தமிழ்நாடு

''செய்தித் தேனீயாக மாறிய போலிஸ்காரர்''- தகவல் சுரங்கமாக திகழ்பவருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு!

தமிழ்நாடு காவல்துறை தொடர்பான செய்திகளை சேகரித்து தருவதில் வல்லவராக வலம் வருகிறார் முபாரக் அலி என்னும் போலிஸ்காரர் ஒருவர்.


''செய்தித் தேனீயாக மாறிய போலிஸ்காரர்''- தகவல் சுரங்கமாக திகழ்பவருக்கு  டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp

தமிழ்நாடு காவல்துறை போலிஸ் கான்ஸ்டபிள் (கிரேடு- II) ஆக பணிபுரிந்து வருபவர் முபாரக் அலி. இவர் கடந்த 2017 முதல் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட போலிஸ் தொடர்பான அனைத்து செய்திகளையும் சேகரித்து வருகிறார். காவல்துறையினர் தங்கள் துறை தொடர்பான செய்திகளை முபாரக் அலியிடம் இருந்தே பெற்று வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்கள், போலிசாரின் சாதனைகள், வழக்கு விவரங்களை சேகரித்து தினந்தோறும், போலிசாரின் வாட்ஸ் அப் குழுக்களுக்கு முபாரக் அலி பகிர்ந்து வருகிறார்.

குறைந்தது ஐந்து செய்தித்தாள்களின், இணைய தளங்களை தினந்தோறும் காலை 6 மணியில் இருந்து 10 மணிவரை படித்து விடுகிறார். இதன்பின்னர் ஒரு மணிநேரத்தில் செய்தித்தாள்களில் காவல்துறை தொடர்பான செய்திகளை தொகுத்து எடுத்து, செய்தி கோப்புகளாக தயார் செய்து, காவல்துறையினரின் சமூக ஊடக குழுக்களில் பதிவிடுகிறார்.

போலிஸ்காரர் ஒருவர் செய்தித் தேனீயாக மாறி இருக்கும் தகவல் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு பரவி உள்ளது. காவல்துறை குறித்த எந்த தகவல் தேவை என்றாலும், அதிகாரிகள் முபாரக் அலியை நாடுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த வருண் குமார், காவலர் முபாரக் அலியின் செய்தி சேகரிப்பு திறமையை அடையாளம் கண்டு ஊக்குவித்தாராம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடக்கத்தில், குற்ற புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் எஸ். சரவணனிடம் இருந்து முபாரக் அலிக்கு அழைப்பு வந்துள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செய்தித்தாளில் வெளியிடப்பட்ட ஒரு வழக்கின் விவரங்களை அவர் கேட்டிருக்கிறார். அந்த நேரத்தில் முபாரக்கின் செல்போன் பழுதடைந்து இருந்ததால், வழக்கு குறித்த தகவல்களை மறுநாள் தருவதாக கூறியிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து மறுநாள், முபாரக்கிற்கு ஒரு கூரியர் பார்சல் வந்துள்ளது. அதை பிரித்த முபாரக் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளார். காரணம், கூரியரில் வந்தது புத்தம் புது டேப்லாய்ட் போன். அனுப்பியவர் கண்காணிப்பாளர் சரவணன். இதன்மூலம், தனது செய்தி சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் முபாரக். இந்த நிலையில் தான், கடந்த புதன்கிழமை, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, முபாரக்கை பாராட்டி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், “கடந்த மூன்று ஆண்டுகளாக செய்தித்தாள்களில் வெளிவரும் துறை தொடர்பான செய்திகளை முறையாக சேகரிக்கும் பழக்கத்தை நீங்கள் கொண்டிருந்தீர்கள் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் நல்ல பணி மிகவும் பாராட்டத்தக்கது. தொடர்ந்து செய்தி சேகரிக்கும் பணியைச்செய்து, துறைக்கு உதவியாக இருங்கள் ”என்று டிஜிபி எழுதியுள்ளார்.

காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, காவலர் முபாரக் அலிக்கு பாராட்டுக் கடிதம் எழுதியது காவல்துறை வட்டாரத்தில் பரவியதன் விளைவாக, முபாரக் அலிக்கு காவல்துறை அதிகாரிகள், சக காவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு, தனது செய்தி சேகரிப்பு பணியின் மூலமாக பெரும் உதவி செய்ததாக பெருமிதம் கொள்கிறார் முபாரக் அலி.

banner

Related Stories

Related Stories