தமிழ்நாடு

“மேகதாது அணை கட்ட ஒப்புதல் இல்லை என உறுதி; மகிழ்ச்சியான சந்திப்பு” - அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஒன்றிய அமைச்சரை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருடனான சந்திப்பில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

“மேகதாது அணை கட்ட ஒப்புதல் இல்லை என உறுதி; மகிழ்ச்சியான சந்திப்பு” - அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஒன்றிய அமைச்சரை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருடனான சந்திப்பில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணையைக் கட்ட கர்நாடகா எடுத்துவரும் முயற்சியை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்தது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இக்குழுவின் தலைவர், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில், எல்லோரும் ஒட்டுமொத்தமாக டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து, கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று வற்புறுத்திவிட்டு வாருங்கள் என்று தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இன்று வந்திருந்தார்கள். ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து சுமார் 45 நிமிடத்துக்கும் மேலாக வாதங்களை எடுத்து வைத்தோம். இறுதியாக நாங்கள் இங்கு வந்துள்ள நோக்கத்தைத் தெளிவாகச் சொன்னோம். கர்நாடக அரசுக்கு எந்த வகையிலும் மேகதாது அணையைக் கட்ட துணைபோகக் கூடாது என்பதுதான்.

அதுமட்டுமல்லாமல் ஒன்றிய அரசு திட்ட அறிக்கை தயாரிக்க இங்குள்ள மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததைச் சுட்டிக்காட்டினோம். எந்த வகையிலும் மேகதாது அணை கட்ட முடியாத நிலை அவர்களுக்கு உள்ளது. காரணம் அவர்கள் திட்ட அறிக்கை தயாரிக்க என்னென்ன வகைகளில் நிபந்தனைகள் விதித்தோமோ அதில் எதையும் அவர்களால் செய்ய முடியவில்லை என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், 'திட்ட அறிக்கை வழங்க தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும், காவிரி ஆணையத்தின் முழு ஒத்துழைப்பைப் பெற வேண்டும், அதன் பின்னர் மத்திய நீர்வள ஆணையத்தின் அனுமதி பெற்று வர வேண்டும். இதையெல்லாம் கொண்டுவந்தால் அனுமதி தருவோம் என்று சொன்னோம்.

ஆனால் அவர்கள் அதை எதையுமே செய்யவில்லை, அவர்களாக நினைத்து அவர்களாக திட்ட அறிக்கையைத் தயாரித்து வந்துள்ளார்கள். அதனால் அது நடக்காது. அதனால் அவர்கள் திட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதனால் கர்நாடக அரசின் திட்டம் நிறைவேறாது' என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.

நாங்கள் வந்தது ஒருவகையில் வெற்றி என்று சொல்வோம். நீங்கள் அனுமதி கொடுப்போம் என்று சொன்னதாகச் சொன்னார்களே என்று கேட்டபோது எந்த வகையிலும் நாங்கள் அனுமதி அளிக்கவில்லை என்று திட்டவட்டமாகச் சொல்கிறோம் என்று ஒன்றிய அமைச்சர் சொன்னார்” எனத் தெரிவித்தார்.

ஒன்றிய அமைச்சரை சந்தித்து விட்டு சென்னை திரும்பும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருடனான சந்திப்பில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கை மேகதாது அணை கட்டக்கூடாது என்பதுதான். அதனை சந்திப்பின் வாயிலாக அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளோம்.

மேகதாது அணை கட்டுவதற்கான சரியான வழிமுறைகளை கர்நாடக அரசு செய்யவில்லை அண்டை மாநிலங்களின் ஒப்புதலைப் பெறவேண்டும் காவிரி ஆணையத்திடம் முழு ஒப்புதல் பெற்று வரவேண்டும். எனவே ஒன்றிய அரசின் நெறிமுறைகளை சரியாக கடைபிடிக்காததால் ஒன்றிய அரசு இதற்கு ஒப்புதல் அளிக்காது என நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்” எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories