தமிழ்நாடு

“முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையை பின்பற்றுவது காலத்தின் கட்டாயம்” : ‘தினத்தந்தி’ நாளேடு வலியுறுத்தல்!

“முன்றாவது அலையை தடுத்திட இளைஞர் சமுதாயம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையை பின்பற்றுவது காலத்தின் கட்டாயம்” என ‘தினத்தந்தி’ நாளேடு தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.

“முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையை பின்பற்றுவது காலத்தின் கட்டாயம்” : ‘தினத்தந்தி’ நாளேடு வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதல்-அமைச்சரின் ஆலோசனையை எல்லோருமே பின்பற்றலாம் என்றாலும், 2-வது அலையின் கோரத் தாக்குதலுக்கு உள்ளாகிய இளைஞர் சமுதாயம் முழுமையாக பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், 3-வது அலையை வரவிடாமல் தடுத்துக்கொள்வதே இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என ‘தினத்தந்தி’ நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

‘தினத்தந்தி’ நாளேட்டில் வெளியாகியுள்ள தலையங்கம் பின்வருமாறு:-

15 மாதங்கள் முடிந்து 16-வது மாதமாகிவிட்டது, கொரோனா தமிழகத்தை தாக்கி. இந்தியாவை தாக்கி 18 மாதங்கள் ஆகிவிட்டது. முதல் அலையில் பாதிப்பு நன்றாக குறைந்த நிலையில், 2-வது அலை விஸ்வரூபம் எடுத்தது. கடந்த மார்ச் மாதம் மத்தியில் தொடங்கிய 2-வது அலை, உச்சத்துக்கு போனதன் காரணம் டெல்டா வகை கொரோனா தொற்றுதான்.

இந்த 2-வது அலை பாதிப்பு எப்படி இருக்கிறது?, யார் யாரை அதிகம் தாக்கியது?, என்ன அறிகுறி இருக்கிறது?, எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது? என்பது போன்ற பல அம்சங்களில் ஒரு விரிவான ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், எய்ம்ஸ் மருத்துவமனை, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை நடத்தியது. தங்கள் ஆய்வுகளுக்கு கொரோனா பாதிப்பு தொடர்பான தேசிய மருத்துவ பதிவேடுகளையே இந்த நிறுவனங்கள் பயன்படுத்தியது.

“முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையை பின்பற்றுவது காலத்தின் கட்டாயம்” : ‘தினத்தந்தி’ நாளேடு வலியுறுத்தல்!

இந்த ஆய்வின் முடிவுகள் இப்போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவுகளின் விவரங்கள் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது. ஏனெனில், முதல் அலையில் இளைஞர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முதல் அலையின் பாதிப்பு பெருமளவில் இருந்தது. அதனால்தான், தடுப்பூசிகூட முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே போடப்பட்டது. கடந்த மே மாதம் 1-ந்தேதி முதல்தான் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 2-வது அலையில் இளைஞர்கள்தான் பெரிதும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும், 20 வயதுக்கு உள்பட்டவர்களை தவிர, மற்றவர்களுக்கு உயிரிழப்பு அதிகமாகியிருக்கிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளில், எந்தெந்த வயது பிரிவினர், எந்தெந்த சதவீதத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்? என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 20 வயது முதல் 39 வயது வரையிலான நோயாளிகளின் எண்ணிக்கை, முதல் அலையின்போது 23.7 சதவீதமாக இருந்தது, இப்போது 26.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல், 40 முதல் 60 வயது வரை ஆய்வு செய்ததில், முதல் அலையில் 40 சதவீதமாக இருந்தது, இப்போது 41.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது மனநிறைவையளிக்கிறது.

முதல் அலையின்போது 32.5 சதவீதம் பேர் அனுமதிக்கப்பட்ட நிலைமாறி, இப்போது 27.8 சதவீதம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆக, மொத்தத்தில் வயதானவர்களின் பாதிப்பைவிட, இளைஞர்களின் பாதிப்பே அதிகமாக இருக்கிறது. இந்த 2 அலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குமே காய்ச்சல்தான் பொதுவான அறிகுறி என்றாலும், 2-வது அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம், ஆக்சிஜன் தேவை, நிமோனியா போன்ற இதய பிரச்சினைகள் இருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் உயிரிழந்ததும் 2-வது அலையில் 3.1 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

“முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையை பின்பற்றுவது காலத்தின் கட்டாயம்” : ‘தினத்தந்தி’ நாளேடு வலியுறுத்தல்!

இந்தநிலையில், தமிழக அரசு 2-வது அலையை முடிவுக்கு கொண்டுவந்து, 3-வது அலை வராமல் தடுப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் கொடுத்த வேண்டுகோள் போல, “கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதமும், கேடயமும் ஆகும். அதுபோல, தங்களை கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வீட்டைவிட்டு வெளியே வரும்போது எல்லோரும் முககவசம் அணியவேண்டும். கூட்டமாக கூடுவதை தவிர்க்கவேண்டும். பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போதும், அதிக கூட்டம் இருக்கும் இடங்களிலும் இரட்டை முககவசங்களை பயன்படுத்தலாம்” என்ற முதல்-அமைச்சரின் ஆலோசனையை எல்லோருமே பின்பற்றலாம் என்றாலும், 2-வது அலையின் கோரத் தாக்குதலுக்கு உள்ளாகிய இளைஞர் சமுதாயம் முழுமையாக பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், 3-வது அலையை வரவிடாமல் தடுத்துக்கொள்வதே இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories