தமிழ்நாடு

2000 ஆண்டுகளாக மறைந்திருந்து வெளிச்சத்துக்கு வந்த ‘தமிழ் பொண்ணு’ -அந்த காலத்துலேயே ஹேர் ஸ்டைல் அத்துப்படி

எண்ணங்களால் எண்ண முடியாத இந்த சங்ககாலப் பெண்ணை எப்படி இவ்வளவு நேர்த்தியாகத் தமிழர்களின் வாழ்வியல் நுட்பங்களோடு தொடர்புபடுத்தி, அழகுணர்ச்சியோடு செய்நேர்த்தியாக வடித்திருக்கிறார்கள்.

சென்னை மணிகண்டன்
தினமணி சென்னை மணிகண்டன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

படைப்பின் அற்புதத்தை உணர்த்தி, நம்மை வியக்க வைக்கும் தமிழ் கூறும் சங்ககால வரலாற்றுக்கு இழுத்துச் செல்லும் ‘தமிழ்ப் பொண்ணு சமீபத்தில் சிவகங்கை மாவட்டம், கழுகேர்கடை ஊராட்சியில் அமைந்த ‘அகரம்' கிராமத்தில், தமிழர்களின் தொன்மையை சிற்பங்களின் மூலம் இயல்பாக எடுத்துரைக்கக் கிடைத்த ஆகச்சிறந்த சான்றாகக் கிடைத்திருக்கிறது.

தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில் ‘தமிழ்ப் பொண்ணு’ எனும் தலைப்பில் இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கும் ‘தமிழ் மகள்' என உணர்வோடு பதிவிட்டிருந்தார். மேலும், இந்த ஹேர் ஸ்டைல் எல்லாம் அந்தக் காலத்திலேயே அத்துப்படி' என தமக்குரிய நகைச்சுவை பாணியோடு தன் வரலாற்று ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நதிக்கரை நாகரிகமும் நகர நாகரிகமும்

மேற்குத் தொடர்ச்சி மலை தொடங்கி வங்காள விரிகுடா கடல் பகுதி வரை, மிக நீண்ட வரலாற்றை உள்ளடக்கியதுதான் நமது ‘அகரம்' அகழ்வாராய்ச்சியின் பணி. 293 இடங்கள் அகழ்வாராய்ச்சிக்கு உட்பட்ட பகுதியாகத் தொல்லியல் துறையால் ஏற்கெனவே அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அதிலும் 150 இடங்கள் புதைகுழி மற்றும் மேற்பரப்பு ஆய்வுக்கு ஏற்றவையாக உள்ளன. இருந்தாலும், அதிலும் அதீத முக்கியத்துவம் வாய்ந்த நான்கு பகுதிகளாகக் கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகியவை உள்ளன.

சிந்து, கங்கை நதிக்கரையா? வைகைக் கரையா?

சிந்து, கங்கை நதிக்கரை நாகரிகத்திற்குப் பின், இரண்டாம் நிலை நகர நாகரிகங்கள் தமிழ்நாட்டில் இல்லை என்கிற நிலைப்பாட்டை உடைத்திருக்கிறது அகரம். இது சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககால நகர நாகரிகத்தை, வைகைக் கரை நதி நாகரிகத்தோடு தொடர்புபடுத்தி இந்த சங்ககால கலைநயம் மிக்க, சிகை அலங்காரத்தோடு (கொண்டை) கூடிய தலை உருவ பெண் கிடைத்திருக்கிறது.

தமிழ்ப் பெண்ணின் அழகு

சங்ககால தமிழர்களின் செழுமையை, மேன்மையை நுட்பமான விவரங்களோடும், உயிரோட்டத்தோடும் தத்ரூபமாக மண்ணில் வடித்திருப்பது வியப்பாகும். மேலும், காதிதத்தில் கூட வரைய முடியாத, எண்ணங்களால் எண்ண முடியாத இந்த சங்ககாலப் பெண்ணை எப்படி இவ்வளவு நேர்த்தியாகத் தமிழர்களின் வாழ்வியல் நுட்பங்களோடு தொடர்புபடுத்தி, அழகுணர்ச்சியோடு செய்நேர்த்தியாக வடித்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சிற்பக்கலையின் செய்நேர்த்தி, செதுக்குத் திறன், அணி கலன்களின் வடிவமைப்பு, சிகை அலங்காரம் என ஆழ்ந்து பயணிக்கும் போது மண்ணில் நரம்பும், எலும்பும், உணர்வும் இருப்பதை உணர முடிகிறது.

தவிர்க்க முடியாத தமிழர்களின் சிற்பக் கலை!

தலைசிறந்த சிற்பங்களை பல்லவர் கால கோயில்களில்தான் காண முடியும். அதற்கு இணையாக, தென் தமிழகத்தின் பாண்டியர் மண்ணிலும் குறிப்பாக, வைகைக்கரை நாகரிகத்திலும் காண முடியும் என்பதற்கு இந்தப் பெண் உருவமே சாட்சி. இதை, இதற்கு முன்னால் தென் தமிழ்நாட்டின் பாண்டியர் காலத்து சிற்பங்கள் உறுதி செய்கின்றன. குன்றில் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட வெட்டுவன் கோயில் சிறந்த எடுத்துக்காட்டாகும். தற்போது நமக்கு 60 செ.மீ. ஆழத்தில் கிடைத்திருக்கும் இந்த டெரகோட்டா சிற்பம் எழில் மிகு நுட்பமான வடிவமைப்போடு கிடைத்திருப்பது ஆகச் சிறந்த ஆதாரம் இலக்கியங்களும் நகரநாகரிகமும் சங்ககால இலக்கியங்களோடு தொடர்புடைய பொருள்கள் அனைத்தும் நம் அகழ்வாய்வில் கிடைத்து வருகின்றன.

பானைகள், பானை ஓடுகள், குடுவைகள், கல் மணிகள், முத்துமணிகள், பெண்கள் விளையாடிய சதுரங்கக் காய்கள், சில்லு தாயக்கட்டை, சுடுமண் அணிகலன்கள், விளையாட்டு பொம்மைகள், கொண்டை ஊசிகள், சிகை அலங்காரத்திற்குப் பயன்படும் சங்க மணிகள், கருப்பு சிவப்பு பானைகள், சங்கு வளையல்கள், மனித எலும்புக் கூடுகள், பல், பருகு நீர்க் குவளைகள், பகடைக் காய்கள், குமிழ் நீர் அகண்டவாய் கிண்ணம், சுடுமண் வளையம், தந்தத்திலான பொருள்கள், கருங்கற்கள், பானை ஓடுகள், பானை கீறல்கள், வான், பெருங்கற்கால குறியீடுகள் மற்றும் தமிழி எனும் வரி வடிவங்களைத் தாங்கிய எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள் என ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டே வருகின்றன. மேலும், நகர நாகரிகத்தை நிரூபிக்கும் விதமாக செங்கற்களாலான கட்டடங்கள், தொழிற்கூடங்கள் மற்றும் கோயில் இருப்பை உறுதி செய்யும் பெண் உருவ சிலைகள் என வளர்ந்து கொண்டே செல்கிறது தமிழரின் நகர நாகரிம்.

நகர நாகரிகத்தின் தொட்டில் தமிழ்நாடு!

சங்ககால தமிழ் இலக்கியங்களோடு முடிந்து விடாமல் அறிவியல் ஆதாரங்களோடு அகழ்வாராய்ச்சியில் நமக்குக் கிடைக்கப் பெற்ற தொல் பொருள்களோடு தொடர்புபடுத்திப் பார்க்கின்றபோது, தமிழர்களின் வரலாறுதான் முதன்மையானது என்பதற்கான ஆதாரங்கள் வலுப்பெறுகின்றன. தொகு தமிழ் இலக்கியங்களில் கூந்தலைக் குறிப்பதற்கும் பல்வேறு சொற்கள் பயன்பட்டுள்ளன. கூழை, ஓதி, சிரியல், சுரியல், கோதை, குரல், கொப்பு, முச்சி, சிகழிகை, மராட்டம், பரிசாரம், குத்தளம், விலோதம், மிஞ்சிகம், தம்மிலம் என்பன. மேலும் உச்சி முடிப்பு, சுருட்டி முடிப்பு, தொகுத்து முடிப்பு, பின்னி முடிப்பு, பின் செருகி முடிப்பு, வகுத்து முடிப்பு, விரித்து விடுப்பு, முடித்து விரித்தல் எனத் தொடங்கி முடி, குழல், கொண்டை, பனிச்சை, சுருள் ஆகிய வகைகள் ‘ஐம்பால் முடி’ எனப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட படி நம் இலக்கியங்களைக் குறிப்பால் உணர்த்தி, இன்றைய 20ஆம் நூற்றாண்டின் நவ நாகரிக பெண்களின் சிகை அலங்காரத்தோடு ஒப்பிட்டிருக்கிறார் நம் தமிழக தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாட்டுத்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர். சங்ககால கட்டடக்கலை, வாணிப மற்றும் வாணிகத் தொடர்பை உறுதி செய்யும் பொருள்களோடு கடல் சார்ந்த ஆய்வுப் பணியும் தொடங்கப்படுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்கிற செய்தியைத் தொல்லியல் துறைக்கான அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்லியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நன்றி - தினமணி

banner

Related Stories

Related Stories