தமிழ்நாடு

சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல்கல்- அகற்றப்பட்ட ஈராயிரம் ஆண்டுகால கருவறைத் தீண்டாமை : அர்ச்சகர்கள் பாராட்டு!

அனைத்து சாதி அர்ச்சகர் பணி நியமனம் மூலம் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல்கல்- அகற்றப்பட்ட ஈராயிரம் ஆண்டுகால கருவறைத் தீண்டாமை : அர்ச்சகர்கள் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அனைத்து சாதி அர்ச்சகர் பணி நியமனம் மூலம், அரசியல் சட்ட ரீதியான சமத்துவத்தை நிலைநாட்டி, தனி மனித மாண்பை மீட்டெடுத்து, தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா.ரங்கநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தந்தை பெரியார் அவர்கள் 1969-ல் கருவறை நுழைவுப் போராட்டம் அறிவிக்க, அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பரம்பரை வழி அர்ச்சகர் முறையை ஒழித்தார்.

உச்சநீதிமன்றத்தில் தடை பெற்ற பழைய அர்ச்சக பிராமணர்கள் சட்டத்தை அமல்படுத்த விடாமல் தடுத்தனர். மீண்டும் 2006-ல் அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்தை கலைஞர் அவர்கள் இயற்றியதுடன், அதை அமல்படுத்த தமிழகத்தில் சைவ வைணவ பயிற்சிப் பள்ளிகளை திறந்து, இட ஒதுக்கீடு அடிப்படையில் 207 மாணவர்களை அதில் சேர்த்து இளநிலை அர்ச்சகராக பயிற்சி கொடுத்து அதற்கான தீட்சையும் சான்றிதழும் மாணவர்கள் பெற்றனர்.

உடனே, மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆதிசைவ சிவாச்சாரியர்கள் உச்சநீதிமன்றம் சென்று அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்திற்கு தடை உத்தரவு பெற்றனர். மாணவர்கள் சான்றிதழ் கூடப் பெற முடியவில்லை. அப்போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம்-திருவாசகம் பாட பல்வேறு போராட்டங்களை முன் எடுத்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் விருத்தாசலம் ராஜீ, மதுரை வாஞ்சிநாதன், சென்னை ஜிம்ராஜ் மில்டன் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று மாணவர்களை அணுகி அனைத்து சாதி அர்ச்சக மாணவர் சங்கத்தை உருவாக்கி மதுரை, சென்னை, திருச்சி, விருத்தாச்சலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலரை இணைத்து ‘ஆகமம் பெரிதா? அரசியல் சட்டம் பெரிதா?’ எனப் போராட்டம் நடத்தினர்.

மீனாட்சி அம்மன் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தினோம். பெரியார் சிலை முன்பு நடத்திய போராட்டத்திற்காக மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி விடுதலை பெற்றோம். போராட்டத்தின் உச்சமாக வா.ரங்கநாதன் தீட்சையைத் துறந்து எதிர்ப்பைப் பதிவு செய்தார். இதனால் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணியினர் ரங்கநாதனைத் தாக்கினர். இன்று வரை மிரட்டுகின்றனர். எல்லாவற்றையும் தாண்டி உச்சநீதிமன்ற வழக்கில் அர்ச்சக மாணவர்கள் சார்பில் இணைந்தோம். வழக்கை மூத்த வழக்கறிஞர்களை வைத்து நடத்தினோம்.

இதற்க்கான சட்டரீதியான உழைப்பை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தினரும், பல லட்ச ரூபாய் நிதி மற்றும் மக்கள் பிரச்சாரம், நூல் வெளியீடு, போராட்டம், கருத்தரங்கம் உள்ளிட்ட ஆதரவை தோழர் மருதையன், தகாளியப்பன், மக்கள் பாடகர் கோவன் தலைமையிலான மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் செய்தனர். இதற்கு முழு ஆதரவாக தி.க. தலைவர் அய்யா வீரமணி, முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன், அய்யா சத்தியவேல் முருகனார், கிருபானந்த சாமி ஆகியோர் இருந்தனர்.

சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல்கல்- அகற்றப்பட்ட ஈராயிரம் ஆண்டுகால கருவறைத் தீண்டாமை : அர்ச்சகர்கள் பாராட்டு!

இவ்வாறான தொடர் சட்டப் போராட்டங்கள், மக்கள் போராட்டங்களை கடந்து இன்று அர்ச்சகர் மாணவர்கள் 24 பேருக்கு ஆகமக் கோயில்கள், பாடல் பெற்ற தலங்கள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் முதல் கட்டமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தந்தை பெரியார் சமூக நீதிப் போராட்டம் அறிவித்த நாளான இன்று ஆகஸ்ட்14 , 2021 -ல் மயிலைக் கபாலீஸ்வரர்கோவில் மண்டபத்தில் குன்றக்குடி அடிகளார், பேரூர் அடிகளார் முன்னிலையில், அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பேர் உள்பட 24 பேரை அர்ச்சகர்களாக நியமித்து ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்த வரலாற்று நிகழ்வை சாத்தியமாக்க, கருவறைத் தீண்டாமையை ஒழிக்க, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர்ந்து நடத்திய சட்டப் போராட்டம், மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் இந்தச் சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

உச்சநீதிமன்றத்தின் சேசம்மாள் வழக்கு, ஆதித்தன் வழக்கு, மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் வழக்கு, சபரிமலை வழக்கு எனப் பல தீர்ப்புகள் அர்ச்சகர் நியமனத்தோடு தொடர்புடையது. மீண்டும் சில தீர்ப்புகளைக் காட்டி ஆகமங்கள், பழக்க, வழக்க, மரபுகள் மீறப்பட்டுள்ளன என்று ஆதிக்கவெறி பிடித்த சிலர் நீதிமன்றத்தை அணுகலாம். எங்கள் மாணவர்கள் சிலருக்கு எதிர்ப்பு என நாடகம் நடத்தலாம். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் முறியடிக்க வேண்டும் எனக் கோருகிறோம். கடந்த காலத்தில் நாமெல்லாம் கோயில் சென்று சாமி கும்பிட்டாலே தீட்டு என்று தடுத்தவர்கள் இவர்கள் என்பதை தமிழக மக்கள் கவனத்தில் கொள்ளக் கோருகிறோம்.

மேலும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் வயது தடை காரணமாக பணிக்கு விண்ணப்பிக்க முடியாமல் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் வயது வரம்பைத் தளர்த்தி பணி நியமனம் தமிழக அரசு படிப்படியாக வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதுபோல் மூடப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும், அடுத்த நியமனங்கள் மதுரை மீனாட்சியம்மன், திருச்செந்தூர் முருகன், திருவரங்கம் ரங்கநாதன் உள்ளிட்ட பெருங்கோயில்களில் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை இந்த நேரத்தில் தமிழக முதல்வரிடம் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் சார்பில் வைக்கின்றோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories