தமிழ்நாடு

கும்பகோணத்தை அதிரவைத்த ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’... பா.ஜ.கவை சேர்ந்த மோசடி கும்பலின் அதிர்ச்சிகர பின்னணி!

கும்பகோணத்தில் பொதுமக்கள், தொழிலதிபர்களிடம் ரூ. 600 கோடி வசூலித்து, மோசடி செய்த பா.ஜ.கவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கும்பகோணத்தை அதிரவைத்த ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’... பா.ஜ.கவை சேர்ந்த மோசடி கும்பலின் அதிர்ச்சிகர பின்னணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கும்பகோணத்தில் பொதுமக்கள், தொழிலதிபர்களிடம் ரூ. 600 கோடி வசூலித்து, மோசடி செய்த பா.ஜ.கவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர்கள் கணேஷ்-சுவாமிநாதன் சகோதரர்கள். இருவரும் தொழிலதிபர்கள். இவர்களில், கணேஷ் பா.ஜ.க வர்த்தகப் பிரிவில் பொறுப்பு வகிக்கிறார். பா.ஜ.க தலைவர்கள் எல்.முருகன், கருப்பு முருகானந்தம் ஆகியோர் கணேஷ் வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளனர்.

கணேஷ்- சுவாமிநாதன் இணைந்து கும்பகோணத்தில் விக்டரி பைனான்ஸ், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளிளிலும் பல தொழில்கள் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றையும் வைத்துள்ளனர். எப்போதும் ஹெலிகாப்டரிலேயே வலம்வந்ததால் `ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என்றே அழைக்கப்படுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், கணேஷின் மகன் அர்ஜுனின் முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோது, ஹெலிகாப்டரிலிருந்து பூக்களைத் தூவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

மேலும், ‘ஆம்புலன்ஸ் சேவைக்கும், சுற்றுலா செல்லவும் ஹெலிகாப்டர் வாடகைக்குக் கிடைக்கும்’ என நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து, ‘அர்ஜுன் ஏவியேஷன்’ என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களையும் வைத்து, அப்பகுதியினரை ஆச்சர்யப்பட வைத்துள்ளனர்.

கும்பகோணத்தை அதிரவைத்த ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’... பா.ஜ.கவை சேர்ந்த மோசடி கும்பலின் அதிர்ச்சிகர பின்னணி!

திருவாரூர் மாவட்டம் மறையூர் இவர்களுடைய பூர்வீக கிராமம் எனவும், சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் செட்டில் ஆனதாகவும் கூறப்படுகிறது. மேலும் கும்பகோணம் கொற்கை அருகே கிரிஷ் என்ற பெயரில் வெளிநாட்டு பசுமாடுகளை வைத்து பால் தொழில் செய்து வருவதும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும், வெளிநாடுகளிலும் தொழில் செய்து வருவதாகவும் எல்லோரிடத்திலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இவர்களது பைனான்ஸ் நிறுவனத்தில், முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பாகப் பணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவித்து, வர்த்தகர்கள், பொதுமக்களிடம் வசூல் செய்துள்ளனர். இதற்காக ஏஜென்ட்களை நியமித்து அவர்களுக்கு கமிஷனை அள்ளிக்கொடுத்து, கோடி கோடியாக முதலீட்டைப் பெற்றுள்ளனர்.

பலரும் கோடிக்கணக்கில் பணம் செலுத்திய நிலையில், கொரோனாவை காரணம் காட்டிய கணேஷ்- சுவாமிநாதன் பிரதர்ஸ், பணத்தை செலுத்தியவர்களுக்கு முறையாக பணம் வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.

மேலும், பணத்தை திருப்பிக் கேட்பவர்களிடம் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததுடன், பா.ஜ.க செல்வாகைப் பயன்படுத்தி அச்சுறுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா - பைரோஜ் பானு தம்பதியர், தஞ்சாவூர் எஸ்.பி-யிடம் கடந்த வாரம், கணேஷ்- சுவாமிநாதன் ஆகியோர் சுமார் 15 கோடி வரை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணத்தை அதிரவைத்த ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’... பா.ஜ.கவை சேர்ந்த மோசடி கும்பலின் அதிர்ச்சிகர பின்னணி!

இதற்கிடையே, `குடந்தையில் மெகா மோசடி’ என்ற தலைப்பில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நடத்திய நிறுவனம் மூலம் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றி ரூ.600 கோடி மெகா மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வியுடன் கும்பகோணம் நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தின.

இதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் சகோதரர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் வைத்திருந்த ஹெலிகாப்டர் சில மாதங்களாகவே எங்கு இருக்கிறது எனத் தெரியவில்லை என அப்பகுதியினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தனிப்படை போலிஸார், நேற்று முன்தினம் இரவு கணேஷ்- சுவாமிநாதன் நிறுவனத்தில் பணியாற்றும் மேனேஜர்களிடம் விசாரித்து ஸ்ரீகாந்தன் என்பவரை கைது செய்தனர்.

மேலும், நேற்று காலை கணேஷ் வீட்டில் போலிஸார் சோதனை நடத்தினர். இந்நிலையில் கணேஷ் - சுவாமிநாதன், ரகுநாதன், மீரா உள்ளிட்ட நான்கு பேர் மீது 406,420, 120பி என மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில் திருவிடைமருதூர் டி.எஸ்.பி அசோகன் தலைமையில் எஸ்.பி தனிப்படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையிலான போலிஸார் ஸ்ரீநகர் காலனியில் உள்ள கணேஷ் - சுவாமிநாதன் வீட்டில் இருந்த 12 சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories