தமிழ்நாடு

“தமிழ்மொழியின் சிறப்பு - பெருமைகளை உலகிற்கு உணர்த்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : தினகரன் நாளேடு புகழாரம்!

தமிழ்மொழியின் சிறப்பையும், பெருமையையும் மீண்டும் உலகிற்கு உணர்த்தும் வகையிலும் தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது ‘தினகரன்’ நாளேடு தலையங்கத்தில்தெரிவித்துள்ளது.

“தமிழ்மொழியின் சிறப்பு - பெருமைகளை உலகிற்கு உணர்த்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : தினகரன் நாளேடு புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்மொழியின் சிறப்பு - பெருமைகளை மீண்டும் உலகிற்கு உணர்த்தும் வகையில் தமிழக முதல்வரின் நட வடிக்கை அமைந்துள்ளது என்றும் தமிழர் நலன் காப்பதிலும் தமிழ் சமுதாயத்தை மேம்படுத்துவதிலும் தமிழக அரசு உறுதியாக இருக்கும் என்றும் ‘தினகரன்’ நாளேடு 12.8.2021 அன்று ‘தமிழர் விழா’ என்ற தலைப்பில் வெளியான தலையங்கத்தில் பெருமை பொங்க குறிப்பிட்டுள்ளது.

‘தினகரன்’ நாளேட்டில் வெளியாகியுள்ள தலையங்கம் பின்வருமாறு:-

தமிழகத்தில், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. இது, உலகப்புகழ் வாய்ந்த ஒன்றாகும். முதலாம் ராஜேந்திர சோழன் காலம் முதல், சோழர்களின் கலை மற்றும் கட்டிட கலைகளின் அழகிய தொகுப்பாகவும், வாழும் வரலாறாகவும் இது விளங்குகிறது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ நிறுவனம், இதை, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பினை கண்டுகளிக்க, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

மிகவும் பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது, அப்பகுதி வாழ் மக்களால் வெகு விமரிசையாகவும், சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் கொண்டாடப்படும் இவ்விழாவை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என அப்பகுதி வாழ் மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. முந்தைய ஆட்சியாளர்கள் இதை கண்டுகொள்ளவில்லை.

தற்போது, இந்த விவகாரம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என உத்தரவிட்டுள்ளார். தற்போது நிலவிவரும் கொரோனா நோய் தொற்று காரணமாக, வரும் ஆண்டு முதல் இந்த விழா, அரசு விழாவாக மிக சிறப்பாக கொண்டாடப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, தமிழ் மக்கள் நெஞ்சில் பால்வார்ப்பதுபோல் உள்ளது.

ஒன்றிய அரசு, கடந்த 8 ஆண்டு காலமாக, தமிழக நலன்களை புறக்கணிப்பதிலும், தமிழ்மொழியை முடக்கி, இந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழியை திணிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தமிழ்மொழியின் சிறப்பையும், பெருமையையும் மீண்டும் உலகிற்கு உணர்த்தும் வகையிலும் தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. தமிழர் நலன் காப்பதிலும், தமிழ் சமுதாயத்தை மேம்படுத்துவதிலும் தமிழக அரசு உறுதியாக இருக்கும். இந்த விஷயத்தில் யாருடனும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்பதையே, முதல்வரின் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் நிரூபித்து காட்டி வருகிறது.

banner

Related Stories

Related Stories