தமிழ்நாடு

மக்களே உஷார்... சாலையோர வாசிகள் பெயரில் போலி சிம் கார்டு; லோன் தருவதாகக் கூறி டெல்லி கும்பல் நூதன மோசடி!

லோன் வாங்கித்தருவதாக கூறி ஆன்லைனில் பணத்தைப் பெற்று ஏமாற்றிய டெல்லியைச் சேர்ந்த மோசடி கும்பல் கைது.

மக்களே உஷார்... சாலையோர வாசிகள் பெயரில் போலி சிம் கார்டு; லோன் தருவதாகக் கூறி டெல்லி கும்பல் நூதன மோசடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை பெருநகரில் ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக புகார்களை புலனாய்வு செய்ததில் மோசடி பேர்வழிகள் டெல்லியிலிருந்து செயல்படுவதாக தெரியவந்தது. புகார்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின் பேரில் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையாளர் P.C.தேன்மொழி மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் G.நாகஜோதி, நேரடி கண்காணிப்பில் கூடுதல் துணை ஆணையாளர் R.பாண்டியன் வழிகாட்டுதலின்படி மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வுப்பிரிவு காவல் உதவி ஆணையாளர் S.பிரபாகரன் தலைமையில் ஆய்வாளர் R.புஷ்பராஜ் மற்றும் காவல் குழுவினர் அடங்கிய தனிப்படையினர் டெல்லியில் கடந்த 10 நாட்களாக முகாமிட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த ஜூன் 2020-ம் ஆண்டு பள்ளிக்கரணையை சேர்ந்த கனகலட்சுமி என்பவரிடம் லோன் வாங்கித் தருவதாக கூறி ரூ.82,000/- பணத்தை வங்கி கணக்குகளில் பெற்று ஏமாற்றிய டெல்லி ஜனக்புரியில் போலி கால் சென்டர் நடத்தி வந்த அசோக்குமார், அவரது மனைவி காமாட்சி, அவர்களுக்கு உடந்தையாக இருந்த ராஜ்வேல் மற்றும் அபிசேக்பால் ஆகியோரை கைது செய்து ரூ.8 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். புலன் விசாரணையில் மேற்படி கும்பல் பஜாஜ் பைனான்ஸ், வரலட்சுமி பைனான்ஸ், மற்றும் தமிழர் பைனான்ஸ் போன்ற வெவ்வேறு பெயர்களில் தொடர்பு கொண்டு லோன் பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

இவர்கள் பொதுமக்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தும் சிம் கார்டுகள் மற்றும் பணத்தை டெபாசிட் செய்ய சொல்லும் வங்கி கணக்குகளையும் தெருவோரம் இருப்பவர்கள், நிரந்தர முகவரி இல்லாதவர்கள் ஆகியோர்களிடம் ரூ.500 முதல் 20,000 பணத்தைக் கொடுத்து அவர்களின் பெயரில் சிம் கார்டுகள் மற்றும் வங்கிக் கணக்குகளை பெற்று அதை உபயோகித்து தங்களின் பெயர் விவரங்கள் வெளி வராமல் நூதனமாக மோசடி செய்து வருவது தெரியவந்தது.

இவர்களை டெல்லியில் 16.07.2021 அன்று கைது செய்து, துவாரகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று இன்று மத்திய குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இவர்கள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வசிக்கும் அப்பாவி பொதுமக்களிடம் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இந்த கும்பல் ஜியோ டவர் வைப்பதாக கூறி ஏமாற்றியுள்ளனரா என்ற கோணத்திலும் மத்திய குற்றப்பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முகம் தெரியாத, அறிமுகமில்லாத நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு லோன் வாங்கித் தருவதாகவோ, வங்கியிலிருந்து பேசுவதாக கூறி Reward Points அதிகரிப்பு, ஏ.டி.எம் கார்டு வேலிடிட்டி ரெனியுவல், கிரிடிட் கார்டின் உச்சவரம்பு அதிகரிப்பு KYC அப்டேட் போன்ற காரணங்களை சொல்லி வங்கிக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்ய சொன்னாலோ, ATM/Credit Card விவரங்கள் மற்றும் OTP எண்கள் கேட்டாலோ அவற்றை பகிரக்கூடாது என்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories