ஒடிசா மாநிலத்தை சேர்ந்த உசோகொய் என்பவரது மனைவி பிளாச்சி. மனநலம் பாதிக்கப்பட்ட இவர் தனது குழந்தையுடன் நிறைமாத கர்பிணியாகவும் கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு தப்பி வந்து திருச்செந்தூர் பகுதிகளில் சுற்றி திரிந்து வந்துள்ளார்.
இதனை கண்ட பொதுமக்கள் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்து, பின்பு அந்த மன நலம் பாதிக்கப்பட்ட பெண்னையும் குழந்தையும் மீட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 2019-ம் ஆண்டே அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
அந்த குழந்தையினை தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரம் பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில், சமூக நலத்துறை மூலம் ஒப்படைக்கப்பட்டு பராமரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3-ஆண்டுகளுக்கு பிறகு அந்த மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் குணமடைந்து நிலையில், அந்த பெண்ணின் கணவர் உசோகொய் கண்டுபிடிக்கப்பட்டு அவரை ஒடிசா மாநில போலிஸார் தூத்துக்குடி அழைத்து வந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவரிடம் விசாரணை செய்து பின்பு, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை ஒப்படைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் சமூக நலத்துறையினர் அந்த குடும்பத்தினரை ஒடிசா காவல்துறையினருடன் அவர்களது மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக கடந்த 3-ஆண்டுகளுக்கு பின்பு இணைந்த தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கேக் வெட்டி கணவன், மனைவி, குழந்தைகள் ஆகியோருக்கு ஊட்டி தங்களது அன்பை வெளிபடுத்தி கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்ப்டுத்தியது.
மேலும் மாவட்டத்தில் 15 பேர் இதைபோல் பிற மாநிலத்தை சேர்ந்த பெண்கள் கண்டறியபட்டு காப்பகங்களில் உள்ளதாகவும் தற்போது கொரானா தளர்வுகள் அறிவிக்கபட்டுள்ளதால் விரைவில் அவர்களின் குடும்பத்தினரை கண்டறிந்து அவர்களை அவர்களது குடும்பத்தாரிடம் சேர்க்கும் பணி துவங்கபட உள்ளது என சமூக நலத்துறை மூலம் செயல்படும் பாதிக்கப்பட்ட பெண்களின் ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர் செலின் ஜார்ஜ் தெரிவித்தார்.