தமிழ்நாடு

“150 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைக்காகப் போராடிய மண்தான் நம்முடைய தமிழ் மண்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விடுதலைக்காகப் போராடிய மண்தான் நம்முடைய தமிழ் மண் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“150 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைக்காகப் போராடிய மண்தான் நம்முடைய தமிழ் மண்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

75-வது சுதந்திரத் திருநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேசியக்கொடி ஏற்றிவைத்தார். பின்னர் நாட்டுமக்களிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின திருநாளில் ஆற்றிய உரை பின்வருமாறு :-

தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்

உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே

பாங்கின் எழுதித் திகழும் - செய்ய

பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் - எங்கும்

காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்!

நம்பற்குரியர் அவ்வீரர் - தங்கள்

நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்!

நானூறு ஆண்டுகள் பழமை கொண்ட இந்தக் கோட்டையில் இந்திய நாட்டின் மூவண்ணக் கொடியை ஏற்றி வைக்க தங்களது உயிரையும் இரத்தத்தையும் - வாழ்க்கையையும் செயல்பாட்டையும் வழங்கிய இந்த நாட்டின் தியாகிகள் அனைவருக்கும் நான் எனது வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன்!

இந்த மாட்சிமை பொருந்திய கோட்டையில் விண்முட்ட அமைந்துள்ள கம்பத்தில் கொடியேற்றும் வாய்ப்பினை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களே!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களே! நீதியரசர்களே!

மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே!

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே!

தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளே!

காவல்துறைத் தலைவர் உள்ளிட்ட காவல் அதிகாரிகளே! சிறப்பு விருந்தினர்களே!

சுதந்திரப் போராட்டத் தியாகிகளே! அவர்களது குடும்பத்தினரே!

மாணவச் செல்வங்களே! வணக்கம்!

“150 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைக்காகப் போராடிய மண்தான் நம்முடைய தமிழ் மண்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

இந்தியா தனது 75-ஆவது சுதந்திர நாளைக் கொண்டாடும் மகத்தான் இப்பொழுதில், கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றும் மாபெரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நினைத்து மகிழ்கிறேன். சுதந்திர நாளன்று யார் முதலமைச்சராக இருக்கிறார்களோ, அவர்கள் தான் கொடியேற்ற வேண்டும் என்ற சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.

ஆகஸ்ட்-15 சுதந்திர நாளன்று முதலமைச்சரும், ஜனவரி-26 குடியரசு நாளன்று ஆளுநரும் கொடியேற்றலாம் என்ற ஆலோசனையை அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அதனை ஏற்றுக்கொள்ள வைத்தவர் நம்முடைய தலைவர் கலைஞர். 15.8.1974 அன்று முதன்முதலாக இந்தக் கோட்டையில் ஒரு முதலமைச்சராகக் கொடியேற்றினார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

அதன்பிறகு எத்தனையோ முதலமைச்சர்கள் வந்தாலும், அவர்களுக்கும் கொடியேற்றும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். தமிழ்நாட்டு முதலமைச்சர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அந்த உரிமையைப் பெற்றுக் கொடுத்த மாபெரும் சுதந்திரச் சிந்தனையாளர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அவரை வணங்கி எனது உரையைத் தொடங்குகிறேன்.

இன்று, இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். இது மட்டுமல்ல, இன்னும் ஏராளமான பெருமைகள் இந்த ஆண்டுக்கு உண்டு. தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவினை குடியரசுத் தலைவர் அவர்களை அழைத்து சில நாட்களுக்கு முன்னால் நடத்தினோம்! திராவிட இயக்கத்தின் ஆணிவேராகத் திகழ்ந்த நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்ததன் நூற்றாண்டு விழாவும் இந்த ஆண்டுதான்!

“150 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைக்காகப் போராடிய மண்தான் நம்முடைய தமிழ் மண்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய மகாத்மா காந்தி அவர்கள், மதுரைக்கு வருகை தந்தபோது ஏழைத் தமிழ் மக்களைப் பார்த்து தனது உயர்ரக ஆடையைக் களைந்து அரையாடையை உடுத்தத் தொடங்கியதன் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்! செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்றெல்லாம் போற்றப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு 150-ஆவது பிறந்தநாள் கொண்டாட இருப்பதும் இந்த ஆண்டு தான்! சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடிய மகாகவி சுப்பிரமணிய பாரதி மறைந்து 100 ஆண்டுகள் ஆகிறது இந்த ஆண்டோடு! இப்படி எவ்வளவோ வரலாற்றுப் புகழ் பெற்ற ஆண்டாக இந்த 2021 அமைந்துள்ளது!

தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்படும் பெருமிதம் என்னவென்றால் நமது அரசு ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து இருக்கிறது. எனது பொது வாழ்க்கையில் அரை நூற்றாண்டு காலம் உழைத்த நான், அப்படி உழைத்த நான் தமிழ்நாட்டு மக்களால் முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளேன் என்ற மகிழ்ச்சியுடன் இந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.

75-ஆவது சுதந்திர நாளை நினைவுகூரும் வகையில் மிகப்பெரிய தூணை இன்று உருவாக்கி இருக்கிறோம். அது வெறும் கல்லாலும் சிமெண்டாலும் செங்கல்லாலும் கட்டப்பட்டது அல்ல. நம்முடைய விடுதலைப் போராட்ட வீரர்களின் இரத்தத்தால், எலும்பால், சதையால் உருவாக்கப்பட்டதுதான் அந்தத் தூண்!

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விடுதலைக்காகப் போராடிய மண்தான் நம்முடைய தமிழ் மண்.

  • பூலித்தேவர்

  • வேலுநாச்சியார்

  • வீரபாண்டிய கட்டபொம்மன்

  • தளபதி சுந்தரலிங்கம்

  • ஊமைத்துரை

  • தீரன் சின்னமலை

  • சின்ன மருது

  • பெரிய மருது

  • வ.உ.சி.

  • மகாகவி பாரதி

  • சுப்பிரமணிய சிவா

  • டி.எஸ்.எஸ். ராஜன்

  • தில்லையாடி வள்ளியம்மை

  • தந்தை பெரியார்

  • திரு.வி.க.

  • நாமக்கல் ராமலிங்கம்

  • ம.வெ.சிங்காரவேலர்

  • பாரதிதாசன்

  • பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

  • திருப்பூர் குமரன்

  • ராஜாஜி

  • காமராசர்

  • ஏ.எம். ஈஸ்வரன்

  • ஓமந்தூர் ராமசாமி

  • ஜீவா

  • கேப்டன் லட்சுமி

  • ம.பொ.சிவஞானம்

  • கே.பி. சுந்தராம்பாள்

இத்தகைய தமிழ்நாட்டுத் தியாகிகளின் மூச்சுக்காற்றைக் கொண்டு கட்டப்பட்டதுதான் இந்த நினைவுத் தூண்.

“150 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைக்காகப் போராடிய மண்தான் நம்முடைய தமிழ் மண்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

இந்திய விடுதலைப் போராட்டத்துக்குத் தமிழ்நாடு அளித்த பங்களிப்பு குறித்த முழுமையான ஆவணம் ஒன்றைத் தயாரித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடும் முயற்சியை தமிழ்நாடு அரசு உறுதியாகச் செய்யும். நான் சொன்ன தியாகிகள், தமிழ்நாட்டுத் தியாகிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் தியாகிகள். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு, நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் உதவிகள் வழங்குவதில் தமிழ்நாடு அரசு எப்பொழுதும் முன்னுரிமை அளித்து வருகிறது.

அந்த வகையில், மாநில அரசால் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை 17 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியத் தொகை 8,500 ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்த்தப்படும் என்பதை இந்த வேளையில் பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பந்து கொண்டு, நமட்டுமொத்த இந்தியாவும், நான் சொன்னதில் நாட்டு விடுதலைத் தியாகிகளை நினைவு கூர்வதில் நமது அரசு எப்போதும் தவறியது இல்லை . சீன நாட்டால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது 1962-ஆம் ஆண்டு, இந்திய நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று அறிவித்து நிதியை திரட்டிக் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்!

- 1971-ஆம் ஆண்டு இந்தியாவைப் பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்புக் கண்டனத் தீர்மானம் போட்டவர் முதல்வர் கலைஞர் அவர்கள் ! அதோடுநில்லாது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் நாட்டுப்பாதுகாப்புக்காக ஆறுகோடி ரூபாய் நிதி வழங்கியவர் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள்!

“150 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைக்காகப் போராடிய மண்தான் நம்முடைய தமிழ் மண்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

- அப்போது அனைத்து மாநிலங்களும் வழங்கிய தொகை மொத்தம் 25 கோடி ரூபாய்! அதில் 6 கோடி ரூபாயை வழங்கியது திமுக அரசு!

- அந்தப் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நிதியும் நிலமும் வழங்கிய அரசு கலைஞரின் அரசு!

- 1999-ஆம் ஆண்டு கார்கில் போரின் போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் மூன்று தவணைகளாக மொத்தம் 50 கோடி ரூபாய் வழங்கிய அரசு முதல்வர் கலைஞரின் அரசு!

- பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கு கோட்டை!

- பாரதியின் இல்லம் அரசு இல்லம் ஆனது!

- காமராசர் மணிமண்டபம்!

- இராஜாஜி நினைவாலயம்!

- தில்லையாடி வள்ளியம்மாள் மணிமண்டபம் !

- வ.உ.சி. இழுத்த செக்கு நினைவுச் சின்னம் ஆனது!

- விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவச பேருந்து பயணம்

- தியாகிகள் மணிமண்டபம்

- சுதந்திரப் பொன்விழா நினைவுச் சின்னம்!

- பூலித்தேவன் நினைவு மண்டபம்!

- தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு!

- மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு!

- நேதாஜிக்குச் சிலை!

- கக்கனுக்குச் சிலை!

- சிப்பாய்க் கலகத்துக்கு நினைவுத்தூண்!

இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் நமது அரசு எப்பொழுதும் போற்றி வருகிறது. அந்த வரிசையில் தியாகத்தின் திருவுருவான வ.உ.சி. அவர்களின் 150-ஆவது பிறந்தநாளை அரசு சார்பில் எழுச்சியோடும் உணர்ச்சியோடும் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம்.

வெள்ளையருக்கு எதிராகக் கப்பல் விட்டவர் வ.உ. சிதம்பரனார் அவர்கள். சுதேசி என்பது ஏட்டளவில் மட்டுமல்ல, நம்முடைய சிந்தனையாக, செயலாக மாற வேண்டும் என்று நினைத்தவர் வ.உசி. அவர்கள். அரசியல் விடுதலை மட்டும் போதாது பொருளாதார விடுதலையும் வேண்டும் என்று நினைத்தவர். அனைத்து விதத்திலும் தன்னிறைவு பெற்ற நாடாக நாம் மாற வேண்டும் என்று வ.உ.சி. அவர்கள் கனவு கண்டார்கள்.

அத்தகைய கனவைக் கொண்ட அரசாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. 'எல்லார்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கிச் செல்லட்டும் இந்த வையம்' என்பதைப் போன்ற பொற்காலத்தை உருவாக்க உறுதி கொண்டுள்ளது இந்த அரசு.

கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலமானது நமக்கு ஏராளமான படிப்பினைகளைக் கொடுத்திருக்கிறது. மருத்துவ நெருக்கடி, மனநல நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, சூழல் நெருக்கடி எனப் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் மக்களைக் கொண்டுபோய் நிறுத்திவிட்டது கொரோனா. இதில் இருந்து மீட்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சிகளுக்கு அடித்தளமான மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், அரசின் நிர்வாகத்தின் அனைத்து அலுவலர்கள் அனைவரையும் இந்த நாளில் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். இந்தளவுக்கு மக்கள் மீண்டு வர உங்களது அர்ப்பணிப்புதான் காரணம்.

தமிழ்நாடு முதலமைச்சராக நான் பொறுப்பேற்றதிலிருந்து இன்று 101-ஆவது நாள். தமிழ்நாடு அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கையையும், 2021-22ஆம் ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்த நிலையில், தமிழ்நாட்டின் நிதி நிலையை தமிழக மக்கள் நன்கு அறிந்திருக்கக் கூடும். இத்தகைய நிதிச் சுமையோடு முதலமைச்சராக முதன் முறையாக பொறுப்பேற்ற இந்த அரசு கொரோனா என்கிற கொடிய நோய்த் தொற்றை மேலாண்மை செய்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில், பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, அதில் வெற்றியும் கண்டிருக்கிறது.

“150 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைக்காகப் போராடிய மண்தான் நம்முடைய தமிழ் மண்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

* கொரோனாவாலும் ஊரடங்காலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் 4 ஆயிரம் ரூபாய் இரு தவணைகளில் வழங்கப்பட்டது. 14 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பு வழங்கப்பட்டது.

* கொள்முதல் விலையைக் குறைக்காமல், ஆவின் பாலின் விற்பனை விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு.

* பெட்ரோல் விலை மூன்று ரூபாய் குறைப்பு.

* மகளிர், திருநங்கையர், மாற்றுத் திறனாளிகளுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம்.

* தேர்தல் பரப்புரையின் போது பெறப்பட்ட மனுக்களுக்கு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை மூலமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது.

* திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை.

* அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம்.

* தமிழ்நாட்டுக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்த 'தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருது உருவாக்கப்பட்டு, இளம் வயது முதல் தற்போது வரை பொதுவாழ்வில் ஈடுபட்டு பல்வேறு தியாகங்களைச் செய்த மாபெரும் பொதுவுடைமைப் போராளியும் முதுபெரும் தலைவருமான திரு. சங்கரய்யா அவர்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டு இருக்கிறது.

* போதிய திரவ ஆக்சிஜன், ஆக்சிஜன் படுக்கைகளைக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்து காட்டியிருக்கிறோம்.

* 3 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கிறோம். தடுப்பூசி வீணடிக்கப்பட்ட நிலையை மாற்றிக் கூடுதல் தடுப்பூசிகள் செலுத்தி இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றியுள்ளோம்.

* உலகத்தரத்தில் புதிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கிண்டி கிங் நோய்த்தடுப்பு வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

* தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள், சிகிச்சைகள், மருந்துகள், இயன்முறைச் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவச் சேவைகளை நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்கும் முன்னோடித்

* திட்டமான "மக்களைத் தேடி மருத்துவம்" தொடங்கப்பட்டுள்ளது.

* அமைச்சரவைக் கூட்டமாக இருந்தாலும், அரசுக்கு ஆலோசனை சொல்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுக் கூட்டமாக இருந்தாலும் ஒன்றை நான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். சமூகம் - அரசியல் - பொருளாதாரம் ஆகிய மூன்றிலும் தமிழ்நாடு என்பது ஒருசேர வளர வேண்டும் என்பதுதான் நம்முடைய கனவாக இருக்க வேண்டும். அனைவரின் கனவையும் நிறைவேற்ற நமது அரசு பாடுபட்டு வருகிறது.

*அரசின் பொருளாதாரமும் தனிமனிதர்களின் பொருளாதாரமும் தன்னிறைவு பெற்றதாக மாற வேண்டும். நம்முடைய தமிழ்ச் சமூகமானது சிந்தனையால், பண்பாட்டால், நாகரிகத்தால் பழக்க வழக்கத்தால் உயர்வடைய வேண்டும். அதாவது ஏற்றத்தாழ்வு அற்ற, உயர்வு தாழ்வு அற்ற ஒரு மனித உரிமைச் சமூகமாக நாம் மாற வேண்டும். அதைத்தான் நம்முடைய சுதந்திரப் போராட்டத் தியாகிகள் விரும்பினார்கள். அதற்காகத்தான் போராடினார்கள். அதற்காகத்தான் தியாகம் செய்தார்கள்.

“150 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைக்காகப் போராடிய மண்தான் நம்முடைய தமிழ் மண்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

சிறை சென்றோர் - செக்கிழுத்தோர்- கல்லுடைத்தோர் - அடி உதை பட்டோர் - அவலங்களைச் சுமந்தோர் - உயிரை கொடுத்தோர் ஆகிய அனைவரும் மேன்மைமிகு தமிழ்நாட்டை உருவாக்க நினைத்தார்கள். அத்தகைய தமிழ்நாட்டை உருவாக்க நினைக்கும் தமிழ்நாடு அரசுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். உறுதுணையாக இருக்க வேண்டும்.

மகாத்மா காந்திக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவு ஆழமானது. தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி நடத்திய அத்தனைப் போராட்டங்களிலும் தமிழர்கள் முன்னின்றனர். அங்கு நடைபெற்ற இனவெறியின் உக்கிரத்தைத் தாங்கிய தமிழர்கள் தன் உடன்பிறந்த சகோதரர்கள் என்று மகாத்மா காந்தி அறிவித்தார். தமிழர்கள் மகாத்மா காந்தியை நெஞ்சார நேசித்தார்கள்.

மகாத்மா காந்தியும் தமிழர்கள் மட்டுமின்றி தமிழ் மொழி மீதும் அளவில்லா அன்பு கொண்டிருந்தார். ஐரோப்பாவிற்கு எப்படி இத்தாலிய மொழியோ அப்படி இந்தியாவிற்குத் தமிழ் மொழி என அறிவித்து லண்டன் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தமிழை விருப்பப் பாடமாகச் சேர்க்க வேண்டும் என்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் நம் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் 20 முறை தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். நூறு ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு வந்த மகாத்மா காந்தியை, மேலாடை துறந்த மகாத்மாவாகத் தமிழ்நாடு வழியனுப்பி வைத்தது. அதை நினைவுகூரும் வகையில் மகாத்மா குறித்த அரிய கலைப்பொருட்களைக் கொண்ட மதுரை மகாத்மா காந்தி அருங்காட்சியகம் பொதுமக்களையும் இளைய தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில் ஆறு கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்படும். சாதி, மதம், இனம் குறித்த பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கும் இந்தியத் திருநாட்டை வழிநடத்தக் கிடைத்த ஒப்பற்ற ஆயுதம் காந்தியச் சிந்தனைகள் என்னும் கருத்தை இளைஞர் மனதில் ஆழப் பதிய வைக்க இன்று சூளுரைப்போம்!

அனைவருக்கும்

சுதந்திர நாள் நல்வாழ்த்துகள்!

வாழ்க தமிழ்நாடு!

வாழ்க இந்தியா!

வணக்கம்!

Related Stories

Related Stories