முரசொலி தலையங்கம்

“மேகதாது அணையால் ஆபத்துதான்.. அதை எந்த வகையிலும் தடுத்தாக வேண்டும்” : முரசொலி தலையங்கம்!

“கர்நாடக அரசு கட்ட முயலும் மேகதாது அணையால் ஆபத்துதான். அதை எந்த வகையிலும் தடுத்தாக வேண்டும்.” எனக் குறிப்பிட்டு முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

“மேகதாது அணையால் ஆபத்துதான்.. அதை எந்த வகையிலும் தடுத்தாக வேண்டும்” : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (14-07-3021) தலையங்கம் வருமாறு:

உரிய தண்ணீரைத் தர மறுப்பது மட்டுமல்லாமல், அதைச் சதி செய்து தடுக்கும் முயற்சியிலும் கர்நாடக அரசு இறங்கி இருக்கிறது. மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு முழு முயற்சியில் இறங்கி 12.7.2021 அன்று அனைத்து சட்டமன்ற கட்சிக் கூட்டத்தை நடத்தி உள்ளது.

“உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப் படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப்பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தினை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்துவருவது கண்டனத்துக்குரியது.

இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் அனைத்து அமைச்சகங்களும் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறோம்”-என்று அனைத்து சட்டமன்ற கட்சிக் கூட்டம் எழுப்பியுள்ள குரல், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான குரல் ஆகும்.

இதன்பிறகும் கர்நாடக மாநில பா.ஜ.க அரசின் ஆணவம் அடங்கவில்லை. அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருக்கிற பசவராஜ பொம்மைய்யா, “மேகதாதுவில் அணையைக் கட்டுவதற்கு யாருடைய அனுமதியையும் கேட்கத் தேவையில்லை” என்று சொல்லி இருக்கிறார். கர்நாடகா என்பது உச்சநீதிமன்றத்துக்குக் கட்டுப்பட்ட மாநிலம் இல்லையா? தனித்தீவாக இருக்கிறதா? எதை வைத்து, ‘யாரையும் கேட்கத்தேவையில்லை’ என்கிறார் கர்நாடக அமைச்சர்?

“மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் சொல்வதைப் போல், எந்த நிலையிலும் சட்டப்படி அதைத் தடுத்தே தீருவோம் என்று சொல்வதற்கு எங்களுக்கும் உரிமை உண்டு” என்று சொல்லி இருக்கிறார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள். அத்தகைய சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னதாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் காரியத்தில் இறங்கி இருக்கிறார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. அந்தத் தீர்ப்பும், நமது உரிமையை முழுமையாக நிறைவேற்றும் நிறைவான தீர்ப்பாக இல்லை. தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய அளவைக் குறைத்து வழங்கும் தீர்ப்பாகத்தான் இருந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னது உச்சநீதிமன்றம். அதிகாரம் பொருந்திய அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத ஒன்றிய அரசு, அதனைத் தனது அரசுக்கு உள்பட்ட ஜல்சக்தித் துறையின் தொங்கு சதையாக அமைத்தது. இதுவே கர்நாடகாவுக்கு பயமற்ற தன்மையை உருவாக்கியது. இந்தத் துணிச்சலில்தான் மேகதாது அணைகட்டும் முயற்சியில் கர்நாடகம் இறங்கியது. கர்நாடக அரசு கட்ட இருக்கும் மேகதாது அணையின் வரைவுத் திட்ட அறிக்கைக்கு பா.ஜ.க அரசு அனுமதி வழங்கி, தமிழக விவசாயிகளின் வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சியது.

சிம்சா மற்றும் அர்காவதி ஆறுகள் காவிரியில் இணைந்த பிறகு தான் காவிரி, ஆழமான அதிகமான நீரோடையாகப் பாறை இடுக்குகளில் புகுந்துவருகிறது. இந்த ஆழமான நீரோடைகளை ஆடு கூடத் தாண்டலாம் என்பதால், இந்தப் பகுதி, கன்னடத்தில் ‘மேகதாது’ என்றும், தமிழில் ‘ஆடு தாண்டும் பாறை’ அல்லது ‘ஆடு தாண்டும் காவிரி’ என்றும் அழைக்கப்படுகிறது என்றும் எழுத்தாளர் எடையூர் பிரகாஷ் எழுதுகிறார். இதற்கான காரணம்’ கதை ஒன்றையும் அவர் சொல்கிறார்.

“முன்னொரு காலத்தில் அந்தப் பகுதியில் சிலர் ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்குவந்த ஒரு புலி உணவுக்காக, ஆடு ஒன்றைத் துரத்த ஆரம்பித்தது. இதனால் உயிர் தப்புவதற்காக அந்த ஆடு தலைதெறிக்க ஓடியது. அந்த வழியில் பாறைகளுக்கு இடையே குறுகிய அகலத்தில் பள்ளத்தில் ஓடிய காவிரி ஆறு குறுக்கிட்டது. புலியிடம் இருந்து எப்படியும் தப்பிவிட வேண்டும் என்ற வேகத்தில், அந்த ஆடு காவிரியைத் தாண்டி மறுபக்கம் குதித்தது. ஆனால், துரத்திவந்த புலி, காவிரியைத் தாண்டும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு ஏமாற்றத்துடன் வந்த வழியே திரும்பிவிட்டது. காவிரியை ஆடு தாண்டியதால்தான் அந்த இடம் ‘ஆடுதாண்டும் காவிரி’ என அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆடு தாண்டும் அளவுக்குக் குறுகலாக ஓடிய காவிரி, பல ஆண்டுகளாகப் பாறைகளில் ஏற்பட்ட அரிப்பின் காரணமாக, தற்போது அந்த இடத்தில் 10 மீட்டர் அகலத்தில் ஓடுகிறது. இந்தப் பகுதியோடு (ஆடு தாண்டும் பாறை காவிரி) கர்நாடகத்தின் எல்லை முடிவுற்று காவிரி, தமிழகத்தில் காலடி எடுத்துவைக்கிறது. கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் - சமவெளி, மலைப்பகுதிகளைக் கடந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலு என்ற இடத்தை வந்தடைகிறது” என்றும் அவர் எழுதுகிறார்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அணை கட்டினால், தமிழ்நாட்டுக்கு எப்படி தண்ணீர் கிடைக்கும்? பிலிகுண்டுலுவுக்கு முன்பே அதாவது கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுகிறது. பிலிகுண்டுலுவுக்கே தண்ணீர் வராது என்பதே உண்மை. அணையால் ஆபத்துதான். அதை எந்த வகையிலும் தடுத்தாக வேண்டும். இந்தப் பிரச்சினை பெரிதாகி விடக் கூடாது என்பதால், திசைதிருப்புவதற்காகச் செய்யப்படும் அனைத்துச் சதிகளையும் தடுத்தாக வேண்டும்!

banner

Related Stories

Related Stories