தமிழ்நாடு

“தமிழகத்தில் உள்ள கோவில்களில் இனி தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு” : அமைச்சர் சேகர் பாபு பேட்டி!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் விரைவில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் உள்ள கோவில்களில் இனி தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு” : அமைச்சர் சேகர் பாபு பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முத்தமிழறிஞர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை பிராட்வேயில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு அப்பகுதி மக்கள் 1000 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசிய பொருட்களை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “தி.மு.கவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என எப்போதும் விமர்சனம் செய்யும் பா.ஜ.க தலைவர்களே தி.மு.க ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை பாராட்டி வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலால் "வசை பாடியவர்கள் கூட வாழ்த்தும் நிலை" ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் விரைவில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது. அதற்காக 47 கோவில்களை தேர்வு செய்து “அன்னை தமிழில் அர்ச்சனை” என விளம்பர பலகைகளும் வைக்க உள்ளோம்.

முதற்கட்டமாக வரும் வாரத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட உள்ளது. அர்ச்சனை செய்பவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் வெளியில் தகவல் பலகையில் வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோர் அந்த அர்ச்சகரை தொடர்பு கொண்டு தமிழில் அர்ச்சனை செய்து  வழிபாடு செய்யலாம்.

தமிழில் அர்ச்சனை செய்யும் முறை முதலில் பெரிய கோவில்களிலும், அதனைத் தொடர்ந்து சிறிய கோவில்களிலும் கொண்டுவரப்பட உள்ளது. அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யக் கூடிய அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களை முறையாக பயன்படுத்தி இனி அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இனி தமிழகத்தில் கோவில் திறந்திருக்கும் அனைத்து நேரங்களிலும், தமிழில் அர்ச்சனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய கோவில்களில் ஆடி மாத திருவிழாக்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் இருந்து மக்கள் பெரிய கோவில்களுக்கு ஆடி மாதங்களில் வருவது வழக்கம் எனவே அதன் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவற்றை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு பிறகு கோவில்களை மீண்டும் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories