தமிழ்நாடு

விரைவில் உள்ளே போகிறார் ராஜேந்திரபாலாஜி..? : சொத்துக்குவிப்பு தொடர்பான ஆவணங்களைத் திரட்டும் அரசு!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் புகாரில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

விரைவில் உள்ளே போகிறார் ராஜேந்திரபாலாஜி..? : சொத்துக்குவிப்பு தொடர்பான ஆவணங்களைத் திரட்டும் அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் புகாரில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

அதில், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்பில் 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும், இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 6 கோடி ரூபாய் எனவும், அதேபோல் திருத்தங்கல் பகுதியில் 23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும், 4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார் என்றும், இந்த சொத்தின் சந்தை மதிப்பு 1 கோடிக்கு அதிகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவே எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கடந்த மார்ச் 4ஆம் தேதி தீர்ப்பளித்த  நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட  தீர்ப்பளித்தனர். நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்கு, மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்று கூறி, மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.

இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பது குறித்து முடிவெடுக்க வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்தும் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். அவர் முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல்கான் வழக்கு விசாரணை ஒத்தி வைக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல உள்ளதாக குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் புகாரில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கை நடத்தத் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை என்று குறிப்பிட்டு வழக்கு விசாரணை வருகிற 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்று விசாரணை நடைபெறும் என்று குறிப்பிட்டார்.

banner

Related Stories

Related Stories