தமிழ்நாடு

”நடைமுறைக்கு உகந்த திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்திடுக” - எரிசக்தித் துறைக்கு முதலமைச்சர் அறிவுரை!

புதிதாக கண்டறியப்பட்டுள்ள நீரேற்று புனல் மின் திட்டங்களில் நடைமுறைக்கு உகந்த திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்திட வேண்டும் என எரிசக்தித்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

”நடைமுறைக்கு உகந்த திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்திடுக” - எரிசக்தித் துறைக்கு முதலமைச்சர் அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (22.07.2021) தலைமைச் செயலகத்தில் எரிசக்தித்துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில், புதிதாக கண்டறியப்பட்டுள்ள நீரேற்று புனல் மின் திட்டங்களில் நடைமுறைக்கு உகந்த திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்திட வேண்டும் என்று அறிவுறுத்திய முதலமைச்சர் பசுமை வழித்தடம் இரண்டாவது பகுதியை அமைக்க புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையிடமிருந்து மானியத்தை விரைந்து பெற்று பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் நடைபெற்று வரும் மின் உற்பத்தி திட்டப் பணிகள் மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், மின் உற்பத்தி திட்டங்களை விரைந்து முடித்து செயலாக்கத்திற்கு கொண்டு வரும்படி அறிவுறுத்தினார். மேலும், 2010–ல் துவங்கி 11 ஆண்டுகளாகியும் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படாத இணை மின் உற்பத்தி திட்டங்களையும் விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.

நிலக்கரி பயன்பாடு மற்றும் பற்றாக்குறை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நிலக்கரி கையாளுவதில் ஏற்படும் போக்குவரத்து செலவீனங்களை குறைக்கவும், தமிழகத்திற்கு ஒப்பந்தப்படி கிடைக்க வேண்டிய நிலக்கரி சதவீதத்தை பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்படியும் அறிவுறித்தினார். மேலும், இறக்குமதி நிலக்கரியை வருடாந்திர ஒப்பந்தத்திற்கு பதிலாக நீண்டகால ஒப்பந்தங்களாக செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டிற்கு ஒப்பந்தப்படி வரவேண்டிய நிலக்கரியில் 71 சதவீத நிலக்கரியை மட்டுமே நம் அனல் மின் நிலையங்களுக்கு எடுத்து வர முடிகிறது. மீதமுள்ள நிலக்கரியையும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக சுரங்கங்களின் அருகே உள்ள அனல் மின் நிலையங்களுக்கு வழங்கி அதன் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்திற்கு கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு கடந்த 2 மாதங்களில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ரூ.1,593 கோடி சேமித்தது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார். மேலும் அனைத்து வகை செலவீனங்களையும் ஆராய்ந்து சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அதன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி நிலைமையை சரி செய்யவும் அறிவுறுத்தினார்.

மின் நுகர்வோர்களுக்கான சேவைகளை மேலும் மேம்படுத்த, நுகர்வோர்கள் அவர்களுடைய மின் அளவீடு மற்றும் கணக்கீட்டை தாங்களே தங்கள் கைபேசி செயலி மூலம் அறிந்து கொள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்துமாறும், மின் கணக்கீட்டாளர்கள் கைபேசி செயலியின் மூலம் மின் கணக்கீடு எடுத்தவுடனேயே நுகர்வோர்கள் தங்களின் கணக்கீட்டு விவரத்தை அறிந்துகொண்டு கட்டணத்தை செலுத்த ஏதுவாக புதிய செயலியை அறிமுகப்படுத்துமாறும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், மின் நுகர்வோர்களின் குறைகளை உடனுக்குடன் சரிசெய்யவும், அவ்வப்போது ஏற்படும் குறைந்த மின் அழுத்த குறைபாடுகளை சரி செய்யவும் திட்டங்களை வகுத்து செயல்படுத்த அறிவுறுத்தினார்.

எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வரைவு கொள்கை தயாரித்தல், மின்வாகன பயன்பாட்டை ஊக்குவித்தல், ஒருங்கிணைந்த சூரிய மற்றும் காற்றாலை பூங்காக்களை ஊக்குவித்தல் ஆகிய திட்டங்கள் குறித்தும், ஒன்றிய அரசின் KUSUM-C திட்டத்தின் கீழ் விவசாயிகளின் இலவச மின் இணைப்புடன் கூடிய இறைப்பான்களுக்கு சூரிய மின் மோட்டார் அமைக்கும் திட்டம் குறித்தும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மூலம் 20,000 மெ.வாட் உற்பத்தி இலக்கை அடைவதற்கான, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வரைவு கொள்கை தயாரிப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவித் திட்டங்கள் குறித்தும், பொதுமக்கள், அரசுத்துறை, அரசுசார் நிறுவனங்கள், இதர நிறுவனங்கள் மற்றும் அரசு நலத் திட்டங்களின் மூலம் திரட்டிவரும் வைப்பீடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மின் ஆய்வுத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மின் வரிவசூல் குறித்தும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒழுங்குமுறை விதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

banner

Related Stories

Related Stories