவது அலை தொடங்கிய போதுதான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் வரை தொற்று பரவிய நேரமாக அது இருந்தது. அத்தகைய சூழலை இன்று முழுமையாகக் கட்டுப்படுத்தி இருக்கிறோம். எந்த அலையையும் தாங்கும் வல்லமை கொண்டதாக அரசின் உள்கட்டமைப்பை உயர்த்தி இருக்கிறோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்தான் மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதை மனதில் வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க. வெற்றி பெறுகிறது, பெரும்பான்மை பெறுகிறது என்று தெரிந்ததும் என்னை வாழ்த்துவதற்காக வந்த அதிகாரிகளிடம் கொரோனா பற்றிதான் ஆலோசனை நடத்தினேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆட்சிக்கு வந்துவிட்டோம், முதலமைச்சர் ஆகிவிட்டோம் என்ற மகிழ்ச்சி கூட எனக்கு இல்லை. கொரோனா பரவல் என்பது என் முகத்தில் இருந்த சிரிப்பை நீக்கிவிட்டது.

அதற்காக நான் சோர்ந்துவிடவில்லை. அவநம்பிக்கை அடையவில்லை. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து தமிழ்நாட்டை எப்படியும் காப்பாற்றிவிட தி.மு.க. அரசால் முடியும் என்ற மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் சவாலாக - வாய்ப்பாக இதனை எடுத்துக் கொண்டேன். பொறுப்பேற்ற நொடியிலிருந்து அதிகாரபூர்வமான செயல்பாடுகள் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு நொடியும் நான் தொடங்கி, மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், துறைச் செயலாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை சார்ந்த அனைவருமே 24*7 என செயல்பட்டோம். இது கடுமையான காலம்தான் என்பது தெரிந்தது. ஆனால், கடக்க முடியாத காலம் அல்ல என்பதுதான் என் மனநிலை. அதனை மன உறுதிமிக்க செயல்பாடுகளால் நிறைவேற்றினோம். நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்களின் ஒத்துழைப்பால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. அவர்கள் தான் அனைத்து பாராட்டுக்கும் உரியவர்கள்.

”எங்கள் இலக்கு மக்கள் நலன்தான்; திசை மாறமாட்டோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

போர்க்கால அடிப்படையில்உடனுக்குடன் நடவடிக்கை!

செய்தியாளர்: கொரோனா இரண்டாம் அலை அடுத்த நெருக்கடியை உருவாக்கியது. தடுப்பூசித் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைத் தட்டுப்பாடு என வரிசையான நெருக்கடிகள். அப்போது எப்படி உணர்ந்தீர்கள்?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கடந்த அ.தி.மு.க.ஆட்சியில் வெறும் "ஷோ' காண்பிக்கப்பட்டது என்பதை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முழுமையாக உணர்ந்தோம். கொரோனா குறித்த முழு உண்மைகளைக் கூட மறைத்து விட்டார்கள். அனைத்து மருத்துவப் பொருட்களும் அநியாய விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. மரணங்கள் கூட மறைக்கப்பட்டது. எல்லாம் சரியாக இருப்பது போல தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு நாட்டு மக்களையும் அ.தி.மு.க. அரசு ஏமாற்றி வந்தது. நாங்கள் பொறுப்பேற்ற போது உங்கள் கேள்விகள்தான் எங்கள் அரசு முன்பு சவால்களாக இருந்தன. எனவே போர்க்கால அடிப்படையில் செயல்பட்டது அரசு. வார் ரூம் அமைக்கப்பட்டு, மக்களின் தேவை என்ன மருத்துவக் கட்டமைப்பில் என்னென்ன பற்றாக்குறை என்பதை அறிந்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

படுக்கை வசதிகளை விரைவாக அதிகப்படுத்தி, பல இடங்களிலும் நானே நேரில் சென்று புதிய வார்டுகளைத் திறந்து வைத்து பார்வையிட்டேன். ஆக்சிஜன் வசதி தேவைப்பட்ட ஒவ்வொரு மருத்துவமனைக்கும் உரிய வசதிகளை ஏற்படுத்திட நடவடிக்கை எடுத்தோம். மக்கள் நல்வாழ்வுத்துறை மட்டுமின்றி தொழில்துறை அமைச்சரும் இதில் இணைந்து நின்று விரைவான பணிகளை மேற்கொண்டார். தேவையான மற்ற துறைகளும் ஒத்துழைப்பு வழங்கின. ஒன்றிய அரசின் தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய ஆக்சிஜன், சொந்தமாக உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன், பிற இடங்களிலிருந்து பெறக்கூடிய ஆக்சிஜன், அவற்றை உரிய இடத்திற்கு உரிய நேரத்தில் கொண்டு செல்வதற்கான வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை விரைந்து மேற்கொண்டோம். தமிழ்நாட்டிற்குத் தேவையான தடுப்பூசிகளைப் பெறுவதில் முனைப்பாக செயல்பட்டு, கிடைத்த தடுப்பூசிகள் வீணாகாத வகையில் மக்களுக்கு செலுத்தப்பட்டன. தடுப்பூசி போடுவது பற்றிய மக்களின் தயக்கத்தை உடைத்து, அதனை ஒரு விழிப்புணர்வு இயக்கமாக மேற்கொண்டது இந்த அரசு.

ஆரம்பக்கட்ட நெருக்கடிகள் அச்சுறுத்தினாலும், அதனை எதிர்கொண்டு மக்கள் நலனைக் காக்க முடியும் என்ற நம்பிக்கையோடு உழைத்தோம். தமிழ்நாட்டைக் காப்பாற்றினோம்.

மக்கள் தேவைகளை உடனடியாக கவனிப்பேன்!

செய்தியாளர்: குறைந்த காலத்திலேயே உங்கள் அரசின் செயல்பாடுகள் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பிரச்சினைகள் எழும்போதெல்லாம் உடனடியாக சரிசெய்யப்படுகின்றன. அதைத் தொடர்ந்து செய்து (Sustain) முடிக்க முடியுமா?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நிச்சயமாக முடியும். அதற்குதான் நான் இருக்கிறேன். என்னுடைய ஒரே வேலை அதுதான். மக்கள் தேவைகளை உடனடியாகக் கவனிப்பேன், களைவேன் என்று நான் உறுதி எடுத்துள்ளேன். மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நிலை நிறுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அமைச்சர்கள்-அதிகாரிகள் என அனைவரும் இந்த அரசின் பொறுப்புகளை உணர்ந்து விரைந்து செயல்படும் ஒரு நிர்வாகத்தைக் கட்டமைத்திருக்கிறோம். ஒரு சில அமைச்சர்கள் மக்களுடன் நேரடித் தொடர்புடைய துறைகளைச் சார்ந்தவர்கள். அவர்களின் செயல்பாடுகளை உடனுக்குடன் மக்கள் தெரிந்து கொள்கிறார்கள். ஒரு சில அமைச்சர்களின் துறைகள், மக்கள் நலன் காப்பதிலும்-மாநில வளர்ச்சியிலும் மறைமுகத் தொடர்டபுடையவை. அந்தத் துறைகளிலும் ஆய்வுக் கூட்டங்கள், ஆலோசனைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்ப விரைவான செயல்பாடுகள் நடைபெறுகின்றன. முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு, மாநிலவளர்ச்சி ஆலோசனைக் குழு ஆகியவற்றின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தகைய ஒருங்கிணைந்த செயல்பாடுகள் ஆட்சி சக்கரத்தை சீராக சுழலச் செய்யும். எங்களது இலக்கு மக்கள் நலன்மட்டும்தான். இதிலிருந்து நாங்கள் திசைமாற மாட்டோம்.

`பள்ளி - கல்லூரிகளை திறப்பதில் அரசு முனைப்புடன் உள்ளது!

செய்தியாளர்: பெருந்தொற்றால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இணைய தளத்தின் வழியாகப் பயிற்றுவித்தல் நடைபெற்றாலும், பள்ளி-கல்லூரி வளாகங்களில் சக மாணவர்களுடன் உறவாடி, விளையாடி மகிழும் வாய்ப்பை பெருந்தொற்று மறுத்துள்ளது. தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ள நிலையில் பள்ளி - கல்லூரிகளைத் திறப்பீர்களா? கல்லூரிகளைத் திறந்தால் 18-25 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசியை இலகுவாக ஒரே இடத்தில் அளிக்க முடியும் அல்லவா?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: மருத்துவர்கள் -கல்வியாளர்கள்-பெற்றோர் ஆகியோரின் கருத்துகளைப் பெற்று, அதற்கேற்ப சூழலை அறிந்து, பள்ளி-கல்லூரிகளைத் திறப்பதில் இந்த அரசு முனைப்பாக இருக்கிறது. பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படும்போது, மாணவர்களுக்கானத் தடுப்பூசியை வழங்குவதற்கான ஏற்பாடுகளும், கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்படும். பல மாதங்கள் வீட்டிலேயே இருந்ததால் மாணவ சமுதாயத்தினர் எதிர்கொள்ளும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து, கல்வி வளாகத்திற்கேற்ற சூழலுக்கேற்ப அவர்களைத் தக்கவைக்கும் செயல்பாடுகளும் நிச்சயம் இருக்கும்.

”எங்கள் இலக்கு மக்கள் நலன்தான்; திசை மாறமாட்டோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள்!

செய்தியாளர்: தேர்தலில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிதி ஆதாரங்களைப் பெருக்க இலவசங்களைத் தவிர்க்கும், குறைக்கும் திட்டம் ஏதும் உள்ளதா?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: வெள்ளை அறிக்கை என்பது வேறு; தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகள் என்பது வேறு. கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டின் நிதி நிலைமை எத்தகைய ‘கோமா’ நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதையே வெள்ளை அறிக்கை விளக்குகிறது. கடன் - மேலும் கடன் - வட்டி - மேலும் வட்டி - கடன் வாங்கி வட்டி கட்டுதலாக நிதியைச் சீரழித்து விட்டது அ.தி.மு.க. ஆட்சி. அதனை தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போதே சொன்னது. ஆனால் அதனை அ.தி.மு.க. அரசு மறுத்தது. இன்று ஆட்சிக்கு வந்ததும் ஆதாரத்துடன் சொல்லி இருக்கிறோம். அவ்வளவு தான். நிதி நிலைமை மோசமாக இருக்கிறது என்பதைக் காரணம் காட்டி, எங்கள் வாக்குறுதிகளில் இருந்து நாங்கள் பின் வாங்க மாட்டோம். அதையே வெள்ளை அறிக்கையிலும் வெள்ளையாகச் சொல்லி இருக்கிறோம். மக்கள் நலன் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. வழங்கியது. அதனை நிறைவேற்றும் வழிவகைகள் ஆராயப் பட்டே அவற்றை வழங்கினோம். இலவசங்கள் என்ற கோணத்தில் பார்க்காமல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் என்ற கோணத்தில் அணுகி, ஒவ்வொரு வாக்குறுதியையும் உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறோம்.

செய்தியாளர்: வேளாண்மைக்கென தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒரு பக்கம் வேளாண் உற்பத்தியைப் பெருக்க வேண்டிய சூழல். ஆனால் மற்றொரு பக்கம் விளை நிலங்களும் நீர் ஆதாரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. அதைத் தடுப்பதற்கு ஏதேனும் சிறப்புத் திட்டம் உள்ளதா?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தி.மு.க. வெளியிட்ட10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தில், தமிழ்நாட்டின் வேளாண் உற்பத்தி சாகுபடி பரப்பு 20 லட்சம் ஹெக்டேராக மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைக் கருத்தில் கொண்டுதான் வேளாண்மைக்கெனத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்மை என்பது நிலம் மட்டுமல்ல, உழவர்களின் வாழ்வும் அடங்கியது என்பதையும் எங்கள் அரசு கருத்தில் கொண்டே துறையின் பெயரையும் அமைத்துள்ளது. தமிழ்நாட்டின் நீராதாரங்களைப் பெருக்குவதற்கான திட்டங்களுக்காகவே நீர்ப் பாசனத் துறை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தையும் சூழலியலையும் கருத்தில் கொண்டு அதற்கான துறையும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் வனப்பகுதியை 33 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்பதற்கான செயல் திட்டங்களும் வகுக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் விளைநிலங்கள் - நீர் ஆதாரங்கள் -இயற்கை வளங்கள் கொள்ளை போகாதபடி பாதுகாக்கப்படும்.

தனித்துவமான கல்விக்கொள்கை வகுக்கப்படும்!

செய்தியாளர்: நீட்டில் இருந்து விதி விலக்கு வாங்குவதற்கு தொடர்ந்து போராடுகிறீர்கள். அதே நேரத்தில் பள்ளிப்பாடத் திட்டங்களை உயர்த்தி, பொதுப் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்த வேண்டிய தேவை இருக்கிறது அல்லவா?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: காலத்திற்கேற்ப கல்வித்துறையில் செய்யக் கூடிய மாற்றங்களை, சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் சமச்சீர் கல்வி தந்த தலைவர் கலைஞர் வழியில் எங்கள் அரசு தொடர்ந்து செயல்படும். பள்ளிப் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள், செயல்முறைகள் உள்ளிட்டவை அதற்கேற்ப அமைக்கப்படும். கற்றல் திறனை மேம்படுத்தவும், பிற பாடத்திட்டங்களுக்கு எந்தளவிலும் குறையாத வகையிலும் தமிழ் நாட்டின் கல்வித் திட்டம் இருக்கும். நீட் தேர்வையும் - கல்வித் திறனையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். இரண்டும் வேறு வேறு. நீட் தேர்வு என்பது ஒரு குறிப்பிட்ட முறையில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே நன்மை செய்கிறது. இலட்சக்கணக்கில் பணம் செலுத்தி பயிற்சி நிறுவனங்களில் இரண்டு மூன்று ஆண்டுகள் படிக்கும் மாணவர்களால் மட்டும் தேர்ச்சி அடையும் சூழலை உருவாக்குகிறது. இதனால் ஏழை, எளிய, அரசுப் பள்ளி மாணவர்களால் அதற்குள் நுழைய முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையை மாற்றத்தான் தனித்துவமான கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆய்வு நோக்கிலான படிப்புகளை உருவாக்க உரிய நடவடிக்கை!

செய்தியாளர்: இந்திய அளவில் தமிழகத்தில் மருத்துவம், வேளாண்மை, மீன்வளம், கால்நடை மருத்துவப் படிப்புகள் மிகவும் சிறப்பாக உள்ளன. ஆனால் அதற்கு இணையாக கலை-அறிவியல் கல்லூரிகளின் பயிற்று முறையையும் பாடத் திட்டமும் இல்லை. அவற்றைப் பயில வேண்டுமானால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அதை நிவர்த்தி செய்யும் திட்டம் இருக்கிறதா? (The need to improve humanities in col-leges and universities)

முதல்வர் மு.க.ஸ்டாலின்: உயர்கல்விக்கெனத் தனித்துறையை உருவாக்கியுள்ள மாநிலம் இது. 15 ஆண்டுகளுக்கு முன்பே இதன் தேவையைக் கருத்திற்கொண்டு உயர்கல்வித் துறையை அமைத்தார் தலைவர் கலைஞர். திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகத்தைக் கொண்டு வருவதற்கும் அவரே காரணமாக இருந்தார். அதுபோலவே, தமிழ்நாடு அரசின் சார்பிலும் கலை - அறிவியல் துறைகளில் விரிவான-ஆய்வு நோக்கிலான படிப்புகளை உருவாக்கவும், வளர்ந்து வரும் உலகச் சூழலுக்கேற்ற கல்வி முறைகளை வளர்க்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

செய்தியாளர்: தமிழகத்தில் மேலவை மீண்டும் உயிர் பெறுமா?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: மேலவை உயிர்பெற வேண்டும், ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும், அறிவுசார் விவாதங்கள் நடக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. கழக அரசின் நோக்கம்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டியளித்தார்.

banner

Related Stories

Related Stories