தமிழ்நாடு

"விரைவில் ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு" : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்!

அரசுப் பள்ளிகளின் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

"விரைவில் ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு" : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட வகுப்பறையைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். பின்னர் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார். அப்போது சிலம்பம் சுற்றிக் காண்பித்த மாணவிகளை அமைச்சர் பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை ஆய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதன் காரணமாக எங்கு செல்கிறோமோ அங்குள்ள பள்ளிகளை ஆய்வு செய்கிறோம்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. ஆசிரியர் பணிகளில் பணி நிரவல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. கொரோனா காரணமாக மே மாதம் நடைபெறும் பணி மாறுதல் கலந்தாய்வை இந்தாண்டு நடத்த முடியவில்லை. கொரோனா குறைந்து வரும் நிலையில் ஆசிரியர்களைப் பள்ளிக்கு வரவழைத்து இருக்கிறோம்.

முதலமைச்சரின் ஆலோசனை பெற்று விரைவில் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன் பிறகு எந்தெந்தப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறதோ அது சரி செய்யப்படும். கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உயர்தர ஆய்வகங்கள் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருக்கிறது. உயர்நிலைப் பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் கொரோனா காரணமாகப் பள்ளிகள் செயல்படாததால் பயன்பாடு இல்லாமல் மூடப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் கணினிகள் இயங்குகிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமிருந்து அதுகுறித்து அறிக்கை வந்த பின்பு இயங்காத கணினிகள் மாற்றப்படும்.

கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள் அக்டோபரில் தேர்வெழுதலாம். கொரோனா கட்டுக்குள் வந்தால் மட்டுமே அப்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு அந்த தேர்வும் நடத்தப்படும். அவ்வாறு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்றுச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். கொரோனா சூழலை ஆராய்ந்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற பின்பே தனித்தேர்வர்களுக்குத் தேர்வு நடத்த முடிவெடுக்கப்படும்.

பள்ளி இடைநிற்றல் குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். அந்த கணக்கெடுப்பு எடுத்த பின்பு ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பள்ளி இடைநிற்றலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories